மதுரையில் இறந்த ஈழ அகதி. அப்போது நடந்தது என்ன? உண்மை அறியும் குழுவின் முழுமையான அறிக்கை

கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை உச்சப்பட்டி அகதிகள் முகாமில் இலங்கை அகதிகளின் நல்வாழ்விற்காக அகதியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்குப் பின்பு அமைக்கப்பட்ட அனைத்திந்திய மக்கள் மன்றம் – மக்கள் சிவில் உரிமைக் கழகம்  உண்மை அறியும் குழு அகதிகளையும் அதிகாரிகளையும் சந்தித்தது. தனது பரிந்துரைகளை இன்று அளித்தது.

தேர்தல் நெருங்கும் இந்த ரேநத்திலாவது தமிழர் உணர்வுகளை அரசியலாக்கி வந்த அரசியல் கட்சிகள் இலங்கை அகதிகள் நிலை குறித்து தங்கள் நிலைபாட்டை அறிவிக்க வேண்டும்.

இலங்கை அகதிகளுக்கு அவர்கள் விருப்பத்தை அறிந்து இந்திய குடி உரிமையை அரசு உடனே வழங்க வேண்டும்.

அதற்கு முன்னதாக அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் Q பிரிவு காவல்துறையை அகதிகள் முகாமிலிருந்து வெளியேற்ற வேண்டும்.

உடனடியாக பல்வேறு சீர்திருத்தங்களை முகாம்களில் நடைமுறைபடுத்த வேண்டும்.

தன்னைப் பலியாக்கி அகதிகள் பிரச்சனையை வெளிக்கொண்டு வந்த இரவீந்தரன் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிவாரணம் அத்துடன் Haemophilia உடல் குறைபாட்டால் நரக வாழ்க்கை வாழும் அவரின் மகனின் மருத்துவச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை குழு முன் வைத்தது.

ஜெயா தொலைக் காட்சியைத் தவிர பிறரும், பிரதான ஊடகங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

12-03-2016

உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் 06.03.2016 அன்று தன்னுயிரை நீத்துக் கொண்ட திரு. இரவீந்திரன் அவர்களின் மரணம் குறித்தும் உச்சப்பட்டி அகதிகள் முகாம் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்ட உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை:
உண்மை கண்டறியும் குழுவில் பங்குபெற்றவர்கள்:

1. முனைவர். R. முரளி (PUCL) – அமைப்பாளர், உண்மை கண்டறியும் குழு
2. திரு. C. மதிவாணன் (CPI ML)
3. முனைவர். திருமதி. சாந்தா, முன்னாள் பேராசிரியர், (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்)
4. திரு.A. ரபீக் ராஜா (இளந்தமிழகம் இயக்கம்)
5. முனைவர்.S.தினகரன் (விலங்கியல் துறை பேராசிரியர், மதுரைக்கல்லூரி)
6. திரு. J. அருண் (AISA)
7. திரு. M. ஹரி பிரசாத் (மாணவர்)

மதுரைக்கு அருகே தோப்பூரை ஒட்டி அமைந்துள்ளது உச்சப்பட்டி அகதிகள் முகாம். இந்த முகாமில் சுமார் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஏறக்குறைய 1500 பேர் உள்ளனர். இம்முகாமில் உள்ளவர்களில் ஒருவரான திரு. இரவீந்திரன் என்பவர் மார்ச் மாதம் ஆறாம் தேதி உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பத்தில் ஏறி, உடலில் மின்சாரம் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார் என்பது மனித நேயம் கொண்டவர்களுக்கும் மனித உணர்வு கொண்டவர்களுக்கும் மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவமாகும். எனவே இதுகுறித்து உண்மை கண்டறிய மேற்கண்ட குழுவினர் 09.03.2016 அன்று மாலை உச்சப்பட்டி முகாமிற்குச் சென்று அங்கு சேகரித்த தகவல்களைச் சேகரித்தனர். பின்னர், 11.03.2016 அன்று மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களை அவரின் அலுவலகத்தில் சந்தினர். இவற்றின் அடிப்படையில் தகவல்களைத் தொகுத்து அளிப்பதுடன் குழுவினரின் பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்குகிறோம்.

