பெங்களூரில் நடந்த கொடுமை – திருக்குறள் மன்ற நூலகம் சூறை: 10 ஆயிரம் தமிழ் நூல்கள் வீதியில் வீசப்பட்டன

பெங்களூரில் திருக்குறள் மன்ற நூலகத்தை சமூக விரோதிகள் சூறையாடிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அந்த நூலகத்திலிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் வீதியில் வீசியெறியப்பட்டன.
பெங்களூரில் தமிழர்கள் அதிக அளவில் வசித்துவரும் அல்சூர் பகுதியில் உள்ள தாமோதர் முதலியார் தெருவில் அமைந்துள்ளது திருக்குறள் மன்றத்தின் தமிழ் நூலகம். 1976-ஆம் ஆண்டு முதல் இங்கு செயல்பட்டுவந்த நூலகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழந்தமிழ் இலக்கிய நூல்கள், புதினங்கள், காவியங்கள் உள்ளிட்டவை இருந்தன.
இந்நிலையில், இந்த தமிழ் நூலகத்தின் பூட்டை உடைத்து வியாழக்கிழமை அதிகாலை உள்ளே நுழைந்த சமூக விரோதிகள் சிலர், அங்கிருந்த மரச் சட்டங்கள், ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். மேலும், அங்கிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை அவர்கள் வீதியில் வீசியெறிந்தனர்.
இதுகுறித்து தகலறிந்து நூலகத்துக்கு விரைந்த திருக்குறள் மன்ற நிறுவனரும், நூலகப் பொறுப்பாளருமான நல்லபெருமாள், 40 ஆண்டு காலமாக சேகரித்த நூல்கள் வீதியில் வீசப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து நல்லபெருமாளும், “தமிழர் முழக்கம்’ இதழின் ஆசிரியர் வேதகுமாரும் அல்சூர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தனர்.
இருவரையும் மாலை 6 மணி வரை அலைக்கழித்த போலீஸார், அதன்பிறகு புகாரைப் பெற்றுக் கொண்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர்.
பின்னர், இந்த விவகாரம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தச் சம்பவம் பெங்களூரில் தமிழ் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக தமிழ்-கன்னட கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் ஐ.எம்.எஸ்.மணிவண்ணன், கன்னடர்-தமிழர் நல்லிணக்கம் மற்றும் சமூக நற்பணி அறக்கட்டளைத் தலைவர் ராமசந்திரன் உள்ளிட்டோர் நல்லபெருமாளை வெள்ளிக்கிழமை சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்து, காவல் நிலையத்தின் மேலதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நல்லபெருமாள், தினமணி நிருபரிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
திருக்குறள் மன்றத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த நூலகத்தில் அரிய பல நூல்கள் உள்ளன. 1985-ஆம் ஆண்டிலேயே கன்னடத்தில் திருக்குறளை வெளியிட்டிருக்கிறோம். இதுபோல, பல நூல்களை வெளியிட்டிருக்கிறோம்.
இங்கு 40 ஆண்டு காலமாகச் செயல்பட்டுவந்த தமிழ் நூலகத்தை காலி செய்யும்படி ஒரு சிலர் அடிக்கடி மிரட்டி வந்தனர். அதைப் பொருள்படுத்தாமல் நூலகத்தை நடத்தி வந்தேன்.
தமிழ் நூலகம் செயல்படுவதை சகித்துக் கொள்ள முடியாத சிலரே இந்தச் செயலைச் செய்துள்ளனர். திருக்குறள் நூலகத்தைக் காப்பாற்ற தமிழர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்றார் அவர்.

Leave a Response