ஜெயலலிதா மிரண்டு போயிருக்கிறார் – மு.க.ஸ்டாலின் பேச்சு

குமரி மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் திறந்த வேனில் பிரசாரம் செய்தார்.

மாவட்ட எல்லையான களியக்காவிளையில் நேற்று மாலை பிரசாரத்தை தொடங்கிய அவர் காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி வேட்பாளர் விஜயதரணி, கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோரை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு ஆட்சிக்கு வந்தார். அதன்பிறகு கடந்த 5 வருடத்தில் அவர் இந்த பகுதிக்கு வந்தாரா? உங்களது (மக்களின்) குறைகளை கேட்டாரா? அவ்வளவு ஏன் இந்த மாவட்டத்துக்காவது வந்தாரா?. இந்த மாவட்டத்தை விட்டுவிடுங்கள், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்காவது அவர் சென்றது உண்டா?. ஆனால் ஒரே ஒரு மாவட்டத்துக்கு மட்டும் அவர் சென்று வருவார். அது நீலகிரி மாவட்டம். அங்குள்ள கோடநாடுக்கு அவர் ஓய்வெடுக்க செல்வார்.

மக்களைப்பற்றி கவலைப்படாத ஜெயலலிதா, தேர்தல் வந்து விட்டதால் மக்களை காண 4 நாட்களுக்கு ஒருமுறை, 3 நாட்களுக்கு ஒருமுறை தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார்.

நான் இதே குமரி மாவட்டத்தில் இருந்துதான் நமக்கு நாமே பயணத்தை தொடங்கினேன். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இந்த பயணத்தை தொடர்ந்தேன். அப்போது விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் என தமிழக மக்களை சந்தித்து பேசினேன்.

ஆனால் இன்று அ.தி.மு.க. வினராக இருக்கட்டும், அவர்களது வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளவர்களாகட்டும் தெம்போடும், துணிச்சலோடும் வாக்கு கேட்கும் நிலை இருக்கிறதா?. அமைச்சர்கள் எங்காவது தைரியமாக போய் மக்களை சந்தித்து ஆதரவு கேட்கும் நிலை உள்ளதா என்றால் இல்லை.

திருச்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா இந்த தேர்தலில் தி.மு.க. 2-வது இடத்துக்கு கூட வரமுடியாது என்று கூறியிருக்கிறார். நான் சொல்கிறேன், இந்த தேர்தலில் அ.தி.மு.க. 3-வது இடத்துக்குக்கூட வரமுடியாத சூழ்நிலை உள்ளது. மக்கள் உங்களையும், உங்களது கட்சியினரையும் விரட்டியடிக்கும் நிலை தமிழகத்தில் உருவாகியிருக்கிறது. அதனால் அவர் மிரண்டுபோய் பிரசார கூட்டங்களில் ஏதேதோ பேசி வருகிறார். எனவேதான் பிரசார கூட்டங்களில் பிறர்மீது பாயக்கூடிய அளவிலும், சீறக்கூடிய அளவிலும் அவருடைய பேச்சு இருக்கிறது.

பூரண மதுவிலக்கை தி.மு.க. சொல்லவில்லை என்று ஜெயலலிதா கூறி உள்ளார். மதுக்கடைகளை திறந்த ஜெயலலிதாவுக்கு, மதுக்கடைகளை மூடுவோம் என்று தி.மு.க. கூறும்போது ஆத்திரம் வருகிறது, கோபம் வருகிறது. டாஸ்மாக் மூலம் அரசே மது விற்பனை செய்வதற்கான உத்தரவு போட்டவரே ஜெயலலிதாதான் என்பதை நான் ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறேன். இதை ஜெயலலிதா துணிச்சல் இருந்தால் மறுத்துக்கூற முடியுமா? என்மீது வழக்கு போடட்டும். நான் தைரியமாக நீதிமன்றத்துக்கு வர தயாராக இருக்கிறேன்.

மதுவிலக்கு சட்டத்தை கொண்டு வருவோம் என்று சொல்லும் தகுதி தி.மு.க.வுக்கு இல்லை என்று சொல்ல ஜெயலலிதாவுக்கு தகுதி கிடையாது.

தமிழகத்தில் நல்லாட்சியை உருவாக்கித்தர நீங்கள் அத்தனை பேரும் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Leave a Response