சம்பவம் பற்றிய விபரங்கள்:

சுமார் 45 வயது மதிக்கத்தக்க திரு. இரவீந்திரன் என்பவர் 1990இல் உச்சப்பட்டி அகதிகள் முகாமுக்கு அனுப்பப்பட்டார். இவருடைய மனைவியின் பெயர் மஞ்சுளா. இவர்களுக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இதில் இரண்டு மகள்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. இதில் கடைசி மகன் பிரதீபன் 13 வயதானவர். இவருக்கு ஹீமோபீலியா எனும் இரத்த ஒழுகல் நோய் உள்ளது. இந்நோய் வந்தவருக்கு தொடர் சிகிச்சை அவசியம். ஆயிரக்கணக்கான ரூபாய் விலையுள்ள ஊசியை (சுமார் ரூ.12000) வாரம் தோறும் அச்சிறுவனுக்குப் போட வேண்டும். இதற்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் பிரதீபன் தொடர்ந்து பல வருடங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். பலசமயங்களில் மருத்துவமனையில் வாரக் கணக்கில் தங்கி சிகிச்சை பெற நேரிட்டுள்ளது. இம்மாதிரியான இரத்த ஒழுகல் நோய், இறந்து போன இரவீந்திரனின் மகள் வயிற்றுப் பேரனுக்கும் தற்போது உள்ளது என்பது சோகமான விசயம்.

கடல் சார்ந்த தொழில் அறிந்தவர் இரவீந்திரன். எனவே அவர் கடல் தொழிலுக்கு அடிக்கடி சென்று சம்பாதிக்க வேண்டிய நிலை. அரசு வழங்கிவரும் உதவித்தொகை அகதிகளுக்கு போதாத நிலை உள்ளது. ஆண்களுக்கு ரூ. 1000/-, பெண்களுக்கு ரூ. 750/-, குழந்தைகளுக்கு ரூ. 350/- என வழங்கப்படும் உதவித் தொகை மட்டுமே அகதிகளுக்கு வாழ்வதற்கு போதுமான தொகையாக இல்லை என்பதால் அவர்கள் பலவித கூலி வேலைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இரவிந்திரன் தன் மகனைப் பார்த்துக் கொள்வதற்காக அடிக்கடி மருத்துவமனையில் தங்க வேண்டிய நிலையும் இருந்தது.

முகாமில் உள்ளவர்களுக்கு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை அவர்கள் இருப்பை சோதிப்பதற்காக இருப்புப்பதிவு எடுக்கப்படும். இவ்வாறு எடுக்கப்படும் நாட்களில் முகாமில் உள்ள அனைவரும் (முதியோர் முதல் கைக்குழந்தை வரை) பொது மைதானத்தில் கூட வேண்டும் என்பது வழக்கம். சிறைச்சாலையில் ஒவ்வொரு பெயராக அழைத்து கைதிகள் உள்ளனரா என்று சோதிப்பது போல் இவர்களும் உள்ளனரா என்று சோதிப்பது வழக்கமாம். அச்சமயத்தில் ஒரு நபர் முகாமில் இல்லை என்றாலும், காலதாமதமாக வந்தாலும் அவர் பெயர் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும் என்ற அச்சுறுத்தலை அதிகாரிகள் மூலம் இவர்கள் எதிர்கொள்கிறார்கள்.ஆனால் அகதிகள் பெயரைப் பதிவு நீக்கம் செய்ய வருவாய்த்துறை ஆய்வாளர்களுக்கு அதிகாரம் இல்லை. இவர்கள் தன்னுடைய மேலதிகாரிகளுக்கு பதிவின் போது இல்லாதவர் பெயரை நீக்க பரிந்துரைக்கத்தான் முடியும். ஆனால் இந்த முகாமில் கடந்த மூன்று

மாதங்களில் ஆறு பேரின் பெயர்கள் வருவாய்த்துறை ஆய்வாளராலேயே நீக்கப்பட்டுள்ளனர். ஒருவரின் பெயர் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டால் அவர் சட்டத்திற்குப் புறம்பாக நாட்டில் தங்கும் வெளிநாட்டுப் பிரஜையாகக் கருதப்படுவார். அவர்மீது பல்வித குற்றவழக்குகளை பதிவு செய்யும் வாய்ப்புகளும் உண்டு. எனவே நாட்டை இழந்து அகதிகளாக வாழ்ந்து வரும் இவர்களுக்கு பதிவேட்டிலிந்து பெயர்கள் நீக்கப்படுதல் என்பது கடுமையான தண்டனை ஆகும்.

