பாஜகவுக்கு 370 வருகிற மாதிரி வாக்கு இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதா?

சனவரி 31 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 2 ஆம் தேதி முதல் நடந்து வந்தது. இதில், காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அவற்றிற்குப் பதில் அளித்து, மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார்.

அப்போது, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும்.பாஜகமட்டும் 370 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று கூறினார்.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் பினோய் விஸ்வம் கூறியதாவது….

பிரதமரின் இந்தப் பேச்சு, அவருக்கு வெற்றியில் நம்பிக்கை இல்லை, தேர்தலுக்குப் பயப்படுகிறார் என்பதைக் காட்டுகிறது. அவரது அரசாங்கம் செயலற்ற மற்றும் துரோக அரசு, வாக்குறுதிகளை மறந்த அரசாங்கம், நாட்டிற்கும் அதன் மதச்சார்பற்ற தன்மைக்கும் மட்டுமே தீங்கு விளைவித்த அரசாங்கம் என்பதால் மக்கள் அவர் மீது தீர்ப்பு வழங்குவார்கள் என்று அவர் உறுதியாக நம்புகிறார். அரசின் வாக்குறுதிகள் மற்றும் உத்தரவாதங்கள் என்ன ஆனது? பெண்கள், பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு இந்த அரசு என்ன செய்தது?. மோடி வாக்குறுதியளித்த இரண்டு கோடி வேலைகள் எங்கே?. கடந்த ஆண்டு மே மாதம் முதல் இனக்கலவரம் நடந்து வரும் வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு பிரதமர் இன்னும் ஏன் செல்லவில்லை?. பிரதமர் மணிப்பூருக்குச் சென்று மணிப்பூர் பெண்களிடம் மன்னிப்பு கேட்க ஏன் தயாராக இல்லை? என்று நாங்கள் கேட்கிறோம் என்றார்.

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜான் பிரிட்டாஸ் கூறியதாவது…..

இந்த நாட்டில் அனைவருக்கும் கனவு காண உரிமை உள்ளது. பிரதமருக்கும் 400 அல்லது 500 இடங்கள் வேண்டும் என்று கனவு காண உரிமை உள்ளது. ஆனால் உண்மை வேறுவிதமானது. நாட்டு மக்கள் தங்கள் நடவடிக்கையை தாங்களே தீர்மானிப்பார்கள். அவர்களுக்கு வேறு தலைவரைப் பற்றி கனவு உள்ளது என்றார்.

காங்கிரசு பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறியதாவது…..

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க 370 ஐ தொடவில்லை என்றால் மோடி பதவியேற்க மாட்டாரா? அவர் முதலில் பதில் சொல்ல வேண்டும். பாஜகவின் இந்த மாதிரியான கனவு எப்போதுமே தோற்றுப்போனது. இது ‘இந்தியா ஒளிர்கிறது’ பாகம் 2ஆகப் போகிறது என்றார்.

பகுஜன் சமாஜ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டேனிஷ் அலி கூறியதாவது….

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் காரணமாக 400 இடங்கள் கிடைக்கும் என்று மோடி நம்பி இருக்கலாம். அவர் பதவியின் கண்ணியத்தையாவது காப்பாற்ற வேண்டும். 2024 இல் அவரது திமிர் உடைந்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response