மதுரை வலையங்குளத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக எழுச்சி மாநாடு நேற்று நடந்தது.அதேநேரம், ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்களுடன் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
மதுரையில் பழனிசாமி தலைமையில் நடைபெறும் மாநாடு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கூட்டத்தில் பேசியவர்கள் விமர்சித்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரியில் நேற்று மாலை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த மாவட்டச் செயலாளர்கள் பேசினர்.
அவர்கள் பேசியதாவது….
மதுரையில் பழனிச்சாமி நடத்தி வருவது மாநாடு இல்லை. அதுபண பலத்தைக் கொண்டு கூட்டப்படும் கூட்டம். மதுரையில் மீனாட்சியம்மன் கோயில்தான் உயரமானது. அதற்குமேல் ஹெலிகாப்டரில் மலர்களைத் தூவி இருக்கிறார்கள். இதன்மூலம் மீனாட்சியம்மனின் சாபத்துக்கு பழனிச்சாமி ஆளாகி இருக்கிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்து, அவரது சாபத்துக்கும் ஆளாகி இருக்கிறார். பழனிச்சாமி நடத்தும் மாநாட்டால் தமிழகத்தில் எந்தத் தாக்கமும் ஏற்படவில்லை.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை முறையாக விசாரிக்காத திமுக அரசுக்கு எதிராக ஓபிஎஸ் அறிவித்து நடத்திய ஆர்ப்பாட்டம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த அளவுக்கு பழனிச்சாமியின் மாநாடு பேசப்படவில்லை.
பழனிச்சாமியை டெல்லிக்கு அழைத்து பிரதமருக்கு அருகில் அமர வைத்து, மாலை போட வைத்தார்களே என்பதை நினைத்தால் கவலையாக இருக்கிறது. தனது தலைமையில் 8 தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய பழனிச்சாமி, பிரதமர் மோடியையும் தோற்கடித்து விடுவாரோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. 2026 தேர்தலில் ஓபிஎஸ்ஸை முதல்வராக்க அனைவரும் பாடுபட வேண்டும்.
இவ்வாறு மாவட்டச் செயலாளர்கள் பேசினர்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன், ஐயப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜேசிடி பிரபாகர், புகழேந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.