மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூரில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்குற்பட்ட சுங்கச்சாவடியில் ஜூலை 10 ஆம் தேதி முதல் திருமங்கலம் உள்ளூர் வாடகை வாகனங்கள் அனைத்தும் 50 விழுக்காடு சுங்கக்கட்டணம் செலுத்தித்தான் கடந்து செல்லவேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்தது.
இது திருமங்கலம் உள்ளூர் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்புக் குழுவினர் மற்றும் பல்வேறு சங்கங்கள் ஜூலை 10 அன்று காலை 9 மணிக்கு கப்பலூர் சுங்கச்சாவடியை தங்களது வாகனங்களுடன் முற்றுகையிட்டனர். திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் உதயகுமார் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
காலை 9 மணிக்குத் துவங்கிய போராட்டத்தால் திருமங்கலத்திலிருந்து மதுரை நோக்கியும், மதுரையில் இருந்து தென்மாவட்டங்களை நோக்கியும் எந்த வாகனமும் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தது. இதனால் பள்ளி, கல்லூரி, மற்றும் வேலைகளுக்கு செல்வோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
தகவலறிந்து அவ்விடத்திற்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தினை கைவிட மறுத்ததால் சட்டமன்ற உறுப்பினர் உதயகுமார் உள்ளிட்டோரைக் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.
போராட்டக்காரர்கள்,அந்த வாகனத்தை எடுக்க விடாமல் தடுத்ததால் காவல்துறையினர் அனைவரையும் விடுவித்தனர். தொடர்ந்து பிற்பகல் பொக்லைன் இயந்திரத்துடன் டோல்கேட்டை இடிக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இந்த விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தை வரும் 15 ஆம் தேதி திருமங்கலத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் சுங்கச்சாவடி விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுமென்றும், அதுவரை திருமங்கலம் பகுதி வாகனங்கள் கட்டணமின்றி சென்று வரலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி,இன்று திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரத்தில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். கப்பலூர் சுங்கச்சாவடி உள்ளூர் வாகன விலக்கு விவகாரத்தில் தேசிய நெடுஞ்சாலைச் செயலருடன் அடுத்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இன்று நடந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததை அடுத்து ஒருவாரத்துக்கு பழைய நடைமுறையே தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.