சம்பவம் நடைபெற்ற அன்று இரவீந்திரன் தன் மகன் பிரதீபனை அரசு மருத்துவமனையிலிருந்து அழைத்து வர இயலவில்லை. நிலையை விளக்கி அவர் வருவாய்த்துறை ஆய்வாளர் திரு. துரைப்பாண்டி என்பவரிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் திரு. துரைப்பாண்டி அவர்களோ கண்டிப்பாக அந்தச் சிறுவனை அழைத்து வந்து கண்ணில் காட்ட வேண்டும் அன்று கடுமையாகக் குறியுள்ளார். இதற்கு முன்பு ஒருமுறை சோதனைக்கு வந்த போதே திரு. துரைப்பாண்டி இதே சிறுவன் பிரதீபனை மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து வரவழைத்து பார்த்த பின்னரே பதிவு செய்துள்ளார். உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் ஒருவர் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெளிவு இல்லை. பிரதீபனுக்கு சிகிச்சை அளித்து வரும் முதன்மை அரசு மருத்துவரே தொலைபேசியில் பேசியும், அவர் அதை ஏற்கவில்லை. இந்நிலையில் பிரதீபன் பதிவு சோதனைக்கு வரவில்லை எனில் அவன் பெயர் நீக்கப்படும் என உறுதியாக தனக்கு இல்லாத அதிகாரத்தை எடுத்துக் கொண்டு கூறியுள்ளார் திரு. துரைப்பாண்டி. இந்நிலையில் திரு. துரைப்பண்டியின் கால்களைப் பிடித்துக் கொண்டு பிரதீபனின் தந்தை இரவீந்திரன் கெஞ்சியும் பயனில்லை. இச்சூழலில் மிகவும் மனமுடைந்த இரவீந்திரன் அருகில் இருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பி செல்லும் கம்பத்தில் ஏறிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளுவதாக உரத்து கூறியுள்ளார். பிறகு அனைவரும் அவரை சமாதானப்படுத்தி கீழே இறக்கியுள்ளனர். இந்நிலையில் வருவாய்த்துறை அதிகாரி திரு. துரைப்பாண்டியன் மிகவும் கடுமையாக, “ என்ன பூச்சாண்டி காட்டுகிறாயா.. செத்து தொலை எனக்கு கவலை இல்லை” என கூறியிருக்கிறார். இதனால் மிகவும் வேதனையும், வேகமும் அடைந்த இரவீந்திரன் மறுபடியும் மின்கம்பத்தில் விறுவிறுவென்று ஏறிவிட்டார். இந்த நிகழ்வு ஏறக்குறை 90 நிமிடங்கள் நடந்துள்ளது. உளவுத்துறை போலீசார் இருவரும் அங்கு இருந்துள்ளனர். பலர் போலீசுக்கும், ஆம்புலன்சுக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தெரிவித்தும் யாரும் வரவில்லை.

மின்கம்பத்தில் மறுபடியும் ஏறிய இரவீந்திரனிடம் பலர் இறங்கச்சொல்லி குரல் எழுப்பினர். கடைசித் தருவாயில் திரு.துரைப்பாண்டியனும் இறங்கி வருமாறு கூறியுள்ளார் (வருவாய்த்துறை ஆய்வாளர் திரு. துரைப்பாண்டி பணி ஓய்வு பெற்றவர். தற்போது ரு.10000/- ஊதியத்துக்கு தற்காலிக பணியாளராக பணிபுரிபவர்). ஆனால் இரவிந்திரன் காது சரியாக கேளாதவர் என்பதால் எதுவும் அவர் காதில் விழவில்லை. தான் இறப்பது என்பது தான் தன் இனத்தின் அவமானத்திற்கும், அடையாள சிக்கலுக்கும் எதிர்ப்பு நடவடிக்கையாகக் கருதி அவர் மரணத்தைத் தழுவியுள்ளார்.

