ஆளுநர்களுக்குத் தனியாக எந்த அதிகாரமும் கிடையாது – உச்சநீதிமன்றம் அதிரடி

பஞ்சாபில் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு பதவியில் இருக்கிறது. இந்த அரசுக்கு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடர்ந்து இடையூறு செய்து வந்தார்.

மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கிடப்பில் போட்டிருந்தார். இதை எதிர்த்து பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நவம்பர் 10 ஆம் தேதி தீர்ப்பளித்தது.

விரிவான தீர்ப்பு உச்ச நீதிமன்ற இணைய தளத்தில் நேற்று முன்தினம் இரவு பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது…

ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத தலைவர். ஆளுநருக்கு சில அரசியலமைப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், மாநில சட்டப்பேரவைகள் சட்டம் இயற்றுவதை தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநர் தடுக்க முடியாது. குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநர், பெயரளவில்தான் மாநிலத்தின் தலைவர். ஆளுநருக்கு, தனியாக எந்த அதிகாரமும் கிடையாது. மாநில அரசும் அதன் அமைச்சர்களும் சொல்கிறபடிதான் ஆளுநர் நடந்துகொள்ள வேண்டும். ஆளுநர் இதுபோல செயல்படவில்லை என்றால், அது சட்டப்பேரவையின் நடவடிக்கைகளைத் தடுக்கும் செயலாக மாறிவிடும். மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாவை ஆளுநர் தனக்குள்ள கட்டுப்பாடற்ற விருப்புரிமையைப் பயன்படுத்தி தடுக்க முயல்வது நாடாளுமன்ற ஆட்சி முறையை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணானது.

ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு மூன்று வழிமுறைகள் உள்ளன. அதன்படி மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இருக்கலாம் அல்லது ஜனாதிபதியின் பரிசீலனைக்காக மசோதாவை அனுப்பலாம் அல்லது மறுபரிசீலனை தேவைப்படும் அம்சங்களின் தேவையான குறிப்புகளுடன் கூடிய ஒரு மசோதாவை ஆளுநர் சட்டப்பேரவைக்குத் திருப்பி அனுப்பலாம். திருத்தங்களுடனோ அல்லது இல்லாமலோ மசோதாவை மீண்டும் சட்டப்பேரவை நிறைவேற்றினால், அதற்கு ஆளுநர் கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டும். அரசியல் சட்டம் 200 ஆவது பிரிவு அளித்துள்ள அதிகாரப்படி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்திவைக்க ஆளுநர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.

ஒரு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்தால், அதை சட்டப்பேரவையின் பரிசீலனைக்குத் திரும்ப அனுப்புவதுதான் சரியான வழி. கூட்டாட்சியும் ஜனநாயகமும் பிரிக்க முடியாதவை. இதில் ஏதாவது ஒரு அம்சம் நீர்த்துப்போகும் போது அது மற்றொன்றை ஆபத்தில் ஆழ்த்துகிறது. ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி நமது குடிமக்களின் அடிப்படை சுதந்திரங்கள் மற்றும் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு இன்றியமையாதது. இதில் ஏதாவது ஒன்று பாதிக்கப்படும் போதெல்லாம், அது அரசியலமைப்பு நிர்வாகத்தைப் பாதிக்கிறது. பஞ்சாப் சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் முறைப்படி முடித்து வைக்கப்படாத நிலையில், கடந்த ஜூன் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடைபெற்ற கூட்டம் அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும்.

அப்படி, சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்ட பேரவைத் தலைவருக்கு முழு அதிகாரமும் உள்ளது. சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவையை நடத்துவதற்கு பேரவைத் தலைவர் இருக்கிறார். அப்படி இருக்கும்போது, அந்தக் கூட்டத்தை சட்டப்பூர்வமானதல்ல என்று ஆளுநர் கூறுவது ஜனநாயகத்துக்கு பேராபத்தாக முடிந்துவிடும். அப்படி ஒரு சந்தேகத்தை எழுப்ப ஆளுநருக்கு எந்தவித உரிமையும் கிடையாது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் உண்மையான அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குதான் உண்டு. அமைச்சர்களுக்கும், அமைச்சரவைக்கும் சட்டப்பேரவைக்குப் பதிலளிக்க வேண்டியது கட்டாயம்.

அமைச்சர்களின் செயல்பாடுகளை மாநில சட்டப்பேரவை ஆய்வு செய்யலாம். ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களை ஆளுநர் எப்படி பரிசீலனை செய்ய வேண்டும் என்று எந்தக் கருத்தையும் உச்ச நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. ஆனால், அரசியல் சட்டம் 200 ஆவது பிரிவின் விதிகள்படி ஆளுநர் மசோதாக்களை பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ள நிலையில், தமிழ்நாடு, கேரளா மாநிலங்களும் அந்தந்த மாநில ஆளுநர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்குகள் தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response