சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால் ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார் அமைச்சர் செந்தில்பாலாஜி.அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின் சிறையில் அடைக்கப்பட்டார்/
அவருடைய பிணை மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.
இதையடுத்து, அவருக்கு பிணை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பீலா எம்.திரிவேதி, சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் நவம்பர் 20 ஆம் தேதி திங்கள்கிழமையன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, செந்தில் பாலாஜிக்கு இதய பிரச்சினை உள்ளது. அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்கு தற்போது இடைக்கால ஜாமீனாவது வழங்க வேண்டும்.
மேலும், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மருத்துவக் காரணங்களுக்காகத்தான் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது அவருக்கு இருக்கும் இதயக் குழாய் அடைப்புக்கு உரிய சிகிச்சை வழங்கவில்லை என்றால், அது அவருக்கு ஆபத்தாக முடியும். குறிப்பாக, உரிய சிகிச்சை வழங்கவில்லை என்றால் அவர் ‘பக்கவாதம் நோய்க்கு’ தள்ளப்படுவார்” என்று வாதிட்டார்.
அதற்கு அமலாக்கத் துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “மருத்துவ அறிக்கையில், செந்தில்பாலாஜிக்கு மருத்துவமனையில் அனுமதித்துத் தான் சிகிச்சை வழங்க வேண்டும் என்று எங்கும் கூறவில்லை” என்றார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமைச்சர் செந்தில்பாலாஜியின் எம்ஆர்ஐ ஸ்கேன் அறிக்கை உள்ளிட்ட மருத்துவ அறிக்கைகள் மற்றும் சிகிச்சை தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 28 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.