சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரத் இந்து முன்னணி வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் எஸ்.யுவராஜ் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது….
தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று கூறி முஸ்லிம்கள் சொந்தம் கொண்டாடுகின்றனர். எனவே, திருப்பரங்குன்றம் மலையைக் காக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி சென்னை தங்கசாலையில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோயிலில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோயில் வரை வேல் யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்க காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் முத்தரசு…
இந்துக்களுக்குச் சொந்தமான திருப்பரங்குன்றம் மலையைக் காக்க வேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்தும் நோக்கில் சென்னையில் கந்தகோட்டம் முருகன் கோயிலை நோக்கி அமைதியான முறையில் வேல் யாத்திரை மேற்கொள்ள அனுமதி கோரியும், காவல்துறை அனுமதிக்கவில்லை.
காவல் துறை தரப்பில் ஆஜரான தமிழ்நாடு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா….
திருப்பரங்குன்றம் மலையைக் காக்க வேண்டும் என்று கோரி சென்னையில் பேரணி செல்ல மனுதாரர் அனுமதி கோருகிறார். ஏற்கெனவே இதற்காக மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியும், பொது அமைதி, மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக பலர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மனுதாரர் தற்போது வேல்யாத்திரை மேற்கொள்ள அனுமதி கோரும் வழித்தடம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. திருப்பரங்குன்றம் மலை உரிமை தொடர்பாக ஏற்கெனவே பிரிவியூ கவுன்சில் வரை சென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்துக்களும், முஸ்லிம்களும் மத நல்லிணக்கத்துடன் சமூக ஒருமைப்பாடு, ஒற்றுமையை நிலைநாட்டி வருகின்றனர்.
கோயில் நகரமான மதுரையிலும் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒரே குடும்ப உறுப்பினர்களாக, சகோதர, சகோதரிகளாக வாழ்ந்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலையைக் காரணமாக்கி இந்த ஒற்றுமையை குலைத்துவிடக் கூடாது. கோரிப்பாளையம் தர்காவில் இந்துக்கள் வழங்கும் கொடிதான் இன்று வரை ஏற்றப்படுகிறது. நாகூர் தர்கா கந்தூரி விழாவில் இந்துக்கள் வழங்கும் போர்வைதான் இன்றுவரை பயன்படுத்தப்படுகிறது. பல கோயில்களின் கும்பாபிசேக விழாவுக்கு முஸ்லிம்கள் சீர்வரிசை, நன்கொடை செய்கின்றனர். பல கிராமங்களில் கோயில் நேர்த்திக் கடன்களையும், அன்னதானமும் செய்கின்றனர். பொது அமைதி, மதநல்லிணக்கம், சமூக ஒற்றுமை பேணப்பட வேண்டும்.
இவ்வாறு வாதம் நடந்தது.
அதைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலையைக் காக்க சென்னையில் பேரணி செல்ல வேண்டிய அவசியம் என்ன? தவிர, மனுதாரர் கோரியுள்ள சவுகார்பேட்டை தங்கசாலை வழித்தடம் நெரிசல் மிகுந்தது. எனவே, வேறு இடத்தை தேர்வு செய்து தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அறிவுறுத்திய நீதிபதி வழக்கின் தீர்ப்பை பிப்ரவரி 14 க்கு தள்ளிவைத்துள்ளார்.