பெங்களூரு திருக்குறள் மன்ற நூலகம் மீண்டும் செயல்பட உதவுங்கள் – அமைப்பாளர் வேண்டுகோள்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அல்சூரில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 1964-ம் ஆண்டு தமிழ் ஆர்வலர் நல்ல பெருமாள் என்பவரால் திருக்குறள் மன்றம் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் நூலகம் அங்குள்ள தாமோதர் முதலியார் தெருவில் 1976-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இந்த‌ நூலகத்தில் சுமார் 20 ஆயிரம் தமிழ் நூல்களும் ஆயிரக்கணக்கான சஞ்சிகைகள், நாளிதழ்கள், குறிப்பேடுகள், முக்கிய ஆவணங்கள் இருந்தன.

தொடக்கத்தில் சிறப்பாக செயல் பட்ட இந்த நூலகத்தில் ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர் களாக இருந்தனர். உலக பொதுமறையான திருக்குறளை தமிழில் இருந்து கன்னடத்தில் மொழிபெயர்த்து 1985-ம் ஆண்டு வெளியிட்டனர். பாவாணர் வரலாறு உட்பட தமிழ் மொழி யின் பெருமையை பறைசாற் றும் பல்வேறு நூல்களை வெளி யிட்டுள்ளனர். மக்களிடையே வாசிப்பு பழக்கம் குறைந்ததை அடுத்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நூலகம் மூடப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நூலகத்தின் முகப்பில் பெயர்ப் பலகையில் எழுதப்பட்டிருந்த தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்களை மர்ம நபர்கள் சிலர் தார் பூசி அழித்தனர். மேலும் அவ்வப்போது நூலக கட்டிடத்தை அபகரிக்கும் முயற்சியிலும் சிலர் ஈடுபட்டனர். திருக்குறள் மன்றத்தின் அமைப்பாளர் நல்ல பெருமாளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு நெருக்கடி கொடுத்தனர்.

இந்த நிலையில் கடந்த வியாழக் கிழமை சமூக விரோதிகள் நூலகத் தின் பூட்டை சட்ட விரோதமாக உடைத்து உள்ளே நுழைந்துள் ளனர். அங்கிருந்த மேஜை, நாற்காலி, ஜன்னல் மற்றும் மர பீரோக்களை அடித்து நொறுக்கி யுள்ளனர். பல்வேறு மரச்சட்டங் களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிய தமிழ் நூல்களை அருகில் உள்ள காலி இடத்திலும் வீதியிலும் வீசியுள்ளனர். சுமார் 20 ஆயிரம் நூல்களையும் சஞ்சிகைகளையும் முக்கிய ஆவணங்களையும் தூக்கி எறிந்துள்ளனர்.

இதனை நேரில் கண்ட சிலர் திருக்குறள் மன்றத்தின் அமைப்பாளர் நல்ல பெருமாளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த நல்ல பெருமாள் தான் கஷ்டப்பட்டு சேகரித்து, பாதுகாத்த நூல்கள் வீதியில் வீசி எறியப்பட்டதை கண்டு கண்ணீர் விட்டு அழுதார். இது தொடர்பாக அல்சூர் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்க சென்ற அவரை போலீஸார் அலைக்கழித்துள்ளனர்.

இதையடுத்து நேற்று முன் தினம் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் காவல் நிலையத் துக்கு சென்று புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீ ஸார் வழக்கு பதிவு செய்ய மறுத்துள்ளனர். எனவே பெங்களூரு மாநகர துணை காவல் ஆணையர் சதீஷ் குமாரை சந்தித்து முறையிட்டுள்ளார். இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு அல்சூர் காவலர்களுக்கு, சதீஷ் குமார் உத்தரவிட்டார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த‌ போலீஸார் வீதியில் வீசப் பட்ட நூல்களை சேகரித்து பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர்.

அரிய நூல்கள் மாயம்

இது தொடர்பாக திருக்குறள் மன்றத்தின் அமைப்பாளர் நல்லபெருமாள்  கூறியதாவது:

என் வாழ்நாள் முழுவதும் சேகரித்த அரிய நூல்கள், பல தமிழ் ஆர்வலர்கள் நன்கொடையாக வழங்கிய நூல்களை எல்லாம் திருக்குறள் மன்ற நூலக‌த்தில் வைத்திருந்தேன். சுமார் 20 ஆண்டுகள் செயல்பட்ட இந்த நூலகத்தால் எண்ணற்ற தமிழர்கள் பயன் அடைந்தனர். தொலைக்காட்சியின் தாக்கம் தொடங்கியதும் மக்களிடம் வாசிக்கும் பழக்கம் மங்கி போய்விட்டது. இதனால் நூலகம் மூடப்பட்டு செயல்படாமல் இருந்தது.

இந்நிலையில் நூலக கட்டிடத்தை அபகரிக்க சில சமூக விரோதிகள் முயன்றனர். பல ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் நூலகத்தை காலி செய்யும்படி சிலர் நெருக்க‌டி கொடுத்தன‌ர். இருப்பினும் எதற்கும் பயப்படாமல் நூலகத்தையும் அந்த இடத்தையும் பாதுகாத்து வந்தேன். இந்நிலையில் நூலக கட்டிட‌த்தின் கீழே உள்ள சரஸ்வதி சபாவை சேர்ந்த பிரபு என்பவர் நூலக நூல்களை எல்லாம் வீதியில் வீசி எறிந்துள்ளார். நூலகம் சூறையாடப்பட்டதில் பல அரிய நூல்கள் மாயமாகி இருக்கின்றன. ஆயிரக்கணக்கான நூல்களை பொதுமக்கள் சிலர் அள்ளி கொண்டுபோய் உள்ளனர். திருக்குறள் மன்ற நூலகத்தை காப்பாற்றவும் மீண்டும் செயல்பட வைக்கவும் தமிழ் அமைப்புகளும், ஆர்வலர்களும் உதவ வேண்டும்” என்றார்.

தமிழ் அமைப்புகள் கண்டனம்

அனைத்திந்திய தமிழ்ச் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம், கர்நாடக திராவிடர் கழக தலைவர் ஜானகி ராமன், தமிழர் முழக்கம் பத்திரிகையின் ஆசிரியர் வேதகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கோலார் தங்கவயலில் தமிழ் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

Leave a Response