சொகுசு காரு தெருவுல, விவசாயி தூக்குல – சமூக அவலங்களைத் தோலுரிக்கும் ஜோக்கர் படம்

ஜோக்கர் படத்தின் பாடல் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பற்றிய செய்தித் தொகுப்பு…..

அரசியல்வாதிகள் முதல் உச்சநட்சத்திரங்கள் வரை குறிவைப்பது ஆறுகோடி பாமர மக்களைத்தான் என்று இயக்குநர் ராஜீமுருகன் மேடையில் சொல்லி ஆதங்கப்பட்டதலிருந்தும்,எங்களுக்கு தைரியத்தைவிட அக்கறை அதிகமிருந்ததால் தான் இப்படத்தை எடுத்தோமென தயாரிப்பாளர் பிரபு சொன்னதிலிருந்தும், ஜோக்கர் படக்குழுவினரின் உழைப்பை முன்னோட்டம் வழியாகக் கண்டதிலிருந்தும் இப்படம் சமூக நோக்கத்திற்கானது என அறியமுடிகிறது.அதுவே படத்தை பார்க்கும் ஆவலை தூண்டியுள்ளது.பாடல்களும் முன்னோட்டமும் கூட அதையே தான் செய்துள்ளது.

முன்னோட்டத்தில் வரும் “வாழ்றது தான் கஷ்டம்னு நெனச்சோம்..இப்ப பேள்றதையும் கஷ்டமாக்கிட்டானுங்க”…”ஒருத்தியோட அன்புக்குச் சமமானதா ஒலகத்துல ஒண்ணுமேயில்ல” போன்ற வசனங்கள் பொளேரென அறைந்துவிட்டு பின் யோசிக்கவைக்கிறது.

சமூகத்திலோ அல்லது தனிநபர் வாழ்விலோ மாற்றத்தை ஏற்படுத்துவதே ஒரு கலைஞனுக்கான பணி.இயக்குநர் அதை வெகு சிறப்பாய் செய்திருப்பதாக நம்புகிறேன்.அதற்கு எண்ணங்களின் அடிப்படையிலும்,தொழில் ரீதியாகவும் முழு ஒத்துழைப்பை தந்திருக்கிறார் காட்சிப்படுத்துதலில் கதை சொல்லும் ஔிப்பதிவாளர் செழியன்.

இந்தக் குரல்களெல்லாம் கேட்காத குரல்களல்ல கேட்கப்படவேண்டிய குரல்கள் என்று நாட்டுப்புறக் கலைஞர்களாகிய ராணியம்மா,பெருமாள்,சுந்தரய்யர்,அறந்தை பவா,மற்றும் முருகவேல்,லலிதா சுதா ஆகியோரை அறிமுகப்படுத்தி பேசவைத்தும் பாடவைத்தும் யாருக்கான விழாவோ அதை சிறப்பாய் செய்துமுடித்தனர் இசையும் இயக்கமும்.அதிலும் ராணியம்மாளின் எதார்த்தம் நிறைந்த அன்பான பேச்சு அனைவரையும் கட்டிப்போட்டது.

முக்கியமாக நிகழ்ச்சியைத் தொகுக்க கண்டதைப் பேசும் தொகுப்பாளர்களை போட்டு இம்சிக்காமல் தயாரிப்பாளர் பிரபுவே செய்தது சிறப்பு.தயாரிப்பாளர் என்ற எந்த ஆடம்பர போர்வையும் போர்த்திக்கொள்ளாமல் அவரது வெகு எதார்த்தமான பேச்சும் தொகுப்பும் வெகுசிறப்பு.

மக்களை வதைக்கும் மக்களுக்கான தேசத்தில் ஊரெல்லாம் சுற்றி மக்களைப்பற்றி மனம்குமுறி “‪‎அவன்_இன்று_எனக்குள்ளே‬
‪#‎நான்_இன்று_உனக்குள்ளே‬ என்று மக்களின் பிரதிநிதியாய்,அதேசமயம் பாரபட்சமின்றி எல்லோரை நோக்கியும் கேள்விக் கணைகளைத் தொடுத்திருக்கும் இயக்குநர்‪#‎ராஜீ_முருகனின்‬ உழைப்பைக் கொண்டாடியேயாக வேண்டும். எல்லாக் கட்சிகளும் பொய்களையே பரப்பரையாக்கி திரியும் வேளையில் தேர்தலுக்கு முன் படம் வெளியானால் மக்களை யோசிக்கவைக்கும் ஆயுதமாக ‪#‎ஜோக்கர்‬இருப்பான்.எப்படியாயினும் ஜோக்கர் மக்களை விழிப்படைய வைப்பான்.சமூகத்தின் மத்தியில் ராசா மாதிரி விவாதமாவன்.

பாடல்களிலிருந்து சில வரிகள்…

“வேர்வையில நூலெடுத்து சேல நெய்ஞ்சு நான் தருவேன்…
வெக்கப்பட்டு நீ சிரிச்சா கட்டிக்குவேன்…
‪#‎கூடி_கலைஞ்ச_பிறகும்_எம்பாசம்_ஊறுதே‬..”ஆசை தீர வாழ்ந்தா மறு ஜென்மம் தேவையா?.”

“நல்லோர் கண்டு நகைத்தீரோ…
வீழ்வோம் என்று நினைத்தீரோ…
ஒருவர் வீழ்ந்தால் இருவர் முளைக்கிறோம்
கேள்வி கேட்க உன்னையும் அழைக்கிறோம்
“#அவன்_இன்று_எனக்குள்ளே
#நான்_இன்று_உனக்குள்ளே
வீதிக்கு வா தோழா!……”

“”காதோரம் தேமலிருக்கு
உன் காலெல்லாம் பித்தவெடிப்பு
கழுவாதமூஞ்சி எந்தன் அழகாக ஏந்தி வந்தேன்
உன் எத்துப்பல்லு நித்திரைய கொல்லுதடி””

“”ரேசன் அரிசி புழுவுல

வல்லரசுக் கனவுல தேசம் போறபோக்கப் பாத்தா தேறாதுங்க முடிவுல…
‪#‎கருத்து_சொல்லமுடியல_கருப்புபணமும்_திரும்பல‬ஆளுக்காளு நாட்டாமதான் பார்லிமென்ட் நடுவுல…
சொகுசு காரு தெருவுல ‪#‎விவசாயி_தூக்குல‬

இப்படியாக அனைத்துப் பாடல்களிலும் எளிய மக்களின் வலிகளையும்,அன்புகளையும்,ஏக்கங்களையும் சுமந்திருக்கிறது யுகபாரதி மற்றும் ரமேஷ்வைத்யாவின் வரிகளும் ஷான் ரால்டனின் இசையும்.

தமிழில் பெயர்வைத்து வரிசலுகை வாங்கிவிட்டு முயற்சி என்றோ தியாகமென்றோ சொல்லும் தயாரிப்பாளர்களுக்கு மத்தியில்,இயக்குநரின் தயாரிப்பாளராய் மாறி,வரிச்சலுகையை கூட துச்சமென தூக்கியெறிந்து விட்டு, அக்கறைப்பட்டோம் செய்துள்ளோம் என்று சொல்லிய ட்ரீம் வாரியர்ஸ் இப்படைப்பில் வென்று மேலும் மேலும் அக்கறைப்படவும்,படக்குழுவினரின் உழைப்பு வெல்லவும்,ஜோக்கர் மக்களின் ராசாவாக வலம் வரவும் வாழ்த்துகள்.
-ஜெபி.தென்பாதியான்

Leave a Response