மே18 இனப் பேரெழுச்சி நாள்!
வரலாற்றின் மூத்த இனமான தமிழர் என்ற தேசிய இனம் பல்வேறு பெருமைகளை கொண்ட தனித்துவமான பேரினம். இலக்கிய இலக்கண செழுமைகளைக் கொண்ட முதுபெரும் செம்மொழி தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட தமிழர்கள் உலகம் முழுக்க வாழ்ந்தாலும் அவர்களுக்கு உள்ளங்கை அளவு நாடில்லையே என்ற கனவு நீண்ட நெடு நாட்களாக இருந்து வந்த நிலையில், தமிழர்களின் பூர்வீக நிலமான
தமிழீழத்தில் அதற்கான அரசியல் சூழ்நிலை சிங்கள இனவாத அரசால் வலுக்கட்டாயமாக ஏற்பட்டபோது, ஒப்பற்ற பெருந்தலைவன் நம் தேசியத் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் மண்ணின் பூர்வ குடிமக்கள் பெரும் படையாகக் கட்டி எழுந்து வல்லாதிக்கப் போருக்கு முகம் கொடுத்து நின்றார்கள்.
வீரம் செறிந்த தமிழர்களின் மரபார்ந்த போர் ஆற்றலை எதிர்கொள்ள முடியாமல் சிங்களன் உலகம் முழுக்க ஓடிச்சென்று உதவிகளைப் பெற்றுக் கொண்டு தன் சொந்த நாட்டு குடிமக்களின் மீது கொத்துக் குண்டுகளை வீசி இனப்படுகொலை செய்தனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் இதே நாட்களில், ஏறக்குறைய 2 இலட்சம் தமிழர்கள் சிங்கள இனவெறி இலங்கை அரசால் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் துடிக்கத்துடிக்க கொலை செய்யப்பட்டனர். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலைக்கு தமிழினம் இலக்காகி 15 ஆண்டுகள் உருண்டோடி விட்ட நிலையில், இதுநாள் வரை இறுக்கமாக காட்டப்படும் உலக அரங்கின் மௌனம் உலகத்தின் தொன்மையான ஒரு தேசிய இனத்தையே ஒட்டுமொத்தமாக இழிவுப்படுத்துகிற கொடுஞ்செயல்!
எந்த உன்னத நோக்கத்திற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் தங்கள் உயிரையே ஆயுதமாக ஏந்தி 30 ஆண்டுகாலம் அறம் பாராட்டி, மறப்போர் நிகழ்த்தி, தங்கள் இன்னுயிரை இழந்தனரோ, அந்த புனிதக்கனவான ஈழத்தாயக விடுதலையை இன்றுவரை அடைய முடியவில்லை என்பது வரலாற்றுப் பெருந்துயரம் மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழரின் ஆன்மாவிலும் உறைந்து கிடக்கிற தணியாத தாகம்.
பிழைக்க வந்த சிங்களன் பூர்வகுடி மக்களான தமிழர்களை இனப்படுகொலை செய்து தமிழரின் இறையாண்மையை, உரிமைகளை, தாயக நிலத்தை பறித்து சொந்த நிலத்திலேயே தமிழர்கள் மூன்றாம் தர குடிமக்களாக மாற்றப்பட்ட கொடுமையை பன்னாட்டு அமைப்புகள் ஒவ்வொன்றின் வாசலிலும் நின்று நாம் முறையிட்டும்கூட, இன்றுவரை நம் இனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான சுதந்திரமான நீதிவிசாரணை பொறிமுறையை ஏற்படுத்த மனிதநேயத்தைப் புறக்கணிக்கும் வல்லாதிக்க உலக ஒழுங்கு தடையாக இருக்கிறது. ஈழத்தாயக விடுதலையைத்தான் பெற முடியவில்லை; குறைந்தபட்சம் இனப்படுகொலைக்கான நீதியைக்கூட நம்மால் பெற முடியாத அளவிற்கு தமிழ்ப்பேரினம் அதிகார வலிமையற்று, அரசியல் வலிமையற்று தமிழினம் தாழ்ந்து வீழ்ந்து கிடக்கிறது.
விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்டு, இனப்படுகொலையும் நடைபெற்று முடிந்த இந்த
15 ஆண்டுகளில், ஈழப் பெருநிலத்தில் இன்றும் எந்த அடிப்படை உரிமையும் வசதியும் இல்லாமல்
இறுக்கமான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழ்ச்சொந்தங்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் பன்மடங்காகப் பெருகியுள்ளது. வடக்கு, கிழக்கு முழுவதும் இராணுவமயமாக்கலாலும்,
திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்களாலும், பௌத்தமயமாக்கலாலும் தமிழர்களின் தாயகம் முற்றாகச் சிதைக்கப்பட்டுவிட்டது.
தமிழர்களின் அடையாளம், பண்பாடு மற்றும் சுதந்திரமான வாழ்வியலை வீழ்த்தி இன அழிப்புக்கு நிகரான பண்பாட்டு அடையாள அழிப்பை சிங்கள வல்லாதிக்கம் நிகழ்த்தி இருக்கிறது. இனப்படுகொலைக்கான நீதி இதுநாள் வரை கிடைக்கவில்லை என்கிற துயரம் நமது உள்ளத்தை ரணமாக்க, அதைவிட மாபெரும் வலியாக போர் நடந்த காலகட்டத்தில் அதற்குப் பிறகான காலத்தில் விசாரணை என்ற பெயரில் வெள்ளை வேன்கள் மற்றும் பல்வேறு வாகனங்களில் சிங்கள ராணுவம் மற்றும் சிங்களக் காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது நிலையும் இதுநாள் என்னவென்று தெரியவில்லை. காணாமல் போன தங்களது உறவுகள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்ற தவிப்பிலும், ஒருவேளை சிங்கள ராணுவத்தால் அவர்கள் கொல்லப்பட்டிருந்தால், அதுகூட அவர்களது உற்றார் உறவினர் பெற்றோர்களுக்குக்கூட அறிவிக்கப்படாமல், அவர்களுக்கான இறுதிச்சடங்குகூட செய்ய வாய்ப்பில்லாத கொடுமையிலும் எங்களது தாய்மார்களும் உறவுகளும் வீதிகளில் நின்று இன்று வரை போராடிக் கொண்டிருப்பது வேறு எந்த இனத்திற்கும் நடக்கக்கூடாத மாபெரும் கொடுமை.
பன்னாட்டு அரசியல் சூழல்களில் தமிழர்கள் மீது திட்டமிட்டு சிங்கள அரசால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான தலையீடற்ற பன்னாட்டு விசாரணைக்கும் அனுமதி இல்லை எனும் நிலையில், அரசியல் அதிகாரமும், ஆட்சி அதிகாரமும் இல்லாத தமிழினம் போராடி போராடி சோர்ந்து கிடக்கிறது. இதன் நடுவில் இனப்படுகொலை முடிந்து 15 ஆண்டுகளை கடந்துவிட்டபிறகும் இன்னும் ஏன் அதையே பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? இன்னுமா ஈழ விடுதலை கிடைக்கும் என்று நம்புகிறீர்கள்? என்ற ஏளனக்குரல்கள் நம்மை நோக்கி தமிழ்நாட்டு அரசியல் பச்சோந்திகளால், இனமழித்த எதிரிகளுக்கு துணைபோகும் துரோகிகளால், தொடர்ந்து நம்மை நோக்கி எழுப்பப்பட்டு வருவதும் நமது விழிகளை சிவக்கச் செய்கிறது.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை, 2 இலட்சம் தமிழர்கள் துள்ளத் துடிக்கக் கொல்லப்பட்ட மனிதப்பேரவலத்தை மறந்து, கடந்துபோ என்பது எத்தனை
பெரிய குரூர மனப்பான்மை? மானத்தமிழ்ப்பிள்ளைகளால் இத்தனை பெரிய இனப்படுகொலையை, வலிதோய்ந்த வரலாற்று பெருந்துயரை எப்படி கடந்து போக முடியும்? தன் உடன்பிறந்த சகோதர & சகோதரிகள் சிங்களர்களால் நிர்வாணமாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கோரக் காட்சிகளை தமிழ் இளம் தலைமுறையினர் மறந்து கடக்க வேண்டும் என சொல்வதே எங்கள் மீது நிகழ்த்தப்படும் மிகப்பெரிய வன்முறை இல்லையா??
