2022 மே 22 ஆம் தேதிக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இப்போது, இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விலை பேரல் 70 டாலர் முதல் 80 டாலருக்குள் இருக்கிறது. எனவே, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதையடுத்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைக் குறைப்பு தொடர்பாக நிதி அமைச்சகமும் பெட்ரோலிய அமைச்சகமும் ஆலோசனை நடத்துவதாகவும் செய்திகள் வெளியாகின.
கடந்த சில மாதங்களாக இரு அமைச்சகங்களும் இந்த ஆலோசனையில் ஈடுபட்டன. அப்போது, பெட்ரோலுக்கு எவ்வளவு விலை குறைக்கலாம், டீசலுக்கு எவ்வளவு விலை குறைக்கலாம் என்பது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது, பெட்ரோல், டீசலுக்கு தலா 10 ரூபாய் வரை குறைக்கலாம் என்று இரு அமைச்சகங்களும் முடிவு செய்தன. அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு தொடர்பான பரிந்துரையை நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
எனவே,2024 ஆங்கிலப் புத்தாண்டுப் பரிசாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைக் குறைப்பு அறிவிப்பு வெளியாகும் என்று பரவலாகப் பேசப்பட்டது.
இதனால், மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். ஆனால், எதிர்பார்த்தபடி சனவரி 1 அன்று விலைகுறைப்பு அறிவிப்பு எதுவும் வரவில்லை.இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் இருந்தனர்.
இந்நிலையில்,தற்போது பெட்ரோல் டீசல் விலையைக் குறைப்பதற்கான திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை என பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாக வெளியாகும் செய்திகள் மேலும் ஏமாற்றத்தைத் தருவதாக மக்கள் வருந்துகின்றனர்.