சி.எம் சார்…பதில் சொல்லுங்க – சூலூர் பெண் ஆவேசம்

நடிகர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்த பிறகு,கிருஷ்ணகிரி மாவட்டம்,ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் டெம்போ டிராவலரில் சித்ரவதை செய்து பலாத்காரம் செய்யப்பட்டார்.சென்னை மெரினா கடற்கரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்யப்பட்டார். புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.திருவண்ணாமலையைச் சேர்ந்த சிறுமி ஓடும் லாரியில் வைத்து கூட்டுபலாத்காரம் செய்யப்பட்டார்.இதுபோன்று 10 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடந்துள்ளன

கோவையில் மாணவி கொடூர படுகொலையைத் தொடர்ந்து,தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மவுனத்தைக் கண்டித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள் ஊடகங்களுக்கு முன்னால் கதறி அழுது ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர்.

பெண்கள் எல்லாரும் ஏமாந்த சோணகிரிகள் கிடையாது,10 மாதம் கருவில் சுமந்து பெற்றெடுத்த அந்த வலி, யாருக்குத் தெரியும்? எங்கள் குழந்தைகளுக்கு ஒன்று என்றால் நாங்க சும்மா விடமாட்டோம் என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு கொந்தளித்த அந்தத் தாயைப் பார்த்து அருகில் இருந்தவர்களும் கண்ணீர் விட்டனர்.

உங்களை திறமையான ஆள் என்றும்,சினிமாவைபோல நிஜவாழ்விலும் ஹீரோவாக இருப்பீர்கள் என்றும் நம்பித்தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் இந்த வெற்றியைத் தந்து முதலமைச்சராக்கினோம்;நீங்கள் சினிமாவில் காட்டும் வீரத்தையெல்லாம் இப்போது நிஜஆட்சியில் மக்கள் முன்னிலையில் காட்டவேண்டும், எங்களுக்கு நீதி வேண்டும்.உடனடியாக குற்றவாளிகளுக்கு மரணதண்டனை பெற்றுத்தராவிட்டால் கோவையில் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என ஆவேசமாக முழக்கமிட்டனர்.

சூலூர் காவல் நிலையம் முன்பு மக்கள் மறியலில் ஈடுபட்டு இருந்தனர். நள்ளிரவு 12 மணி அளவில் சூலூர் தொகுதி தவெக சமஉ சுகுமார் ஆதரவாளர்களுடன் 5 மகிழுந்துகளில் காவல்நிலையம் சென்றார்.

அப்போது மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் சமஉவின் வண்டியை மட்டும் காவல்நிலையம் செல்ல அனுமதித்தனர். உடன்வந்தவர்களை ‘திரும்பிப் போ’ என முழக்கமிட்டுத் திருப்பி அனுப்பினர்.காவல்துறையினரிடம் பேசிவிட்டு வந்த சமஉ சுகுமார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசவந்தார்.அதையும் அவர்கள் ஏற்கமறுத்து அவரை அங்கிருந்து விரட்டினர்.

சிறுமி கொலை குறித்து அவரது உறவுக்காரப் பெண் ஆவேசமாகக் கூறியதாவது….