கடந்த 2009ல் போர் இறுகி முற்றிய சூழலில், போர்ச்சூழலில் பயன்படுத்தக்கூடாத தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு, உலக நாடுகளின் துணையோடு சிங்கள அரசு திட்டமிட்டு செய்த மாபெரும் இனப்படுகொலையில் நாம் கற்றுக் கொண்ட பாடம் என்னவெனில், தமிழர்கள் எல்லோராலும் கைவிடப்பட்டு தனித்துவிடப்பட்ட எந்தவித அதிகாரமும், உரிமைகளும் இல்லாத அடிமைத் தேசிய இனமாக இருக்கிறது என்பதுதான். இந்த நிலை மாற வேண்டுமானால் ஈழத்திலும், தாயகத் தமிழகத்திலும் மற்றும் உலகம் எங்கும் சிதறிக் கிடக்கும் தமிழர்களின் மனநிலையில் மாபெரும் மாற்றம் நிகழ வேண்டும்.
வரலாற்றின் வீதிகளில் யூதர்கள் எவ்வாறு தொடர்ச்சியாக அழிக்கப்பட்டும், இடைவிடாது போராடி 2000 ஆண்டுகளுக்குப் பிறகு மாபெரும் மீளெழுச்சி கொண்டு தங்களுக்கென ஒரு நாட்டினை அடைந்தார்களோ, அதேபோல தமிழர்களாகிய நாமும் மன ஊக்கம் பெற்று, வீழ்ந்தது வீழ்ந்தே கிடக்க அல்ல, மீண்டும் பன்மடங்கு பலம் கொண்டு எழுவதற்காக என்பதை அறிந்து, இழந்தது அழுவதற்காக அல்ல, வலிமை கொண்டு எழுவதற்காக என்பதை உணர்ந்து, வரலாற்றின் பாதையில் ஒரு மீள் எழுச்சி கொள்ள வேண்டிய ஒரு
தேசிய இனமாக இருக்கிறோம்.
கடந்த 2009ற்குப் பிறகு உலக அரசுகளின் அரசியல் போக்குகள் நம்பிக்கை தரக்கூடிய வகையில் இன்று நிறைய மாற்றம் கண்டிருக்கின்றன. இன்றைக்கு கனடா தேசம் ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதை ஏற்று, இனப்படுகொலை நாள் நினைவு தூண் அமைத்து, ஈழத்தாயக விடுதலைக்கு ஆதரவாக துணைநிற்பது உலகத்தமிழர்களின் நெஞ்சத்தில் புதிய நம்பிக்கை ஒளிக்கீற்றினை தோற்றுவிக்கிறது. இதேபோல் நமது நியாயத்தை புரிந்து கொள்கிற உலக ஒழுங்கை தொடர்ச்சியான நமது செயல்பாடுகள் மூலமாக ஏற்படுத்தி, மாறிவரும் உலகச் சூழல்களுக்கு ஏற்றதுபோல் தமிழர்கள் தங்களது அரசியல் செயல்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டும். தெற்கு சூடான், கிழக்கு தைமூர், பாலஸ்தீனம் என்றெல்லாம் புதிய நாடுகள் தோன்றிய வரலாறு நம் கண் முன்னால் பாடங்களாக இருக்கின்றன. பெரும் நம்பிக்கையோடு, திட்டமிடலுடன் கூடிய அறிவார்ந்த முறைமையில் ஒன்றிணைந்து செயல்பட்டால் தமிழர்களுக்கென இந்தப் பூமிப்பந்தில் இறையாண்மையுடன் கூடிய ஒரு தேசம் பிறக்கும் என்பது உறுதி.
விடுதலைக் கனவை நோக்கிய நமது பாதையில் தங்களையே விதையாகத் தந்த நமது மாவீரர் தெய்வங்கள் ஒளிதரும் விளக்குகளாகச் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இறக்கும் கடைசி நொடியிலும்கூட தாய் மண்ணை ஒரு கையில் பிடித்துக்கொண்டு இதயத்தோடு அணைத்துக் கொண்டு சாவைத் தழுவி சரித்திரமான அவர்கள் சுவாசித்த மூச்சுக்காற்றைத்தான் அவர்களது உடன்பிறந்தவர்களாகிய நாமும் சுவாசிக்கிறோம் என்கின்ற உணர்வு மீண்டெழுவதற்கான ஆற்றலை நம் ஒவ்வொருவருக்கும் உருவாக்கும் மாவீரர்கள் எந்தக் கனவிற்காகத் தங்கள் உயிரையும் விலையாக அளித்துப் போராடினார்களோ அந்தக் கனவு தேசத்தை, அழித்தொழிக்கப்பட்ட நமது தாய் நிலமான தமிழீழ நாட்டினை கட்டி எழுப்ப வேண்டிய ஒரு மாபெரும் கடமை உலகத் தமிழின இளையோர் தோள்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. தமிழினத்தின் ஒற்றை அடையாளம், தமிழினத்தின் தேசியத் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே பிரபாகரன் அவர்கள் சொன்னதுபோல இளம் தலைமுறையினர் இந்த வரலாற்றின் அழைப்பிலிருந்து, எப்போதும் விலகிப்போகக்கூடாது என்பதே இந்த இனப்படுகொலை நாளில் நாம் எடுக்க வேண்டிய உறுதி.
