மார்க்கெட் இழந்த முன்னாள் நடிகை நீங்கள் – ஜெயலலிதாவை போட்டுத்தாக்கும் சீமான்

நாம் தமிழர் கட்சி சார்பில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார்.

ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், ”அற்ப வெள்ளத்தில் மக்களை காப்பாற்ற வக்கற்ற அரசு இது. இவர்கள் அணு உலை வெடித்தால் எப்படி மக்களை காப்பார்கள். இறந்த பிணத்தை புணர்ந்த சிங்களர்களின் கொடூரத்தை கண்டுகொள்ள மறுத்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர். அவர்களின் துரோக செயலுக்கு துணை போனவர்கள் தி.மு.க-வினர். இதனை மறந்துவிடாமல் கவனத்தில் வைத்து கொண்டு இந்த தேர்தலை அணுக வேண்டும்.

தெற்கு ஆசியத்தில் தமிழனுக்கு நாடு இல்லை. ஆனால், அரசு இருக்கிறது. அதுதான் தமிழ்நாடு அரசு. ஆனால் இந்த அரசில் தமிழனின் சாவை பற்றி பதிவு செய்யக்கூட ஒரு தலைவனும் இல்லை. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் இருந்து எல்லை தாண்டும் மீனவர்கள் சுடப்படுவதில்லை, சிறைபிடிக்கப்படுவதில்லை. ஆனால், தமிழன் என்பதற்காக நம் மீனவர்களை சிறைபிடிக்கிறான், சுட்டு கொல்கிறான் சிங்களன். எல்லை தாண்டி செல்லும் மீனவர்கள் பேராசைக்காரர்கள் என்றார் கலைஞர். அதே கலைஞர் இன்று மீனவர்களுக்கு 5 லட்சம் வீடு கட்டி தருவதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறார். கடந்த ஆட்சியில் இதனை ஏன் நீங்கள் செய்யவில்லை?

சேதுபதி மன்னனின் சொத்தான கச்சதீவினை மீட்போம் என சொல்லும் தி.மு.க, கச்சதீவு கொடுத்தது கொடுத்ததுதான் என சொல்லும் காங்கிரஸுடன் கூட்டு வைத்திருக்கிறது. அவர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு எப்படி கச்சதீவை மீட்பார்கள். கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் இருக்கும் ஒரே கனவு தமிழர்களை எப்படியாவது ஆள வேண்டும் என்பதுதான். 94 வயதிலும், 70 வயதிலும் ஒரு தாத்தாவும், பாட்டியும் மறுபடியும் மறுபடியும் நம்மை ஆள துடிக்கிறார்கள். மீத்தேன் எரிவாயுவை எடுக்க அனுமதித்தது தி.மு.க, அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் ஜெயலலிதா. இப்போது மீத்தேன் எரிவாயு எடுக்க அனுமதிக்க மாட்டோம் என சொல்கிறார்கள்.

மீத்தேன் எரிவாயுவை எடுப்பதை தடுப்பது அப்புறம், முதலில் நீங்கள் 50 ஏக்கர் விவசாய நிலங்களில் தார் ரோடு போட்டு அங்கே ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதை நிறுத்துங்கள். இதுவரை இருந்து வரும் தி.மு.க, அ.தி.மு.க இனி இருக்காது. அதுதான் புரட்சி. குடிக்கிற தண்ணீரை வியாபாரம் ஆக்கிய ஒரே அரசு தமிழ்நாடு அரசு. அது எப்படி உருப்படும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்வேன் என்கிறார்கள். விவசாயிகளை கடனாளியாக ஆக்கியது யார்? கல்வி கடனை தள்ளுபடி செய்வேன் என்கிறார்கள். கடன் பெற்று கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்தியது யார்? இதற்கு காரணமான கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் நாம் தள்ளுபடி செய்ய வேண்டும்.

மதுவுக்காக பல போராட்டங்களை நடத்தியாச்சு. இந்த பயல்கள் சொல்லி நாம் கேட்க வேண்டுமா என்ற திமிர். அந்த திமிர் எங்கிருந்து வந்ததும்மா. எங்கள் ஆத்தா, அப்பன், இங்க இருக்கிற அண்ணனும், தம்பியும் தான். நாங்க ஒத்த விரலால் ஓட்டுப்போடு உயர்த்தலனா நீங்க மார்கெட் இழந்துபோன முன்னாள் நடிகை. உங்களை ஒருபய சீண்டமாட்டான். அரிசிக்கும், பருப்புக்கும், வேட்டிக்கும், சேலைக்கும் கையேந்தி நிற்கும் இந்த பிச்சைக்கார பயலுங்க போட்ட பிச்சைதான் உங்க முதலமைச்சர் பதவி.

இனி ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்படும் அதிகாரம் சசிகலாவிற்கு கொடுக்கப்படும் அதிகாரமாகத்தான் இருக்கும். கருணாநிதிக்கு கொடுக்கப்படும் அதிகாரம் அவரது மனைவிகள், பிள்ளைகளுக்கு கொடுக்கப்படும் அதிகாரமாகத்தான் இருக்கும். இந்த நிலையை புரிந்து கொண்டு உங்கள் பிள்ளைகளுக்கு இரட்டை மெழுகுவத்தி சின்னத்தில் வாக்களியுங்கள்’’ என்றார்.

Leave a Response