சிறுமியைக் காணவில்லை என புகார் அளித்ததும் சூலூர் போலீசார் விரைந்து செயல்பட்டிருந்தால்,இக்கொலை நடந்திருக்காது.போலீசார் அலட்சியமாகச் செயல்பட்டதால் இந்தக் கொடூரக் கொலை நடந்துள்ளது.வழக்குப்பதிவு செய்துள்ளோம் எனக்கூறி, நீண்டநேரம் இழுத்தடித்துவிட்டனர்.சிறுமியின் உடலைக் கைப்பற்றிய பிறகுதான், எங்களது புகார்மனு தொடர்பாக கையெழுத்துப் பெற்றனர்.சம்பவம் நடந்த நாளில் இருந்து தொடர்ந்து,எங்களது மகளின் நிலை குறித்து கேட்டபோது,உங்கள் மகள் பத்திரமாக உள்ளார்,நாங்கள் மீட்டுவிட்டோம்.எங்களிடம்தான் உள்ளார் என பொய்சொல்லி எங்களை ஏமாற்றினர்.
சிறுமி பிரேதமாக மீட்கப்பட்டார் என்ற செய்தி ஊடகங்களில் பரவிய பிறகுதான் எங்களுக்கு உண்மை நிலை தெரியவந்தது.அப்போதும்கூட போலீசார் எங்களிடம் உண்மையைச் சொல்லவில்லை.சிறுமியின் உடலை இஎஸ்ஐ மருத்துவமனையில் நேரில் பார்வையிட்டபோது எங்களுக்கு மயக்கமே வந்துவிட்டது.சிறுமியின் முகம் கொடூரமாக சிதைக்கப்பட்டிருந்தது.கல்லால் தாக்கப்பட்டு,முகம் கோரமாகக் காட்சியளித்தது.முதுகெலும்பை உடைத்து, தலைமுடியால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.
நாட்டில் மாற்றம் நடக்கவேண்டும்,பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கவேண்டும் என நாங்கள் விஜய்க்கு வாக்களித்தோம்.ஆனால்,இப்பதான் கொடுமையே அதிகமாக நடக்கிறது.இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய், இதுவரை ஆறுதல்கூட கூறவில்லை.எங்களது குடும்பத்தினரிடம் போனிலும் பேசவில்லை.இதுகுறித்து வீடியோ பதிவிட்டு முதல்வர் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கவேண்டும்.அதையும் அவர் செய்யவில்லை.ஆனால்,அவரது சுயநலத்துக்காக மட்டும் சோஷியல் மீடியாவை பயன்படுத்துகிறார்.முதல்வரின் செயல்,எங்களுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சூலூர் சிறுமி கொலை வழக்கில் அவரது பக்கத்துவீட்டில் வசிக்கும் கார்த்திக் (33), இவரது நண்பர் மோகன்ராஜ்(35) ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறுமியுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அளித்த தகவலின்படி,கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டு சிக்கியுள்ளனர்.சிறுமி காணாமல் போனதை அறிந்ததும் பெற்றோர்,உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடினர்.அப்போது சிறுமியுடன் விளையாடிய சகசிறுவர்கள்,சிறுமியை கார்த்திக் அழைத்துச் சென்றதாகத் தகவல் தெரிவித்தனர்.அப்போது சிறிதுநேரம் கழித்து எதுவும் நடக்காததுபோல் அங்கு வந்த கார்த்திக், அப்பகுதி மக்களுடன் சேர்ந்து,அவரும் சிறுமியைத் தேடுவதுபோல் நடித்துள்ளார்.

மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது….

இவ்வழக்கு,சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை தொடர்புடையது என்பதால்,வழக்கில் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.முதல்தகவல் கிடைத்தவுடன் போலீசார் மேற்கொண்ட துரிதமான நடவடிக்கை காரணமாக 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும்,பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு விரைவாக அரசின் நிவாரண உதவித்தொகை கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறுமி கொலை எவ்வாறு நிகழ்ந்தது என்பது பிரேத பரிசோதனை அறிக்கையைப் படித்த பின்னரே தெரியவரும். டாக்டர்களின் அறிக்கையின்படி குற்றவாளிகள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சிறுமி மாயமானது குறித்து தகவல் கிடைத்தவுடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.சிறுமியைக் கண்டுபிடித்துக் கொடுத்து விடவேண்டும் என்ற நோக்கத்தில் இரவு முழுவதும் கிட்டத்தட்ட 250 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது.அதில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்தது.நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் கார்த்தி கைது செய்யப்பட்டார்.

கார்த்தி, மோகன்ராஜ் ஆகியோர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளனர்.இருவரும் நெருங்கிய நண்பர்கள்.இக்கொலை குறித்து தகவல் தெரிந்தும் மோகன்ராஜ் போலீசாரிடம் மறைத்துள்ளார்.இந்த வழக்கு போக்சோ வழக்கு என்பதால் சமூகவலைதளங்களில் பரப்பவேண்டாம்.கார்த்தி மீது பழைய வழக்குகள் எதுவும் இல்லை.அவர் தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.சிறுமியை போலீசார் உயிருடன் மீட்டதாகவும், பின்னர் அவர் இறந்துவிட்டதாகவும் பொதுமக்கள் கூறிவருவது தவறான தகவல்.குற்றவாளிகள் ஊரைவிட்டுத் தப்பிச்செல்வதற்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளனர்.இக்கொலையின்போது,இரு குற்றவாளிகளும் போதையில் இல்லை.இவ்வழக்கில்,விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு ஐ.ஜி. ரம்யா பாரதி கூறினார்.

