தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி மானியக் கோரிக்கையின்போது அறிவித்தபடி, 500 மதுபான சில்லறைக் கடைகள் (டாஸ்மாக்) இன்று முதல் மூடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பெண்கள் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கையின்போது, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5,329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என அறிவித்தார். இந்நிலையில், அந்த 500 கடைகளை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதம் அளித்த பேட்டியில், “500 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். தமிழகம் முழுவதும் பாதுகாப்புக்காக டாஸ்மாக் மதுபானக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும்” என்று தெரிவித்தார். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை நேற்று நடந்து முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த, மதுபானம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியிடம் வழங்கப்பட்டது. அவரும் விரைவில், தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்….
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின்போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேற்படி, அறிவிப்பிற்கிணங்க 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிட 20.04.2023 நாளிட்ட அரசாணை எண்.140, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வெளியிட்டது.
இந்த அரசாணையைச் செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக்கடைகளில் 500 கடைகளைக் கண்டறிந்து அவற்றை 22.6.2023 (இன்று) முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மேற்குறிப்பிட்ட 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இன்று முதல் செயல்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* மண்டல வாரியாக மூடப்படும் மதுக்கடைகள் விவரம்
சென்னை மண்டலத்தில் மூடப்படும் 138 கடைகள்
சென்னை வடக்கு 20
சென்னை மத்தி 20
சென்னை தெற்கு 21
காஞ்சிபுரம் வடக்கு 15
காஞ்சிபுரம் தெற்கு 16
திருவள்ளூர் கிழக்கு 32
திருவள்ளூர் மேற்கு 14
திருச்சி மண்டலத்தில் 100 கடைகள்
திருச்சி 16
நாகப்பட்டினம் 7
தஞ்சாவூர் 15
புதுக்கோட்டை 12
கடலூர் 11
திருவாரூர் 10
விழுப்புரம் 21
பெரம்பலூர் 8
* சேலம் மண்டலத்தில் 59 கடைகள்
சேலம் 17
தர்மபுரி 4
கிருஷ்ணகிரி 2
நாமக்கல் 18
வேலூர் 8
திருவண்ணாமலை 8
அரக்கோணம் 2
* கோவை மண்டலத்தில் 78 கடைகள்
கோவை வடக்கு 10
கோவை தெற்கு 10
திருப்பூர் 24
ஈரோடு 24
நீலகிரி 3
கரூர் 7
* மதுரை மண்டலத்தில் 125 கடைகள்
மதுரை வடக்கு 9
மதுரை தெற்கு 12
திண்டுக்கல் 15
சிவகங்கை 14
ராமநாதபுரம் 8
விருதுநகர் 17
நெல்லை 13
தூத்துக்குடி 16
தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவுக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பெண்கள் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.