ஏவிஎம் குடும்பத்து மருமகன்,நாயகன் ஆர்யன் ஷாம் திரைப்பட இயக்குநர்.அவர், புதிய படத்தின் பணிக்காக இரண்டு பெண்கள் உள்ளிட்ட குழுவுடன் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பஞ்சமி பங்களாவுக்குச் செல்கிறார். இரவில் அந்த இடத்தில் மர்மான சில சம்பவங்கள் நடக்க, அச்சத்தில் அங்கிருந்து அனைவரும் வெளியேற முயல்கிறார்கள். ஆனால், அவர்களால் அந்த இடத்தை விட்டு வெளியேற முடியவில்லை.அதுமட்டுமா?அவர்களை ஒரு முகமூடி மனிதர் கொடூர ஆயுதத்துடன் விரட்டுகிறார்.
இதற்கடுத்து என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைத் திகில் கலந்து சொல்லியிருக்கும் படம் அந்தநாள்.
நாயகன் ஆர்யன் ஷாமுக்கு முதல்படத்திலேயே கனமான வேடம்.அதுவும் ஒன்றுக்கு இரண்டு.அவற்றை மிக இயல்பாக எதிர்கொண்டிருக்கிறார்.அவருடைய உயரமும் தோற்றப் பொலிவும் எவ்வித வேடத்துக்கும் அவர் பொருந்துவார் என்பதைக் காட்டும் வண்ணம் இருக்கிறது.அதை இந்தப்படத்தில் நிரூபித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஆத்யா பிரசாத்துக்குக் குறைவான வாய்ப்பென்றாலும் நிறைவு.
லிமா பாபு, கிஷோர் ராஜ்குமார், ராஜ்குமார், இமான் அண்ணாச்சி ஆகியோரும் தங்கள் இருப்பைக் காட்டியிருக்கிறார்கள்.
திகில் படங்களுக்கு ஒளிப்பதிவும் பின்னணி இசையும் தான் முதுகெலும்பு.இசையமைப்பாளர் என்.எஸ்.இராபர்ட்டும் ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேலும் இதை உணர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள்.
படத்தொகுப்பாளர் ஜே.எஸ்.காஸ்ட்ரோ, கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
கதை திரைக்கதையை நாயகனோடு சேர்ந்து எழுதி படத்தை இயக்கியிருக்கிறார் வி.வி.கதிரேசன்.எடுத்துக் கொண்ட கதையைச் சரியாகச் சொல்லிச் செல்வதில் தடுமாறியிருப்பது பலவீனம்.அதேசமயம், இதுவரை சொல்லப்படாத நரபலியை மையமாகக் கொண்ட கதை.அடுத்து என்ன நடக்கும்? என்கிற உண்மையான அச்சத்துடன் எதிர்பார்க்க வைத்திருப்பது,நாயகன் குறித்த எதிர்பாரா திருப்பம்,நரபலியின் பின்னணி ஆகியன பலம்.
தமிழ்த் திரையுலகம் மட்டுமல்ல, ஹாலிவுட் படங்களில் கூட இதுவரை நரபலியை மையப்படுத்திய படங்கள் வந்ததில்லை. நாங்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி காட்சிகளையும் மிரட்டலாகப் படமாக்கியுள்ளார்கள்.
இந்திய அரசியலமைப்பில் நரபலி என்பதற்கு அனுமதியில்லை என்பதால்,இந்தப் படத்திற்கு சான்றிதழ் வழங்க முடியாது என்று மறுத்துவிட்டார்கள். அதனால் தான் ரிவைசிங் கமிட்டியை அணுகி சான்றிதழ் வாங்கியுள்ளார்கள். அதனால் இதுவரை தமிழ் இரசிகர்கள் பார்த்திராத ஒரு படமாக ‘அந்தநாள்’ அமைந்திருக்கிறது.
– சுரா