மோடியின் கருத்தால் கோபமடைந்தாரா இரஷ்ய அதிபர்?

பிரதமர் மோடி, ரஷ்யா – இந்தியா இடையிலான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மாஸ்கோ சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் புதினைச் சந்தித்து, சர்வதேச விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

மோடி இரஷ்யாவில் இருந்த நேரத்தில், உக்ரைனில் உள்ள முக்கிய குழந்தைகள் மருத்துவமனையை இரஷ்யா ஏவுகணைகளால் தாக்கியதாகவும், நாடு முழுவதும் உள்ள மற்ற நகரங்கள் மீது ஏவுகணை மழை பொழிந்ததாகவும் உக்ரைன் தெரிவித்தது. இதனால், 41 குழந்தைகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து இரஷ்ய அதிபரிடம் பேசிய பிரதமர் மோடி, உக்ரைனில் நடந்த போரைப் பற்றி திறந்த மனதுடன் விவாதிக்க முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் போரைப் பற்றிய கருத்துகளை நாங்கள் மிகவும் மரியாதையுடன் பகிர்ந்துகொண்டோம்.நாட்டில் அமைதியை மீட்டெடுப்பதற்கு எல்லா வழிகளிலும் ஒத்துழைக்க இந்தியா தயாராக உள்ளது.போரோ, மோதல்களோ, பயங்கரவாதத் தாக்குதல்களோ எதுவாக இருந்தாலும், மனிதநேயத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் உயிர்ப் பலி ஏற்படும் போது வேதனை அடைகிறார்கள். ஆனால், அப்பாவிக் குழந்தைகள் கொல்லப்படும்போது, ​​அப்பாவிக் குழந்தைகள் இறப்பதைப் பார்க்கும்போது ​​மனதைக் கனக்கச் செய்கிறது.அந்த வலி மிகப் பெரியது. இதுபற்றி நான் ஏற்கனவே உங்களுடன் விவாதித்திருக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதனால் மோடியுடன் சென்ற இந்திய குழுவிற்கும், இரஷ்ய குழுவிற்கும் இடையே நடத்தப்பட வேண்டிய திட்டமிட்டப்பட்ட நிகழ்வு ஒன்று இரத்து செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் மோடி கூறிய கருத்துகளால், இரஷ்ய அதிபர் புதினுடனான உறவில் விரிசல் ஏற்பட்டதாக சில சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து இரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில்..

இரு நாட்டு தூதுக்குழுக்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த அமர்வை இரத்து செய்வது என்பது ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான் என்றார்.

Leave a Response