இப்போது பாமகவின் குடுமி பாஜக கையில் – மூத்த நிர்வாகிகள் கவலை

பாமக நிறுவனர் இராமதாசுவுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் கட்சியை இரண்டாக உடைத்து உள்ளது. இருவரும் நான்தான் தலைவர் என கூறி நிர்வாகிகளை நீக்கியும், நியமித்தும் வருகின்றனர்.

அண்மையில் இராமதாசால் கட்சியின் இணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சேலம் சமஉ அருளின் பாமக சட்டமன்ற கொறடா பதவியைப் பறிக்க வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவரிடம் அன்புமணி ஆதரவு சமஉக்கள் 3 பேர் மனு கொடுத்தனர்.

இதையடுத்து, பாமக நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கினார் இராமதாசு. இதைத்தொடர்ந்து, இருவரும் தங்களது ஆதரவு நிர்வாகிகள் மூலம் செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி கட்சியைக் கைப்பற்றும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இராமதாசு, நேற்று முன்தினம் திண்டிவனத்தில் பாமக செயற்குழுவையும், அன்புமணி சென்னை பனையூரில் பாமக நிர்வாகக் குழு கூட்டத்தையும் தனித்தனியாகக் கூட்டினர்.

திண்டிவனம் கூட்டத்தில், இராமதாசுக்கு எதிராகச் செயல்படும் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்க இராமதாசுக்கு அதிகாரம் வழங்குவது, கூட்டணி குறித்து முடிவெடிப்பது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பேசிய இராமதாசு, ‘வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியை நான் தொடங்கிவிட்டேன். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு கொடுக்க ஆயுத்தமாகுங்கள்.தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு தேர்தல் ஆணைய விண்ணப்பப் படிவமான ஏ பார்ம், பி பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் எனக்கு மட்டும் உள்ளது’ என்று கூறியிருந்தார்.

இதேபோல் அன்புமணி தலைமையில் நடந்த பனையூர் கூட்டத்தில், ‘பாமக செயல்பாடுகள் குறித்த அனைத்து அதிகாரங்களும் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அன்புமணிக்கு மட்டுமே உண்டு. தேர்தல் ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி இல்லாமல் நடைபெறும் கூட்டங்கள் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளுக்கும், சட்டத்திற்கும் முரணானது’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சிக்கல் இப்போது தேர்தல் ஆணையம் வரை சென்று உள்ளது.

ஏற்கனவே அன்புமணி டெல்லி சென்று, பாஜக மேலிடத் தலைவர்களைச் சந்தித்ததோடு இந்திய தேர்தல் ஆணையத்தையும் சந்தித்து பாமகவுக்கு பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் நான்தான், புதிய தலைவர் பொதுக்குழுவால் தேர்வாகும்வரை தனக்கே அதிகாரம் என குறிப்பிட்டு மாம்பழம் சின்னத்துக்கான உரிமையைக் கோரி இருப்பதாகத் தகவல் வெளியானது.

அன்புமணியின் இந்தச் செயலால் கடும் விரக்தியடைந்த இராமதாசு, அவரது பெயரையே பாமகவினர் யாரும் உச்சரிக்கக் கூடாது என கண்டிப்புடன் கூறியதோடு கட்சியினருக்கு புதிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். படிப்படியாக அவரைக் கட்சியிலிருந்து நீக்கும் முடிவுக்கு இராமதாசு செல்வதாக பாமக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இதனிடையே பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய பிறகு இராமதாசு சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கடந்த 30 ஆம் தேதி ஒரு மனு கொடுத்து உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதில், ‘இதுவரை பாமகவின் தலைவராக இருந்த அன்புமணியின் செயல்பாடுகள் சரியாக இல்லாததால் அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்ேடாம். பாமக நிறுவனர் என்ற அடிப்படையில் அன்புமணியை செயல்தலைவராக நியமித்து உள்ளேன். இதனால், பாமக தலைவர் பதவியை நானே ஏற்று உள்ளேன்.
புதிய நிர்வாகிகளையும் நியமித்து வருகிறேன். இதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். இதுவரை தலைவராக இருந்த அன்புமணியின் பதவிக் காலம் மே 28 ஆம் தேதியுடன் நிறைவு பெற்று விட்டது என்பதையும் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். அவரது பதவிக் காலம் முடிந்த மறுநாளே என்னை பாமக நிர்வாகிகள் தலைவராகத் தேர்வு செய்து விட்டனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவுடன் 1413 செயற்குழு உறுப்பினர்கள், 21 தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர்களின் புகைப்படத்துடன் அவர்கள் கையெழுத்திட்ட ஒப்புதல் கடித்தத்தை இராமதாசு வழங்கி உள்ளார்.

இதனால் இந்திய தேர்தல் ஆணையம் யாருடைய மனுவை ஏற்கும், மாம்பழச் சின்னம் யாருக்குச் செல்லும் என்ற பரபரப்பு பாமகவில் எழுந்துள்ளது. கட்சியின் அங்கீகாரம் தேர்தல் ஆணையத்தால் யாரிடம் செல்கிறதோ அதை வைத்துத்தான் பாமகவின் எதிர்காலம் குறித்து தெரியவரும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிமுகவில் எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜெயலலிதா அணி, ஜானகி அணி என செயல்பட்டு, இருவரும் சின்னத்துக்கு உரிமை கோரியதால் இரட்டைஇலைச் சின்னம் முடக்கப்பட்டது. அதேபோல், ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இருவரும் சின்னத்துக்கு உரிமை கோரியதால் மீண்டும் இரட்டைஇலைச் சின்னம் முடக்கப்பட்டது.

தற்போது, பாமகவில் தந்தை-மகன் இருவரும் சின்னத்துக்கு உரிமை கோரி உள்ளதால் மாம்பழம் சின்னம் முடக்கப்படுமா அல்லது கட்சியின் பெரும்பான்மை நிர்வாகிகளின் ஆதரவுப்படி ஒருவருக்கு வழங்கப்படுமா என்று பாமக தொண்டர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

அதேநேரம், இப்போதைய சூழலில் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளையும் தம் இஷ்டத்துக்கு ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. இதனால் இப்போது பாமகவின் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு சொல்லும் இடத்துக்கு பாஜக வந்துவிட்டது.அப்பாவும் மகனும் சண்டையிட்டுக் கொண்டு தங்கள் குடுமியைத் தாங்களே பாஜக வசம் கொடுத்துவிட்டனர் என்று மூத்த பாமக நிர்வாகிகள் கவலைப்படுகின்றனர்.

Leave a Response