தமிழ்நாடு கல்விக்கொள்கை விரைவில் நடைமுறைக்கு வரும் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஒரே மாதிரியான பொதுப் பாடத்திட்டம் கொண்டு வருவது தொடர்பாக, பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உயர்கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்துக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார்.

உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். இதில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேல்ராஜ், சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் கெளரி உள்பட துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பல்கலைக்கழகங்களில் பொதுப் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்ட விவகாரம், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நிகழ்வுகள், காலிப் பணியிடங்கள் குறித்த விவகாரம் உள்பட பல்வேறு விசயங்கள் குறித்து கிட்டதட்ட 2 மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடந்தது.

ஆலோசனை முடிவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது…..

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கு 100 விழுக்காடு ஒரே மாதிரியான பாடத்திட்டங்களும், மற்ற பாடங்களுக்கு 75 விழுக்காடு பாடத்திட்டங்களும் உருவாக்கப்படும், மற்ற பாடங்களுக்கான மீதமுள்ள 25 விழுக்காடு அந்தந்த பல்கலைக்கழகங்களின் பாடவாரியங்கள் (போர்டு ஆப் ஸ்டடிஸ்) முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, பாடத்திட்டங்கள் ஒரு மாதத்துக்கு முன்பு அனைத்து துணைவேந்தர்களின் ஒத்துழைப்போடு முடிவு செய்யப்பட்டு, அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பப்பட்டுவிட்டது.சில இடங்களில் புதிய படிப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்தப் படிப்புகளுக்கு அடுத்தாண்டு முதல் புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்படும். கிட்டதட்ட 90 விழுக்காடு புதிய பாடத்திட்டங்கள் அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டு, இந்த ஆண்டு முதல் பொதுப் பாடத்திட்டமாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தப் பொதுப் பாடத்திட்டத்தால் பல்கலைக்கழகங்கள், பாடவாரியங்களின் அதிகாரங்களில் எந்தப் பாதிப்பும் இல்லை. அவர்களோடு ஆலோசித்துத்தான் இந்தப் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் ஒரு கல்லூரியில் இருந்து மற்றொரு கல்லூரிக்குப் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கும், ஒரு கல்லூரியில் பணிபுரிந்து மற்றொரு கல்லூரிக்கு இடமாறுதல் செல்லும் பேராசிரியர்களுக்கும் பாடத்திட்டங்கள் எளிதாக இருக்கும். இதனை அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களும் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். பொதுப் பாடத்திட்டம் எல்லோருக்கும் பயன் பெறும் வகையிலும், கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையிலும், எல்லோருக்கும் வாய்ப்பைக் கொடுக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுப் பாடத்திட்டம் 2023-24 ஆம் கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் அமல்படுத்தப்படும். கூடுதலாகக் கொண்டுவரப்படும் புதிய படிப்புகள் இந்த ஆண்டு புதிய பாடத்திட்டங்கள் வரையறுக்கப்பட்டு, அவர்களுக்கு 2024-25 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும். அந்த வகையில் அரசு, அரசு உதவி பெறும், தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகளில் இந்தப் பொதுப் பாடத்திட்டங்கள் ஒரே மாதிரியாக பின்பற்றப்படும். கவுரவ விரிவுரையாளர்கள் ஊதிய பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அவர்களின் ஊதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்த முதல்வர் அனுமதி அளித்துள்ளார்.

தமிழ்நாடு கல்விக் கொள்கைக்குழு தயாராகி வருகிறது. அதுவும் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும். எல்லாப் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பேராசிரியர்களின் தகுதி, ஊதியம், கற்றல் பணியில் இல்லாத பணியாளர்களுக்கு ஊதியம் சமமாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக அடுத்த மாதம் (ஆகஸ்ட்) பேச உள்ளோம். ஸ்லெட் தேர்வை இந்த ஆண்டு நடத்துவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளராக (பொறுப்பு) இருந்த ஜி.ரவிக்குமார் மாற்றப்பட்டு, எம்.ஐ.டி கல்லூரியின் முதல்வராக உள்ள ஜெ.பிரகாஷ் அந்த இடத்துக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆளுநரின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த மாற்றத்தை துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிகழ்வு நேற்றைய துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வெடித்தது. இக்கூட்டத்தில் துணைவேந்தர் வேல்ராஜ் பேசியதற்கு அமைச்சர் பொன்முடி மிகவும் கோபமாகவே பதிலளித்தார்.

அவர் பேசும்போது, ஒரு கல்லூரியின் முதல்வராக இருப்பவரை பொறுப்பு பதிவாளராக ஏன் நியமிக்க வேண்டும்? எதன் அடிப்படையில் இந்த நியமனத்தைச் செய்தீர்கள்? இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்கக்கூடாது. இனி அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்களை தனிக்குழு அமைத்து அதன்மூலமே தேர்வு செய்ய வேண்டும் என்றார்.

மேலும், பல்கலைக்கழகப்பணிகளை ஆளுநரிடம் கேட்டுத்தான் துணைவேந்தர்கள் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. பட்டமளிப்பு விழாவுக்கான தேதியை மட்டுமே ஆளுநரிடம் கேட்க வேண்டும். சிறப்பு விருந்தினர் யார் என்பதை துணைவேந்தர்களே முடிவு செய்யலாம். அதேபோல், யுஜிசி வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றுவது கட்டாயமில்லை. நமது மாநிலத்தில் என்ன சூழல் நிலவுகிறதோ அதற்கேற்பத்தான் செயல்பட வேண்டும்

என்று கூறியுள்ளார்.

Leave a Response