எஸ்.பி.வேலுமணி சி.வி.சண்முகத்தை சேர்க்க விஜய்கட்சியினர் எதிர்ப்பு – விவரம்

ஆட்சியமைக்க அறுதிப்பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறார் விஜய்.ஆனாலும்,தனிப்பெரும்பான்மையைப் பெற்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டு,அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

அதற்கேற்ப,அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள்,தங்கள் பதவியிலிருந்து விலகியிருக்கிறார்கள்.விலகிய கையோடு விஜய் கட்சியில் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை ஏழுபேர் அவ்வாறு விலகி விஜய் கட்சியில் சேர்ந்துள்ளனர்.

ஆனால்,இன்னும் சிலரை பதவி விலக வைக்கும் திட்டத்தில் இருக்கிறார்கள்.அதற்காக மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில்,அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோரும் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகி தவெகவில் சேரத் தயாராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால்,அவர்களை விஜய்கட்சியில் சேர்க்காமல் இருக்கிறார்கள்.

ஏன்?

எஸ்.பி.வேலுமணியைச் சேர்க்க அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு விருப்பம் இல்லையாம்.ஏனெனில் அதிமுகவில் இருந்தபோது,தன்னை முன்னால் போகச் சொல்லி ஊக்கம் கொடுத்துவிட்டு பின்னால் வராமல் ஏமாற்றிவிட்டார் என்பதும் கட்சியை விட்டே வெளியேற்றியபோதும் வெளிப்படையாகக் குரல் கொடுக்கவில்லை என்பது மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் பேசவில்லை என்பதால் அவர் மீது கடும்கோபத்தில் இருக்கிறாராம்.

அதனால்,எஸ்.பி.வேலுமணியை இப்போது தவெகவில் சேர்க்கக்கூடாது என்று கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறாராம்.

அதேபோல்,சி.வி.சண்முகத்தைச் சேர்க்க புஸ்ஸி ஆனந்த் விரும்பவில்லையாம்.சி.வி.சண்முகத்தைக் கட்சியில் சேர்த்துவிட்டால் அவருடைய ஆதிக்கம் அதிகமாகிவிடும்,தவெக தொண்டர்கள் அனைவரும் அவர் பின்னால் சென்றுவிடுவார்கள்,எனவே அவரைச் சேர்க்கக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்துவருகிறாராம்.

இதனால்,அவர்கள் இருவரையும் விஜய் கட்சியில் சேர்க்காமல் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதேநேரம்,கே.ஏ.செங்கோட்டையன்,புஸ்ஸி ஆனந்த் ஆகிய இருவரையும் சமாதானம் செய்து எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோரை விஜய் கட்சியில் இணைக்கும் முயற்சியும் நடந்துவருகிறதாம்.

விரைவில் இந்தச் சிக்கலுக்கு ஒரு முடிவு வரும்.இருவரும் விஜய் கட்சியில் சேருவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம்.

– அரசன்

Leave a Response