புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 50 பேர் பணிநீக்கம் – எம்யூஜே கண்டனம்

புதிய தலைமுறையின் தொழிலாளர் விரோத பணி நீக்க நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து சென்னை பத்திரிகையாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்…

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றும் ஊழியர்களில் 50 க்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. 

உலக நடப்புகளை அலசி ஆராய்ந்து, பல சமயங்களில் தீர்ப்புகள் போல் கருத்துகளைத் தெரிவித்தும் வரும் ஊடகங்கள், தம் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அநீதி இழைப்பது ஏற்க முடியாததும், துன்பமானதும் ஆகும். 

‘புதிய தலைமுறை’ நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை தொழில் தகராறு சட்டம் – 1947, உழைக்கும் பத்திரிகையாளர் சட்டம் போன்றவற்றுக்கு முரணாகவும் எதிராகவும் உள்ளது. தொழில் தகராறு சட்டம் 25 (N), எந்தவொரு பணி நீக்கத்தையும் அரசிடம் தெரிவித்து, முறையான ஒப்புதல் பெற்ற பிறகுதான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் எந்தச் சட்டத்தையும் பின்பற்றாமல் பணிநீக்கம் செய்ய முயல்வது கடும் கண்டனத்துக்கு உரியது. 

ஊடக நிறுவனங்கள் ‘திறமையாக’ பணி நீக்கம் செய்வதாகக் கருதிக்கொண்டு, தாங்களாகவே ராஜினாமா செய்வதாக ஊழியர்களிடம் கடிதங்களைப் பெற்று பணி நீக்கம் செய்து வருகின்றன.

சட்டத்துக்கு புறம்பான இதே வழிமுறையை ‘புதிய தலைமுறை’ நிர்வாகமும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

பல்வேறு நிறுவனங்களில் நடைபெறும் சட்டவிரோத பணி நீக்கங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும் ‘புதிய தலைமுறை’ அதனை தங்கள் நிறுவனத்திலும் செயல்படுத்துவது என்ன நியாயம்? ஊருக்குச் சொல்லும் நீதியை, அறத்தை ‘புதிய தலைமுறை’யும் பின்பற்ற வேண்டும். 

ஊடக நிறுவனங்கள் கொத்துக்கொத்தாகச் செய்து வரும் சட்ட விரோதப் பணி நீக்கங்களைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு ஊடகவியலாளர்களின் குடும்பங்களை வீதிக்கு விரட்டும் இது போன்ற நடவடிக்கைகளை ‘புதிய தலைமுறை’ நிர்வாகம் கைவிட வேண்டும். ஊழியர்களின் பணி நீக்கத்தை திரும்பப் பெற்று, அவர்களின் வேலையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் (MUJ) கேட்டுக்கொள்கிறது.

எல்.ஆர்.சங்கர் – தலைவர்
வ.மணிமாறன் – பொதுச்செயலாளர்

சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் (MUJ)18.11.2024

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response