இந்த சூழ்ச்சி ஆட்சியை விரட்டியடிப்பேன் – கருணாநிதி பேச்சு

தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னையில் நேற்று முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுவதற்காக கோபாலபுரம் இல்லத்தில் இருந்து மாலை 4.25 மணிக்கு கருணாநிதி புறப்பட்டார்.

தி.மு.க. வேட்பாளர்களான மா.சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை), தா.மோ.அன்பரசன் (ஆலந்தூர்), நடிகர் வாகை சந்திரசேகர் (வேளச்சேரி), தனசேகரன் (விருகம்பாக்கம்), அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்) ஆகியோரை அறிமுகம் செய்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த 5 ஆண்டு கால ஆட்சிக்கு பரிகாரமாக நீங்கள் தரப்போகும் பரிசு வெற்றி என்ற நம்பிக்கையோடு ஒரு சில கருத்துகளை உங்களிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். கடந்த 5 ஆண்டு காலமாக இந்த நாட்டில் நடப்பது என்ன என்பது உங்களுக்கு தெரியும். எந்த காரணத்தினால் இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்கள், இந்த நாட்டிலே ஆள்வதற்காக மக்களின் வாழ்வை சுரண்டி, மக்களை பற்றி கவலைப்படாமல் தங்களை பற்றியே கவலைப்படுகிறார்கள். தங்களுக்காகவே இந்த ஆட்சி இருக்கிறது என்று ஆணவம், அகம்பாவத்துடன் நடத்தும் தர்பாரில் என்ன நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் ஏற்பட்ட வெள்ள சேதத்தை கூட பார்வையிட வராத முதல்-அமைச்சர் தான் நமக்கு கிடைத்து இருக்கிறார். அதை அவர்களால் தடுக்கவும் முடியவில்லை.

மற்ற எதிர்க்கட்சிகளும், நாமும் எடுத்துரைத்தும் கூட அவர்களுக்கு வெள்ள பாதிப்பு தெரியவில்லை. சென்னையில் வெள்ளம் வந்தால் தடுக்க முடியவில்லையே என்று நாங்கள் தவித்தோம். நம்முடைய கட்சி நிர்வாகிகளை அனுப்பினோம். மக்களை காப்பாற்றும் அளவுக்கு தமிழகத்திலே ஒரு செயல்படாத அரசு, மக்களை பற்றி கவலைப்படாத அரசு நடக்கிறது.

தி.மு.க. தோழர்கள், செயல்வீரர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கடந்த புயல் வெள்ளத்தின்போது தமிழ்நாட்டிலேயே எந்த அளவுக்கு பணியாற்றினார்கள் என்பதை நீங்கள் கண்கூடாக பார்த்தீர்கள். நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த முதல்-அமைச்சர் தூங்கிக்கொண்டிருந்தார். விழித்துக்கொள்ளவில்லை. விழித்துக்கொண்டிருந்த நாம் கவலையுடன் பரிதவித்த போது அவர்கள் உல்லாசமாக இருந்தார்கள். என்னை பொறுத்தவரையில் பக்கத்திலேயே உள்ள கிராமங்களுக்கு சென்று அவர்களின் பிரச்சினைகளை அறிந்து அவர்களுக்காக பாடுபட்டோம். சுயநலத்திற்காக இதை நான் சொல்லவில்லை. பொது நலத்தில் இருப்பவர்கள் மக்களை பற்றி கவலைப்பட வேண்டும். மக்களை பற்றிய கவலை அவர்களுக்கு கிடையாது. தன் குடும்பத்தில் உள்ள சில பேருக்காக ஆட்சியை நடத்துகிறார்கள்.

மக்களை ஏமாற்றிக்கொண்டு அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க இங்கு யாரும் இல்லை. அவர்களுடைய ஆட்சியால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. செம்பரம்பாக்கம் ஏரி உடைந்தபோது 100-க்கு மேற்பட்டவர்கள் இறந்தார்கள். அந்த கொடுமைகளை ஏன் என்று கேட்கவில்லை. அத்தகை கொடுங்கோல் ஆட்சி தான் நடந்தது.
அவர்களும் இன்று மக்களை சந்தித்து எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டு வந்து இருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு மீண்டும் வாக்களித்தால் மீண்டும் செம்பரம்பாக்கங்கள் உருவாகும். அதில் பிணங்கள் மிதக்கும். அந்த பிணங்கள் மிதக்கவா? அவர்களுக்கு மீண்டும் வாக்களித்து சிம்மாசனத்தில் உட்கார வைக்க வேண்டும் என்பதை எண்ணி பாருங்கள். நாம் நமக்காக வாழவில்லை. நாட்டிற்காக வாழ்பவர்கள். அண்ணாவும், பெரியாரும் நாட்டிற்காக வாழ்ந்தார்கள். அவர்கள் ஆற்றிய பணியை நாம் தொடர வேண்டும். தமிழகத்தில் எத்தனையோ முறை வெள்ளம், புயல் வந்து இருக்கிறது. இந்த மகாராணி மட்டும் நான் வெளியே கிளம்ப மாட்டேன். ஹெலிகாப்டரில் தான் கிளம்புவேன் என்கிறார்.

மக்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி கவலைப்படாத ஒரு மகாராணியின் ராஜியத்தை எவ்வளவு நாளைக்கு தான் அனுபவிப்பது. அதனால் தயவு செய்து, நான் கேட்பது நாடு வாழ, ஏதோச்சதிகாரம் அதிகாரத்தை எத்தனை நாளைக்கு அனுபவிப்பது நம்முடைய தோழர்கள், தம்பிமார்கள், தொண்டர்கள் அவ்வளவு பேரும் நாசக்கார ஆட்சிக்கு விடை கொடுக்க வேண்டும். உங்களுடைய பதற்றத்தை என்னால் உணர முடிகிறது. நான் சக்தி அற்றவனாக இருக்கிறேன். அந்த சக்தியை எனக்கு தாருங்கள். வரும் தேர்தலில் எனக்கு அதை நீங்கள் வழங்க வேண்டும். அந்த சக்தியை பயன்படுத்தி இன்றைக்கு நடைபெறும் சூழ்ச்சி ஆட்சியை விரட்டி அடிப்பேன். தி.மு.க. ஆட்சி அமையும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response