சுமார் 10000 வாட்ஸ் மின்சாரம் செல்லும் கம்பியை அவர் நெருங்கியவுடன் மின்சாரம் அவரை சுட்டெரித்து தூக்கி எறிந்து விட்டது. இறப்பதற்கு முன் “எனது மரணம் என் குடும்பத்துக்காக அல்ல. இனியாவது அகதிகள் மாண்போடு வாழட்டும்” எனக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை கண்டறியும் குழு இத்தகவல்களை முகாமில் இரவீந்திரன் குடும்பத்தினர் உட்பட பலரிடம் கேட்டு உறுதி செய்த பின்னரே பதிவு செய்கிறது. இச்சம்பவங்கள் பற்றி மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் (பொது) அவர்களை சந்தித்தோம். அவரும் தன் தரப்பில் இப்பிரச்சினை குறித்து கவலையையும், கரிசனத்தையும் வெளிப்படுத்தினார்.

கண்டறிந்த பிற அம்சங்கள்:
• அகதிகள் முகாம் அமைக்கப்பட்ட போது 10”x10” கூரை குடிசைகளை அரசு கட்டிக் கொடுத்துவிட்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. பின்னர் அவர்களே பிற மராமத்துப் பணிகளை வசதிக்கு ஏற்ப செய்து கொண்டுள்ளனர்.
• தெருவிளக்குகள் ஒன்று கூட எரியவில்லை.
• சரியான சாலைகள் போடப்படவில்லை.
• இவர்களுக்கு எந்தவித அரசு சலுகைகளும் வழங்கப்படுவதில்லை.
• எந்த ஆளும் கட்சியினரும் வந்து பார்ப்பதில்லை.
• தொடர்ந்து உளவுத்துறையினரின் கண்காணிப்பும் மிரட்டல்களும் அவர்களை அச்சுறுத்துகிறது.
• இங்கேயே பிறந்து வளர்ந்த 25 வயதை நெருங்கும் பல இளைஞர்கள் எந்த அடையாளமும், அரசு வேலைக்கான உரிமையும் இல்லாமல் தடுமாறுகின்றனர்.
• சொத்துரிமை இல்லாததால் சம்பாதிப்பது என்பது கேளிக்கைகளில் மட்டுமே செலவிட வேண்டிய நிலை.
• எதிர்காலம் என்பதே இல்லை என்ற மனநிலை உருவாகியுள்ளது.
• இளைய தலைமுறையினர் நன்கு கல்வி கற்றும் எதிர்காலம் என்பது இல்லாத நிலை.
• பல்வேறு வசதிகள் தேவைப்படும் சூழல்.
• பல சமயங்களில் சந்தேகத்தின் பெயரில் போலீசாரால் பிடித்துச் செல்லப்படுதல்.
• அமைப்பு ரீதியாகவோ, அரசு ரீதியாகவோ எந்தப் பாதுகாப்பும் அற்ற அவல நிலை.

பரிந்துரைகள்:

பாதிக்கப்பட்டோருக்கான கோரிக்கைகள்

1. தனது மரணம் இலங்கை அகதிகளின் துயர் மிகு வாழ்க்கைக்கு முடிவு கட்டும் என்று சொன்னபடி மரணத்தைத் தழுவிய இரவீந்திரன் குடும்பத்தினருக்கு (அவர்தான் வருவாய் ஈட்டியவர் என்பதால்) ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

2. அவரின் மகன் பிரதீபனுக்கு இரத்தம் உறையாத குறைபாடு (Haemophilia) உள்ளவர் என்பதைக் கணக்கில்கொண்டு அவரின் மருத்துவச் செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். ரவீந்திரன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

அரசின் அணுகுமுறை மாற்றம்

3. இலங்கை உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஆண்டுகள் பல ஆகிவிட்ட நிலையில், இலங்கை அகதிகளை முகாமில் அடைத்து வைப்பது தேவையற்றது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலான காலத்தில் இந்திய மண்ணின் பிறந்து வளர்ந்துள்ள அகதிகளின் பிள்ளைகள் தமது இயல்பான தாய் நாடாக இந்த மண்ணையே கருதுகின்றனர். இலங்கையில் பிறந்து இங்கே வந்துள்ள அகதிகள் தமது மண்ணொடு உள்ள உறவுகளை இழந்துவிட்டனர்.

