அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் இடையிலான உறவில் நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
பிப்ரவரி மாதம்,அத்திகடவு அவினாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அதிமுக மேற்கு மண்டல முக்கிய பொறுப்பாளரான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரின் படங்கள் இல்லாததால் தான் கலந்து கொள்ளவில்லை என்று அவர் விளக்கமளித்திருந்தார்.
அந்த நிகழ்ச்சி முதல் எடப்பாடியும், செங்கோட்டையனும் பாரா முகமாகவே இருந்து வருகின்றனர். அதன்பின் நடைபெற்ற அதிமுக கூட்டங்களிலும், எடப்பாடி பழனிச்சாமியின் பெயரைச் சொல்லாமல் செங்கோட்டையன் தவிர்த்து வந்தார்.
சென்னையில் பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவிலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அண்மையில் கோவையில் நடந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இல்ல திருமண வரவேற்பு விழாவிலும் எடப்பாடி பழனிச்சாமியுடனான சந்திப்பை செங்கோட்டையன் தவிர்த்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக சமஉக்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். மேலும், சட்டசபையிலும் எடப்பாடி பழனிசாமியை நேருக்கு நேர் சந்திக்காமல் செங்கோட்டையன் தவிர்த்தார்.
தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போதும், அதிமுக சமஉக்கள் அறைக்குச் செல்லாமல் சபாநாயகர் அறையில் செங்கோட்டையன் அமர்ந்தார். சபாநாயகருக்கு எதிராக அதிமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், சபாநாயகர் அப்பாவுவைத் தனியாகச் சந்தித்து செங்கோட்டையன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அவை நிறைவு பெற்றதும் செங்கோட்டையன் தனியாகப் புறப்பட்டுச் சென்றார். இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பிய போது, “அதுகுறித்து செங்கோட்டையனிடமே கேளுங்கள்” எனக்கூறினார்.
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், சபாநாயகரை சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பது வழக்கம் தான் என்றும், தனது தொகுதியில் சுற்றுச்சூழல் குறித்தான கவன ஈர்ப்பு தீர்மானத்தை சபாநாயகரிடமும், சுற்றுச்சூழல் அமைச்சரிடமும் கொடுத்ததாக விளக்கம் அளித்தார்.
இதன்பின் சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசுகையில்,
நான் தலைவன் அல்ல தொண்டனாகக் கருத்தைக் கூறி வருகிறேன். தனியார் சுய நிதிக் கல்லூரிகளுக்கு அடித்தளமிட்டவர் எம்.ஜி.ஆர். அதனால் தான் உலகளவில் தலைசிறந்த பொறியாளர்கள் உள்ளனர். தலைமை எப்படி இருக்க வேண்டுமோ அதற்கு உதாரணமாக எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அதிமுகவை வழிநடத்தினார்கள். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் சிறப்பான ஆட்சியைத் தந்தோம் என்றவர் எடப்பாடி பழனிச்சாமி பெயரைக் கூறவில்லை.
தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், “தலைவரின் ஆற்றலையும், திறனையும் சிந்திக்கக் கூடிய நிலையில் நாம் இருக்கிறோம். இந்தியாவின் இரும்புப் பெண்மணி இந்திராகாந்தி. இந்தியாவில் சிறந்த பிரதமராக மோடி வரலாற்றை உருவாக்கியுள்ளார். நான் நல்லதைப் பாராட்டுவேன். எதிர்க்கட்சியைக் கூட கடுமையாக விமர்சிக்கமாட்டேன். இப்போது எதையும் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. ஆனால், எந்தப் பாதை சரியாக இருக்கிறதோ அந்தப் பாதையில்தான் சென்று கொண்டுள்ளேன். என் இலட்சியம் உயரமானது. என் பாதை தெளிவானது. வெற்றி முடிவானது. நான் சில வேடிக்கை மனிதரைப் போல் வீழமாட்டேன்” என்று பேசினார்.
செங்கோட்டையன் இப்போது எடப்பாடிக்கு எதிராகக் களமிறங்கியிருப்பதற்கு வலுவான பின்புலம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
அது என்ன?
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அமையவிருக்கும் அதிமுக பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி வைக்கும் நிபந்தனைகள் மிக அதிகம் என்று பாஜக நினைக்கிறதாம்.அதனால் எடப்பாடி இல்லாத அதிமுகவை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறதென்றும் எடப்பாடிக்குப் பதிலாக செங்கோட்டையனைத் தலைவராக்க முயல்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், எடப்பாடியை முற்றாகத் தவிர்க்கும் செங்கோட்டையன், பிரதமர் மோடியைப் பாராட்டிப் பேசியதுடன் நான் சில வேடிக்கை மனிதரைப் போல் வீழமாட்டேன் என்று சொல்லியிருப்பது கவனத்துக்கு உரியது என்கிறார்கள்.
அதேநேரம், நேற்று திருச்சியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழகத்தில் பாஜகவால் ஜெயலலிதாவின் ஆட்சியை நிச்சயம் தர முடியும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகவும் வர வேண்டும். அது பழனிச்சாமியுடனா, பழனிச்சாமி இல்லாமலா என்று தெரியாது எனக் கூறியிருக்கிறார்.
நேற்று செங்கோட்டையன் கலந்து கொண்ட அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான்,தமிழ்நாட்டில் நல்லது நடக்க வேண்டும் அதற்கு செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் துணிவுடன் முடிவெடுக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
இவற்றிலிருந்து அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியை நீக்கிவிட்டு அந்த இடத்தில் செங்கோட்டையனை அமர வைக்க எல்லோரும் சேர்ந்து திட்டமிடுகிறார்கள் என்பது புலனாகிறது.
இந்தத் திட்டம் செயலாகுமா? என்பது போகப் போகத் தெரியும்.