ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு – விவரம்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை ஒட்டி, இத்தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதி வரிசையில், 98 ஆவது தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளது. குறைந்த பரப்பளவில், அதிக வாக்காளர்களைக் கொண்ட ஈரோடு கிழக்கு தொகுதியில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகள் இடம்பெற்றுள்ளன.

சனவரி 6 ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் 1,09,636 ஆண் வாக்காளர்களும், 1,16, 760 பெண் வாக்காளர்களும், 37 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,26, 433 வாக்காளர்கள் உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி 2011 ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் உருவானது.

2011 ஆம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்றார். 2016 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வெற்றி பெற்றார். 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசு சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார்.அவரது மறைவிற்குப் பிறகு 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன்,2024 டிசம்பர் 14 ஆம் தேதி காலமானர். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், இன்று தில்லி பொதுத்தேர்தல் தொடர்பான அறிவிப்பினை வெளியிட்ட ஒன்றிய தேர்தல் ஆணையம், அத்துடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.இதன் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி எட்டாம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Response