ஒரேநாடு ஒரேதேர்தல் சட்டம் நிறைவேற வாய்ப்பே இல்லை – எப்படி?

இந்திய ஒன்றியத்தில் தற்போது மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் என 3 வகைகளில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. 1951 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரை அனைத்துத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு வந்தது.

பின்னர், பதவிக்காலம் முடியும் முன்பே ஆட்சி கவிழ்ந்ததாலும், பல்வேறு விவகாரங்களாலும் பதவிக்காலங்கள் மாறின. இதற்கிடையே, ஒன்றியத்தில் பாஜக கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மீண்டும் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென வலியுறுத்தி வருகிறது.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால், தேர்தல் செலவுகள் குறையும் என்றும், அரசு நிர்வாகம் மேம்படும் என்றும் பாஜக கட்சி கூறி வருகிறது. ஆனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமெனில், சில மாநிலங்களின் பதவிக் காலத்தைக் குறைக்க வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை அவற்றின் பதவிக் காலத்திற்கு முன்பே கலைப்பது மக்களாட்சிக்கு எதிரானது. இது மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயல், நடைமுறை சாத்தியமற்றது என பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் இந்த எதிர்ப்புகளைக் கண்டுகொள்ளாத ஒன்றிய பாஜக அரசு, 2018 ஆம் ஆண்டு தேசிய சட்ட ஆணையம் மூலம் அரசியல் கட்சிகளின் கருத்தைக் கேட்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, முன்னாள் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழுவை கடந்த ஆண்டு அமைத்தது.

இக்குழு, 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த மார்ச் மாதம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கியது. அதில், 2029 ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சட்டப்பேரவைகளின் பதவிக்காலத்தை படிப்படியாக மாற்றியமைக்கவும், இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் 18 திருத்தங்கள் மற்றும் உட்பிரிவுகளைக் கொண்டு வர பரிந்துரை செய்தது. இப்பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஒன்றிய அரசு, 3 சட்ட மசோதாக்களை கொண்டு வர திட்டமிட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

அதில்,நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்தும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவது உட்பட 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு மட்டும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வரைவு சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 82 இல் திருத்தம் செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த திருத்த மசோதாவுக்கு 50 சதவீத மாநிலங்களின் ஒப்புதல் அவசியமில்லை.

இதுதவிர, புதுச்சேரி, டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய சட்டப்பேரவைகளைக் கொண்ட யூனியன் பிரதேசங்களுக்கு இதர மாநில சட்டப்பேரவைகளுடன் தேர்தல் நடத்துவதற்கான 2 ஆவது சட்டத் திருத்த மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக டெல்லியின் தேசிய தலைநகர் அரசுச் சட்டம், யூனியன் பிரதேசங்களின் அரசு சட்டம், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் ஆகிய சட்டங்களில் திருத்தம் செய்யப்படும். இது அரசியலமைப்பு சட்டத் திருத்தமாக இல்லாமல் சாதாரண சட்ட திருத்தமாக இருக்கும்.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே இந்த 2 மசோதாக்களும் அடுத்த வாரம் நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட இருப்பதால், இவை நாடாளுமன்றக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்படலாம். எனவே உயர்மட்டக் குழு மூலம் பல்வேறு மாநில சட்டப்பேரவை சபாநாயகர்களுடன் ஆலோசனை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அதானி இலஞ்ச விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்பூர் விவகாரம் என கடும் அமளி நிலவி வரும் நிலையில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை கொண்டு வருவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 3 இல் 2 பங்கு பலம் ஒன்றிய அரசுக்குத் தேவை. தற்போது, இத்தகைய பலம் அரசுக்கு இல்லை. மக்களவையில் மொத்தம் 543 எம்பிக்களில் ஒரு இடம் காலியாக உள்ளது. இதில் 3 இல் 2 பங்கு பலம் என்பது 361 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 உறுப்பினர்களே உள்ளனர். இந்தியா கூட்டணி 235 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

மாநிலங்களவையில் மொத்தம் 243 உறுப்பினர்களில் பாஜக கூட்டணிக்கு 122 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே இரு கூட்டணியிலும் அல்லாத பிற கட்சிகளின் ஆதரவைப் பெற பாஜக முயலும்.

ஆனால்,ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பாக இருப்பதால் தற்போதைய சூழலில் மசோதாவை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response