எனவே, அவர்களின் விருப்பத்தை அறிந்து அவர்களின் அகதி என்ற நிலையை மாற்றி, இந்திய குடியுரிமை வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு உடனே மேற்கொள்ள வேண்டும். அது ஒன்றே பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வாகும்.

இருந்தபோதும், நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்படுவதற்கு முன்னர், பின்வரும் உடனடி நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

உடனடி நிர்வாகமுறை மாற்றங்கள்

4. ரோல்கால் முறை உடனடியாக நீக்கப்பட வேண்டும். அரசு அவர்களுக்கு வழங்கும் உதவித் தொகையைப் பெற்றுக்கொள்வதையே அவர்களின் இருப்பைச் சரிபார்க்கும் முறையாக மாற்றம் செய்ய வேண்டும்.

5. இலங்கை உள்நாட்டுப் போரின் போது, அகதிகளைக் கண்காணிப்பதற்கென்று முகாம்களில் திணிக்கப்பட்ட பயங்கரவாத/ தீவிரவாத தடுப்புப் பிரிவான Q பிரிவு காவல் துறை அகதிகள் இந்திய/ தமிழக அரசிடம் முறையிடுவதைத் தடுக்கும் வகையின் செயல்படுபவர்களை மிரட்டுகிறது. எனவே, அகதிகள் முகாமினைக் கண்காணிக்கும் வேலையிலிருந்து அக்காவல் பிரிவை அகற்ற வேண்டும்.

6. அகதிகளுக்கான நல்வாழ்வுத் திட்டங்கள், சேவைகள், வேலை வாய்ப்பு, கல்வி நிலைய சேர்க்கை போன்றவற்றை அகதிகளுக்குப் பெற்றுத் தரும் முகாமையாக முகாமில் உள்ள வருவாய் துறை அலுவலகம் மாற்றப்பட வேண்டும்.

இதர சீர்திருத்தங்கள்

7. இலங்கை அகதிகளின் பிள்ளைகள், கல்வி பெறுவதிலும், வேலை வாய்ப்பு பெறுவதிலும் உள்ள சிரமங்கள் நீக்கப்பட வேண்டும். எந்தவொரு கல்வி நிலையமும் இலங்கை அகதிகளின் பிள்ளைகளுக்கு இட மளிப்பது கட்டாயம் ஆக்கப்பட வேண்டும். அரசின் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். உயர் கல்வியில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அகதிகள் பிள்ளைகளின் கல்விச் செலவை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

8. படித்து முடித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்குத் தடையாக அவர்களின் அகதி என்ற நிலை இருக்கிறது. தனியார் நிலையங்கள் அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும். தமிழக அரசின் பணி நியமனங்களில் அகதிகளின் பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.

9. தற்போது அகதிகளுக்கு அளிக்கப்படும் உதவித் தொகை போதுமானதல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயம் செய்யப்பட்ட உதவித் தொகை தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும்.

அகதிகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மிகவும் குறைவானதாக உள்ளது. தரமான, சரியான அளவிலான உணவுப் பண்டங்கள் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில் வழங்கப்படும் விலையில்லா பொருட்கள் இலங்கை அகதிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும்.

10. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அகதிகளின் வீடுகள் அதன் பின் விஸ்தரிக்கப்படவில்லை, பழுது பார்க்கப்படவும் இல்லை. ஆனால், குடியிருப்பவர்கள் தங்களின் சொந்த செலவில் விரிவாக்கம், பழுதுபார்த்தல் செய்து வருகின்றனர். இப்போது, அரசு பழுது பார்ப்பு செய்யும்போது, விஸ்தரிப்புகள் இடிக்கப்படுகின்றன. அப்படிச் செய்யப்படுவது, அரசு அவர்களுக்கு உதவி செய்வதற்கு மாறாக, செலவுகளை அதிகரிப்பதாக இருப்பதை அரசு கணக்கில் கொண்டு, அகதிகளுக்கு இழப்பு ஏற்படாத வகையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

11. அகதிகள் முகாமில், நீர், வினியோகம், கழிவகற்றல் உள்ளிட்ட சேவைகள் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, தெரு விளக்குகள் எரிவதையும், சாலைகள் போடப்படுவதையும் உத்திரவாதம் செய்ய வேண்டும்.

அகதிகள் முகாமில் உள்ள அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

12. வட்டிக்காரர்களின் பிடியிலிருந்து அகதிகள் விடுபட தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும். அகதிகள் தொழிலில் ஈடுபடுவதற்கு அரசு உதவியாக இருக்க வேண்டும். வங்கிக் கடன்கள் பெற்றுத் தர வேண்டும்.

13. திருமணம் ஆகும் அகதிப் பெண்களுக்கு திருமண உதவித் தொகை வழங்கப்பட வேண்டும். கருவுற்ற பெண்களுக்கான மருத்துவ சேவைகள் இலவசமாகக் கிடைக்க வேண்டும்.

இந்திய அரசு மற்றும் UNHCR

14. அகதிகள் தொடர்பான சர்வதேச பொதுப் புரிதல் ஒப்பந்தத்தில்-1951 (International Convention on the Status of Refugees) இந்தியா இன்னமும் கையொப்பமிடாதது வருத்தத்திற்குரியது. அதில் இந்தியா கையொப்பமிடுவது மட்டுமல்லாமல், 1967 ஆம் ஆண்டின் அகதிகள் நிலை குறித்த செயல்முறை (Protocol on the Status of Refugees- 1967) -இலும் கையெழுத்திட வேண்டும்.

15. மேற்சொன்ன 1952 மற்றும் 1967 சர்வதேச பொதுப்புரிதல் ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திடவில்லை என்றாலும், அகதிகளை தாய் நாட்டுக்கு வெளியேற்றுவது இல்லை என்ற அம்சம் பாராட்டப்பட வேண்டும். அவர்களை சிறைபோன்ற சிறப்பு முகாம்களில் வைத்திருப்பதை கைவிட்டு, அவர்களுக்கான ரோல்கால், சிறப்பு விசாரணை, விஐபிகள் வருகையின்போது கட்டாயமாக முகாமில் இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உள்ளிட்டவற்றைக் கைவிட வேண்டும்.

16. வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விதமாக,இனம், மதம் போன்றவற்றின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுவதற்கு மாறாக, ஒரே மாதிரியான தேசியக் கொள்கையை இந்தியா உருவாக்க வேண்டும்.

17. போது சேவை நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நடவடிக்கைகளில் (CSR) அகதிகளுக்கான சேவைத் திட்டமும் சேர்க்கப்பட வேண்டும்.

18. இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் நிலையை ஆய்வு செய்வதற்காக ஆய்வுக் குழு ஒன்றை UNHCR அனுப்பி வைக்க வேண்டும். அவர்களுக்கு ஐக்கிய நாடுகளின் அகதிகள் என்ற அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் கட்சிகள்

19. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், தமிழ்நாட்டில் செயல்படும் தேசிய கட்சிகள், இலங்கை தமிழ் அகதிகளின் நிலை குறித்து கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் நேரமாகிய இச்சமயத்தில் அரசியல் கட்சிகள் இலங்கைத் தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை பெற்றுத் தரப் போராடுவோம் என்று அறிவிக்க வேண்டும்.

சுமுக நிலை

20. முகாமில் தற்போதுள்ள பதட்டம் குறையவும், இணக்கம் ஏற்படவும் நல்லெண்ண நடவடிக்கையாகவும், நாற்பதுக்கும் மேற்பட்ட அகதிகள் மீது வருவாய்த்துறை அதிகாரியைத் தாக்கியதாக தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு திரும்பப்பெறப்பட வேண்டும்.

 

 

Leave a Response