விஜய் கட்சியின் அவசர செயற்குழு அரதப் பழசான தீர்மானங்கள் – சீமான் அடித்த அடி காரணமா?

நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற்றது.அதற்கடுத்து ஒரே வாரத்தில் இன்று அக்கட்சியின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைமை நிலையத்தில் நடைபெற்றது.

இக்கூட்டம் விஜய் தலைமையில் நடைபெற்றது.பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலை வகித்தார். தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மத நல்லிணக்கம்,ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு,பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு,சாதி வாரிக் கணக்கெடுப்பு,மாநிலத் தன்னாட்சி,விவசாய நிலங்கள் பாதுகாப்பு, மெட்ரோ ரயில் பணிகள் விரைந்து முடிக்கக் கோரிக்கை,ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பாதுகாப்பு,இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு,மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு,சட்டம் ஒழுங்கு சீர்கேடு,மதுக்கடைகள் மூடல்,சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை, மதுரையில் துணை தலைமைச்செயலகம்,இஸ்லாமியர் உரிமை, நீட் தேர்வு இரத்து

உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இத் தீர்மானங்கள் ஒரு கட்சியின் செயற்குழுக் கூட்ட தீர்மானம் போல இல்லாமல் தேர்தல் அறிக்கை போல் இருக்கிறது.இன்னொன்று இவை அனைத்தும் திமுக அதிமுக நாதக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பலமுறை நிறைவேற்றிய தீர்மானங்களாக இருக்கின்றன.

இப்போதுதான் மாநாடு நடத்தினார்கள்.உடனடியாக ஒரு செயற்குழுக் கூட்டம் நடத்தி இம்மாதிரி பழைய தீர்மானங்களை நிறைவேற்றக் காரணம் என்ன?

நவம்பர் 1 அன்று தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்,விஜய்யைக் கடுமையாக விமர்சித்துப் பேசியதோடு அவருக்கு அரசியல் அடிச்சுவடி கூடத் தெரியாது என்று சொல்லியிருந்தார்.

சீமான் கேட்ட கேள்விகளை விஜய்க்கு எல்லாம் தெரியும் என்று நம்பி வந்த பொறுப்பாளர்களும் எழுப்பத் தொடங்கிவிட்டனர் எனச் சொல்லப்படுகிறது.இதனால் விஜய் பயந்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.

அதனால் சீமான் அடித்த அடி வலிக்காதது போல் நடித்துக் கொண்டு, சீமான் பேச்சை மடைமாற்றி இவர்கள் நிறைவேற்றும் தீர்மானங்களைப் பற்றி எல்லோரையும் பேச வைக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக அரதப்பழசான தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

Leave a Response