அப்பா மகன் சண்டையில் பலியாடு ஆகும் ஜி.கே.மணி – பாமக பரபரப்பு

தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் பாமக நிர்வாகி எழுதிய நூல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. புத்தகத்தை பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி வெளியிட்டுப் பேசினார்.

முன்னதாக முன்னாள் சமஉ வேலுசாமி பேசியதாவது….

தர்மபுரி மாவட்டத்தில், கட்சிக்காக யார், யாரெல்லாம் உழைத்தார்களோ? யாரெல்லாம் தியாகம் செய்தார்களோ?, அவர்களை எல்லாம் ஜி.கே.மணி அடையாளம் தெரியாமல் ஒழித்துவிட்டார். இன்று நமக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிசம் சவுமியா அன்புமணி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்டபோது, பெரிய எழுச்சியைப் பார்க்க முடிந்தது. ஆனால், ஜி.கே.மணி தலைமையிலே ஒரு சதிக்கூட்டம், திட்டமிட்டு சவுமியா அன்புமணியைத் தோற்கடிப்பதற்கான வேலையைச் செய்தது.

பாமகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏக்கள் வெளியே சென்றதற்கு ஜி.கே.மணி தான் காரணம். 30 ஆண்டு காலமாக இந்தக் கட்சிக்கு அவர் செய்தது அத்தனையும் துரோகம் மட்டுமே. ஜி.கே.மணி என்ன ஆற்காடு நவாப் பேரனா?, பல ஆயிரக்கணக்கான கோடி வைத்திருந்தாரா? சாதாரண சைக்கிளில் 300 ரூபாய் சம்பளத்துக்கு ஆசிரியர் வேலைக்குப் போனவர், இன்று பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அவருக்கு எப்படி வந்தது?. இட ஒதுக்கீடு போராட்டத்தில் ஜி.கே.மணி கலந்து கொண்டது உண்டா?. அன்புமணி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இந்த மாவட்டத்தில் இருக்கக் கூடாது என்று ஜி.கே.மணி சதி செய்து, இராமதாசு வாயாலேயே எங்களைப் பற்றி அசிங்கமாகப் பேச வைத்து விட்டார். ஆரம்பக் காலத்தில் இருந்து இன்று வரை, தடம் புரளாமல் இராமதாசை கடவுளாக ஏற்றுக் கொண்ட நாங்கள், இன்று கட்சியை வழிநடத்த தகுதியுள்ள நபர் அன்புமணிதான் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இவ்வாறு வேலுசாமி பேசினார்.

மேடையில் சவுமியா அன்புமணியை வைத்துக் கொண்டே அவர் ஜி.கே.மணி மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.

அண்மையில் அன்புமணி நடத்திய பொதுக்குழுவிலும், இராமதாசு கடவுள் என்றும் அவர் அருகில் இருக்கும் பூசாரிகளால்தான் சிக்கல் என்றும் அன்புமணி பேசினார்.

இதனால், அப்பா மகன் சண்டையில் பலியாடு ஆக்கப்படுகிறார் ஜி.கே.மணி,விரைவில் அவரை பலிகொடுத்துவிட்டு இருவரும் ஒன்று சேருவார்கள் என்கிற கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் உலா வந்துகொண்டிருக்கின்றன.

Leave a Response