கருணாநிதிக்கு மதுவிலக்கு கொண்டுவரும் எண்ணமே இல்லை – ஜெயலலிதா பேச்சு

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 9-ந்தேதி முதல், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பரப்புரை செய்து வருகிறார்.

அதன்படி, 7-வது நாளான நேற்று ( ஏப்ரல் 23 )திருச்சி பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த 67 வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

அப்போது,

மதுவிலக்கைப் பற்றி இப்பொழுது அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி சில கருத்துகளை நான் சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். எனது தலைமையிலான அ.தி.மு.க., எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும். முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும். கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும். குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் லட்சியத்தை நாம் அடைவோம்.

தி.மு.க.வினர் மதுவிலக்கு அமல்படுத்தப் போவதாக பொய்யான வாக்குறுதியை அளித்து வருகின்றனர். முந்தைய தி.மு.க. ஆட்சியின் போது மது விற்பனை இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்தது. இவர்களா மதுவிலக்கை கொண்டு வரப்போகிறார்கள்? அப்படி மதுவிலக்கை கொண்டு வரும் எண்ணம் இருந்தால் ஏன் “பூரண மதுவிலக்கு” பற்றி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் எதுவும் சொல்லவில்லை?.கடந்த 18-4-2016 அன்று நான் காஞ்சீபுரத்தில் பேசும்போது, “பூரண மதுவிலக்கு பூரண மதுவிலக்கு” என்றும் “முதல் கையெழுத்தே மதுவிலக்கை அமல்படுத்தும் கையெழுத்து தான்” என்றும் கூறி வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, தங்களது தேர்தல் அறிக்கையில் “பூரண” என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்தவில்லை என்றும் முதல் கையெழுத்து என்பது என்னவாயிற்று என்றும் கேட்டேன்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக, மூதறிஞர் ராஜாஜி இருந்த போது தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 என்று ஒரு சட்டம் வந்தது என்றும், மதுவிலக்குக்கு தனி சட்டம் என்றாலே பூரண மதுவிலக்கு தான் என்று அர்த்தம் என்றும் விதண்டாவாதம் செய்துள்ளார் அவரது தனயன்.

தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 என்பது தான் தற்போதும் உள்ள சட்டம் என்பதை தி.மு.க.வினர் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த சட்டத்தில் உள்ள காப்புரைகளின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ள பல்வேறு விதிகளின் படி அதாவது, ரூல்ஸ் படி தான் தற்போது பூரண மதுவிலக்கு இல்லாமல் இருக்கிறது. எனவே, பூரண மதுவிலக்கு கொண்டுவர இந்த விதிகளை நீக்கறவு செய்து ஒரு அரசாணை வெளியிட்டாலே போதுமானது. இதற்கு எந்த புதிய சட்டமும் தேவையில்லை. ஒரே ஒரு கையெழுத்து மூலம் அரசாணை வெளியிடப்பட்டு பூரண மதுவிலக்கு கொண்டு வர முடியும்.

அவ்வாறு செய்வோம் என்று உறுதி அளிக்காமல், புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்றும், மது விற்பனையிலிருந்து அரசு விலகும் என்றும் குறிப்பிட்டிருப்பது, தனியார் கிளப்புகள் மூலம் மது விற்பனையைத் தொடர்வதற்குத் தான் என்ற குற்றச்சாட்டை நான் மீண்டும் சுமத்துகிறேன்.

கருணாநிதிக்கு மதுவிலக்கை கொண்டு வரும் எண்ணமே இல்லை. மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரிக்க முடியுமா என்பதற்காகவே, இதுபோன்ற ஒரு வாக்குறுதியை அவர் அளித்துள்ளார்.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

Leave a Response