பாமக தலைவர் இராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டத்தில் இருந்து மோதல் தொடங்கிவிட்டது. தனது பேரன் முகுந்தனை பாமகவின் இளைஞரணித் தலைவராக இராமதாசு அறிவித்தார். அந்த அறிவிப்புக்கு அன்புமணி கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், தந்தை மகனுக்கிடையிலான மோதல் மேடையிலேயே அம்பலமாகியது.
இதைத்தொடர்ந்து, அன்புமணியை கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்குவதாக இராமதாசு அறிவித்தார். உடனடியாக, தானே தலைவராகத் தொடர்வேன் என்றும் அன்புமணி அறிவித்தார். பின்னர், இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையிலும் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. அன்புமணி மீதும், அவரின் மனைவி சவுமியா மீதும் சரமாரியான குற்றச்சாட்டுகளை இராமதாசு முன் வைத்து வருகிறார். தனது மூச்சு அடங்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவியை அளிக்க மாட்டேன் என்றும் இராமதாசு அறிவித்து இருக்கிறார்.
இதனால், பாமக நிறுவனர் இராமதாசு மற்றும் அன்புமணி ஆகிய இருவருக்கும், இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாகக் கட்சி, இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது.
அன்புமணி பின்னால், 95 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோன்று மாவட்டச் செயலாளர்கள், மாவட்டத் தலைவர்களின் ஆதரவும் அன்புமணிக்கே இருக்கிறது என்றும் சொல்கின்றனர்.
இராமதாசு இதுவரை சுமார் 73 மாவட்டச் செயலாளர்கள், 57 மாவட்டத் தலைவர்களை நீக்கியுள்ளார். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் என்ற முறையில் நிர்வாகிகளை நியமிப்பதற்கு தனக்கு அதிகாரம் உள்ளது என்று இராமதாசு கூறுகிறார். ஆனால், அவர் நீக்கிய நிர்வாகிகளை அன்புமணி மீண்டும் நியமித்து வருகிறார்.
இதனால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பாமகவில் தொடர்ந்து சலசலப்புகள் அதிகரித்து வருகின்றன. இதற்கிடையே கடந்த வாரத்தில் பொது மேடையிலேயே அன்புமணி மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனாலும், அவருடைய மன்னிப்புக்கு இராமதாசு தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.இராமதாசு வழக்கம்போல பாமக நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில், அன்புமணி 10 மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு வருவாய் மாவட்டம் வாரியாக, பாமக மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டு அன்புமணி சிறப்புரையாற்றி வருகிறார்.
அந்த வகையில் இன்று சேலம் மாவட்ட பொதுக்குழு நடைபெற உள்ளது. அன்புமணி இன்று சேலம் செல்ல உள்ள நிலையில், சேலம் மேற்கு தொகுதி பாமக சமஉ அருள், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்திப்பதற்காக நேற்று மதியம் தலைமைச் செயலகம் வந்தார். அப்போது அருளுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதன் காரணமாக உடனடியாக தலைமைச் செயலகத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவசர ஊர்தி மூலம் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவருக்கு, இசிஜி உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், உடல் அசவுகரியமாக இருந்ததால் இப்படி ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, பாமகவின் கவுரவத் தலைவரும், கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான ஜி.கே.மணிக்கும் நேற்று திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாமக தலைவர் அன்புமணி தலைமையில் இன்று பாமகவின் பொதுக்குழுக் கூட்டம் சேலத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாமக சமஉக்கள் இருவர், அடுத்தடுத்து ‘திடீர்’ நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பாமகவினர் மத்தியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஒரே நேரத்தில் இருவருக்கு, ஏற்பட்டுள்ள நெஞ்சுவலி, பாமக நிர்வாகிகள் மற்றும் அன்புமணி ஆதரவாளர்கள் மத்தியில் புதிய விவாதத்தை தொடங்கி இருக்கிறது.
பாமகவில் மொத்தம் உள்ள 5 சமஉக்களில் மூவர் அன்புமணியை ஆதரிக்கும் நிலையில் இராமதாசை ஆதரிக்கும் ஜி.கே.மணி, அருள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது. பாமக சமஉ அருள் திட்டமிட்டு இன்று பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமல் தப்பிப்பதற்காக நெஞ்சுவலி என மருத்துவமனையில் சேர்ந்துள்ளாரா? என்று அன்புமணி தரப்பினர் சமூக வலைதளங்களில் சந்தேகத்தை எழுப்பி பதிவிட்டு வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மே 30 ஆம் தேதி சென்னை சோழிங்கநல்லூரில் அன்புமணி நடத்திய மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திலும் சேலம் அருள் பங்கேற்காமல் புறக்கணித்திருந்தார். அப்போது தனக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறி, மருத்துவமனையில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது சொந்தத் தொகுதியில் பொதுக்குழுவை அன்புமணி கூட்டியுள்ள நிலையில் அவருக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெஞ்சுவலி கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராமதாசா? அன்புமணியா? என்கிற எதிர்பாராத கேள்வியால் திடுக்கிட்டுப் போயிருக்கும் பாமக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், மருத்துவர் இராமதாசுவின் பேட்டிகளைத் தொடர்ந்து அவர் பக்கமே நிற்கின்றனர் என்றும் அதன் காரணமாகவே அன்புமணியைப் புறக்கணிக்கும் செயலை வெளிப்படையாகச் செய்கிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது.


