கர்நாடகாவில் சாலையோரம் விற்கப்படும் பானி பூரியின் தரம் குறித்து புகார்கள் எழுந்த நிலையில், அங்குள்ள சாலையோரக் கடைகள் முதல் உயர்தர உணவகங்களில் பானி பூரி மாதிரிகளைக் கைப்பற்றி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் புற்றுநோயை ஏற்படுத்தும் செயற்கை நிறமிகள் கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து தமிழகத்திலும் பானி பூரிக்கான மசாலா நீரில்பச்சை நிற நிறமி (டை) சேர்க்கப்படுவதாக புகார் எழுந்ததுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ளஅனைத்து பானி பூரி கடைகளிலும் பயன்படுத்தப்படும் பூரி மசால் மற்றும் மசாலா நீரின் மாதிரிகளை சோதனை செய்யவும், அதில் பயன்படுத்தப்படும் நீரின் தன்மை குறித்து ஆராயவும் அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை ஆணை பிறப்பித்துள்ளது.
இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பானி பூரி கடைகளில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது….
சென்னையைப் பொறுத்தவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பானி பூரி கடைகள் செயல்பட்டு வருகின்றன. பானி பூரி என்பது மிகவும் ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்று. சுறுசுறுப்புத் தன்மையை அதிகரிக்கும் ஓர் உணவு. ஆனால் பானிபூரி கடைகளில் முறையாக பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாமல், வெற்றுக் கையுடன் பானி பூரியை உடைத்து அதில் மசாலாவை வைத்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றனர். இது மிகவும் சுகாதாரமற்ற முறையாகும்.
சில இடங்களில் அடுத்த நாளுக்கும் ஒரே மசாலா நீரை பயன்படுத்துகின்றனர். இதனால் நோய்த் தொற்று விரைவாக ஏற்படும். மேலும் பானி தயாரிக்க ‘ஆப்பிள் கிரீன்’ எனப்படும் டையை (நிறமியை) கலக்குகின்றனர். இது புற்றுநோய்க்கான காரணியாக இருக்கலாம்.
எனவே புற்றுநோய்க்கான காரணிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.