இவ்வழக்கில்,கைது செய்யப்பட்ட முதல்குற்றவாளி கார்த்திக்,கை,கால் உடைந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர்மீது போக்சோ,கொலை,பாலியல் வன்புணர்வு உள்பட 7 பிரிவுகளின்கீழ் சூலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், கோவை போக்சோ நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள், நேற்று கோவை அரசு மருத்துவனைக்கு நேரில் சென்று,கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினார்.பின்னர்,ஜூன் 5 ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.இதையடுத்து,காவல்துறை பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இக்கொடூர சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் தமிழ்நாடு காவல்துறை கூடுதல் டிஜிபி மகேஷ்வர்தயாள் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.பின்னர்,சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.அடுத்த சிலமணி நேரத்தில் டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

அவரும்,சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.இவர்களுடன்,மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி ஆகியோரும் சென்றனர்.இக்கொடூரக் கொலையில் இரண்டு குற்றவாளிகள் ஈடுபட்டனர்.இருவரும் கைது செய்யப்பட்டுவிட்டனர் என்ற தகவல் கிடைத்ததும் டிஜிபி மற்றும் கூடுதல் டிஜிபி இருவரும் அடுத்தடுத்து சென்னை புறப்பட்டுச் சென்றனர்.

இக்கொடூரச் செயல் குறித்து சிறுமியின் தாய் கூறியதாவது….

கடந்த வியாழக்கிழமை மாலை 5 மணிக்குக் கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு மகள் சென்றாள்.அங்கு அவளுக்கு மிட்டாய் வாங்கிக்கொடுத்து அழைத்துச் சென்றுள்ளனர்.என் மகளை அழைத்துச் சென்றவர்,என் பக்கத்துவீட்டில் குடியிருந்துவிட்டு,அண்மையில் காலி செய்தவர்.சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது அவர்தான் எனது மகளை அழைத்துச்சென்றது தெரியவந்தது.குற்றவாளிகளை போலீசார் கைதுசெய்ய முனைப்புகாட்டி வந்த வேளையில், அவரும் எங்களுடன் சேர்ந்து எனது மகளைத் தேடினார்.சிசிடிவி கேமரா காட்சி,அவரைத் தெளிவாகக் காண்பித்து கொடுத்துவிட்டது.எனது மகளின் சாவுக்குக் காரணமான இரண்டு கொடியவர்களுக்கம் கொடூர தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு கண்ணீர் மல்கக் கூறினார்.

கோவை சூலூரில் கொலைசெய்யப்பட்ட சிறுமி உடல் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள்,பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் மருத்துவமனை முன்பு குவிந்தனர்.அப்போது பெண்கள் ஆவேசமாக தமிழக அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.பெண் ஒருவர் கூறுகையில்,சூலூர் தொகுதியில் 34 ஆயிரம் வாக்குகளை உங்ககட்சிக்கு (தவெக) அளித்தோம்.

நீங்கள் ஆக்‌ஷன் ஹீரோ போல்,ஏதாவது செஞ்சிருவீங்க என்றுதான் ஓட்டுப்போட்டோம்.ஆனால் நீங்கள் இந்த சம்பவத்துக்கு பதில் கூறவில்லை.பெண்கள்,குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை.இதேபோல்,இனியும் ஒரு பெண்ணும்,குழந்தையும் பாதிக்கப்படக்கூடாது.இதேநிலை தொடர்ந்தால்,கோவை மட்டுமல்லாது,தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்.மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்கிறீர்கள்.ஆனால் புதுசா ‘வீரன்’ என்ற சரக்கு வந்துள்ளது.இதனை குடித்துவிட்டு சட்டமன்றத்தில் பேசமுடியுமா? இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.ஆணுறுப்பை அறுக்கவேண்டும்.சுட்டுக்கொல்ல வேண்டும்.உங்களுக்கு, உங்களது சகோதரிக்கு பிறந்தால்,குழந்தையைக் கொஞ்சுறீங்க.மற்றவர்களுக்கு பிறந்த பெண்குழந்தையையும் அப்படித்தான் பார்க்கவேண்டும்.எங்க,பச்சபுள்ள என்னங்க பண்ணுச்சு,சி.எம் சார்…பதில் சொல்லுங்க… என ஆவேசமாகப் பேசினார்.

இதனால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Response