கொழும்பு மருத்துவமனையில் தமிழகத்தமிழர்களின் சிறுநீரகம் திருட்டு – சிங்கள மருத்துவர்கள் கைது

இலங்கைக்கு சுற்றுலா அழைத்துச் சென்று தமிழர்களின் சிறு நீரகங்களை திருடியதாக கொழும்பு நகரில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவில், சிறு நீரக தானம் செய்வதற்கான சட்ட, திட்டங்கள் கடுமையாக்கப்பட்டதால் பணத்தாசை காண்பித்து ஏழைகளின் சிறுநீரகங்களை திருடும் கும்பல்களின் நடமாட்டம் பக்கத்து நாடான இலங்கைக்கு இடம் பெயர்ந்தது. இவர்களை இலங்கைக்கு அழைத்துச் சென்று சிறுநீரகங்களை திருடும் தொழில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மும்முரமாக நடந்து வருவது தற்போது அம்பலமாகி இருக்கிறது.

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் பன்டோலி கிராமத்தைச் சேர்ந்த அமீர் மாலிக் என்பவரை அண்மையில் அவருடைய நண்பர்கள் டெல்லிக்கு அழைத்து சென்று அவருக்குத் தெரியாமலேயே ஒரு மருத்துவமனையில் ஒரு சிறுநீரகத்தை அகற்றி விட்டனர். இதுபற்றி தெரிந்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார். தனது கிராமத்தில் தன்னைப்போலவே ஒரு சிறுநீரகத்தை பறிகொடுத்து 13 பேர் வசிப்பதும் அவருக்கு தெரிய வந்தது. இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார்.

காவல்துறையினர் விசாரணையில் இறங்கிய பிறகுதான் சிறுநீரகத் திருட்டில் சங்கிலித் தொடர் போல் ஒரு பெரிய கும்பலே ஈடுபடுவது தெரியவந்தது. அதுவும் இவர்கள் கடல் கடந்து இந்த தொழிலில் ஈடுபடுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கும்பல் தமிழ்நாடு, குஜராத், தெலுங்கானா மாநிலங்களில் ஏழைகளிடம் தங்களது கைவரிசையை காட்டி உள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா அழைத்துச் செல்கிறோம் என்ற பெயரில் ஏழைகளை அழைத்துக் கொண்டு போய் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இந்த கும்பல் அனுமதிக்கிறது. அதே நேரம் சிறுநீரகம் தேவைப்படுகிறவர்களும் அந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள்.

இரு தரப்பினரின் ரத்த மாதிரியையும் பரிசோதித்து யாருக்கு சிறுநீரகம் பொருந்தும் என்பதை அறிந்து சுற்றுலாவாசிகளின் சிறுநீரகம் அகற்றப்படுகின்றன. சிறுநீரக தானம் செய்தவர்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலும், ஏஜெண்டாக செயல்படுகிறவர்களுக்கு கமிஷனாக ரூ.5 லட்சம் வரை கொடுக்கப்படுகிறது.

இப்படி சிறுநீரகங்களை தானம் கொடுப்பதற்காக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 200–க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு, தெலுங்கானா, குஜராத் மாநிலங்களில் இருந்து இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டு இருப்பதை அண்மையில் இந்திய நுண்ணறிவு போலீசார் கண்டு பிடித்தனர். குறிப்பாக தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் இருந்து மட்டும் 60–க்கும் மேற்பட்டோரும், சென்னையில் இருந்து ஏராளமானோரும் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இலங்கை அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டது.

இதனால் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு இலங்கை அரசு கடந்த ஜனவரி மாதம் தடை விதித்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.

ஆனால், இந்த தடையையும் மீறி சமீபத்தில் தமிழ்நாட்டில் இருந்து கொழும்புக்கு பலர் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குள்ள தனியார் மருத்துவமனைகளில் அவர்களது சிறுநீரகங்கள் அகற்றப்பட்டன. இதுபற்றி கொழும்பு போலீசாருக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களை திருடியதாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் குஜராத் போலீசார் 4 ஏஜெண்டுகளை கைது செய்தனர்.

கொழும்பில் 4 தனியார் மருத்துவமனைகளுக்கும், 6 மருத்துவர்களுக்கும் சிறுநீரகத் திருட்டில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

சிறுநீரகத் திருட்டுக்கு உதவி செய்யும் இந்திய கும்பலில் மருத்துவர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஈடுபட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Response