நூலகம் சூறை, கர்நாடகத் தமிழர்களின் பொறுமையை சீண்டாதீர் – தமிழ்ச்சங்கத்தலைவர் எச்சரிக்கை

தமிழர்களின் அறிவுத் தேடலை யாராலும் சிதைக்க முடியாது என தங்கவயல் தமிழ்ச் சங்கத் தலைவர் சு.கலையரசன் தெரிவித்தார்.

கோலார் தங்கவயலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை முன் சனிக்கிழமை திருக்குறள் மன்ற தமிழ் நூலகம் சூறையாடப்பட்டதைக் கண்டித்து, தங்கவயல் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் சு.கலையரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், கோலார் தங்கவயல் முதநிலை கல்லூரி முதல்வர் கிருஷ்ணகுமார், கர்நாடக மாநில அண்ணா தொழிற்சங்கச் செயலரும், நகர்மன்ற முன்னாள் உறுப்பினருமான மு.அன்பு, வழக்குரைஞர் திருவரங்கம், தலித் ரக்ஷனவேதிகே தலைவர் அன்பரசன், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அப்போது சு.கலையரசன் பேசியது: தமிழர்களின் வாழ்வியல் இலக்கியம் சார்ந்ததாகும். சிந்துவெளி நாகரிக காலத்தில் இருந்தே தனிநாகரிகத்தை பேணி வந்துள்ள தமிழ்ச் சமூகம், அனைத்து வகையான மத, மொழி, இன மக்களை மதித்து வந்துள்ளது. தமிழர்களின் இலக்கியம் உலகின் தொன்மையானவையாக போற்றப்பட்டு வருகிறது. அறிவு வளர்ச்சியை தடை செய்தால், அந்த சமூகத்தின் வளர்ச்சியை மழுங்கடித்துவிடலாம் என்ற நோக்கத்தில் தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சியைத் தடுக்க முற்பட்டுள்ளனர்.

இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் கொடுங்கோலன் அடால்ஃப் ஹிட்லர், உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் இல்லத்தில் இருந்த நூலகத்தை அடித்து நொறுக்கியதோடு, நூல்களை தெருவில் கொட்டி எரித்தான். அதேபோல, பெங்களூரில் 40 ஆண்டுகாலமாக செயல்பட்டு வந்த திருக்குறள் மன்றத்தின் தமிழ் நூலகத்தை சூறையாடியதோடு, அங்கிருந்த 10 ஆயிரம் தமிழ் நூல்களை தெருவில் வீசிய செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழ் நூல்களை அழிப்பதன் மூலம் தமிழர்களின் அறிவுத் தேடலை சிதைத்துவிடலாம் என்று ஒருசிலர் பகல் கனவு காண்கின்றனர். தமிழர்களின் சிந்தனையாற்றலை யாராலும் சிதைக்க முடியாது. தமிழ் நூலகம் தாக்கப்பட்டுள்ளதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில், கர்நாடக மாநில சிறுபான்மையினர் ஆணையம் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக தமிழர்களின் பொறுமையை யாரும் சீண்டிப் பார்க்கக் கூடாது என்றார்.

Leave a Response