கடந்த காலங்களில் தவறாக கட்டமைக்கப்பட்ட இந்திய நாட்டின் பிழையான வெளியுறவு கொள்கை மாறுவதற்கான சூழ்நிலை பிறக்க தாயக தமிழகத்தின் அதிகார அரசியலில் பெரும் மாற்றம் நிகழ வேண்டும். சாதியாலும், மதத்தாலும் பிரிந்து கிடக்கிற தாயகத் தமிழகத்தின் மக்களை ஓர்மைப்படுத்தி, தமிழர்களாக அணிதிரட்டி பெரும் அரசியல் புரட்சி இந்த மண்ணில் நடந்து அதிகாரத்தை தமிழர்களாகிய நாம் கைப்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நாம் தமிழர் என ஒவ்வொரு வீதியிலும் இளைஞர்களும் இளம் பெண்களும் இன்று தாயகத் தமிழகத்தில் திரளத் தொடங்கியிருக்கிறார்கள்.
இது தமிழின விடுதலை வரலாற்றில் இதுவரை ஏற்படாத மிக முக்கியமான ஒரு அரசியல் நகர்வாகும்.
அதன் அடிப்படையில்தான் ஒவ்வொரு ஆண்டும் ரத்தமும் பெரும் வலியும் தோய்ந்த நினைவுகளைக் கொண்ட மே 18 இனப்படுகொலை நாளினை ஒன்று சேர்ந்து அழுதுவிட்டு கலைகிற நாளாக அல்லாமல், இமையோரம் கசிகிற விழிநீரைத் துடைத்துவிட்டு, கைகோர்த்து இனத்தின் விடுதலைக்காக ஒன்று சேர்ந்து எழுவதற்கான நாளாக, மாற்றிப் படைக்கவே தாய்த்தமிழ் உறவுகளை ஒன்றுகூட்டி ‘தமிழினப் பேரெழுச்சி நாளாக’ நாம் தமிழர் கட்சி கடைப்பிடித்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் மே 18 இனப்படுகொலை நாள்
பொதுக்கூட்டம் கோவை கொடிசியா திடலில் மிகப்பெரிய திட்டமிடலுடன்,
மிகப்பிரம்மாண்டமாக உணர்வெழுச்சியோடு நடைபெறவுள்ளது.
2025 மே 18 தமிழினப் பேரெழுச்சி பொதுக்கூட்டத்தில் இனமழிக்கப்பட்ட வலிதோய்ந்த நினைவுகளையும், ஈழத்தாயக விடுதலை வேட்கையையும், நெஞ்சில் சுமந்து நிற்கும் எம் தாய்த் தமிழ் உறவுகள் ஒவ்வொருவரும் உணர்வெழுச்சியுடன் மறக்காமல் பங்கேற்க வேண்டியது வரலாற்று பெருங்கடமையாகும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மே 18 தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் உறவுகள் காலநிலை முன்னறிவிப்பில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுவதால் அனைவரும் மாற்று உடை, மழைக்கால உடைகள், தொப்பி, அலைபேசிகள் மழையில் நனையாமல் பாதுகாக்க நெகிழி அல்லது நீர் புகா பைகள், துண்டு போன்றவற்றை மறவாமல் உடன் எடுத்து வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மானத்தமிழர்கள் ஒவ்வொருவரும் பெரும் படையுடன் திரண்டு வாருங்கள்; மறவாமல் குடையுடனும் வாருங்கள்!
என் பேரன்பிற்குரிய தம்பி தங்கைகள், பெருமதிப்பிற்குரிய பெற்றோர்கள்,
என் உயிருக்கு இனிப்பான தாய்த்தமிழ் உறவுகள் என
உங்கள் ஒவ்வொருவரின் வருகையையும் எதிர்நோக்கியுள்ளேன்!
கோவை கொடிசியா திடலில் நடைபெறவுள்ள
மே 18 தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டத்தில் சந்திப்போம்!
தமிழர்களின் தாகம்! தமிழீழத் தாயகம்!
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
நாம் தமிழர்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.