இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பில்லை – உலக செய்தியாளர் அமைப்பு சொல்கிறது

சர்வதேச அளவில் பத்திரிகை சுதந்திரம் தொடர்பான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 180 நாடுகளில் இந்தியா 133-வது இடத்தில் இருக்கிறது.

2016-ம் ஆண்டுக்கான சர்வதேச பத்திரிகை சுதந்திரம் தரவரிசைப் பட்டியலை ஆர்.எஸ்.எப் (எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு) வெளியிட்டுள்ளது.

இந்த தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2-வது, 3-வது இடங்களை முறையே நெதர்லாந்து, நார்வே நாடுகள் பிடித்துள்ளன.

கடந்த 2015-ல் 136-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 133-வது இடத்தில் உள்ளது.

பட்டியலுடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் பத்திரிகையாளர்களும், வலைபதிவர்களும் எளிதில் மத அமைப்புகளால் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.

இந்திய அரசால் பதற்றமான பகுதியாக காணப்படும் காஷ்மீர் போன்ற மாநிலங்களை பத்திரிகையாளர்கள் எளிதில் அணுக முடிவதில்லை.

இந்தியாவில் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் மிரட்டல்களையும், சவால்களையும் பிரதமர் நரேந்திர மோடி கண்டு கொள்ளாதவராகவே இருக்கிறார். இந்தியாவில் பத்திரிகையாளர்களை பாதுகாக்க போதிய வழிவகைகள் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக சுதந்திரம் பட்டியலில் அமெரிக்கா 44-வது இடத்திலும், ரஷ்யா 148-வது இடத்திலும் உள்ளன.

Leave a Response