காலையில் முரசொலியில் எதிர்ப்பு மாலையில் பதவி இழப்பு – சிபிஎம் பரபரப்பு

விழுப்புரத்தில் கடந்த 2 நாட்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இன்று, மாநாட்டுக் கூட்டம் நிறைவடைந்ததும், புதிய மாநில செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தச் செயற்குழுக் கூடத்தில் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன்,2018 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் நீடித்து வந்தார். தொடர்ந்து 2 முறை தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் புதிய மாநில செயலாளரைத் தேர்வு செய்யும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் அக்கட்சியின் புதிய மாநில செயலாளர் பொறுப்பிற்கு பெ.சண்முகம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில், திமுக அரசு அறிவிக்கப்படாத அவசரநிலையைப் பிறப்பித்திருக்கிறதா? என்கிற கேள்வியை கே.பாலகிருஷ்ணன் எழுப்பியிருந்தார்.இதனால் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் அவருக்கு எதிராக கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் தமிழ்நாடு செயலாளர் பொறுப்பிலிருந்து விலகியிருப்பதும் அவருக்குப் பதிலாக சென்ற ஆண்டு தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர் விருது பெற்ற பெ.சண்முகம் புதிய செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் தமிழ்நாடு அரசியலில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

Leave a Response