சு.வெங்கடேசன் மீதான குற்றச்சாட்டு – சிபிஎம் விளக்கம்

தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன் தனது சுட்டுரை பக்கத்தில் மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை விமர்சித்து கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய மதுரை காவல்துறையினர் ஜூன் 16 அன்று பா.ஜ.க. மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர். இந்த வழக்கில் பா.ஜ.க. மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவிற்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் அளித்து மதுரை மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ராம்சங்கரன் உத்தரவிட்டார்.அதைத் தொடர்ந்து, எஸ்.ஜி.சூர்யாவை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இது குறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன், “மலக்குழி மரணங்களின் மீது முதலமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் அதைப்பற்றிக் கேள்வி எழுப்பிய எஸ்.ஜி.சூர்யாவை தண்டிக்க முயற்சி எடுப்பது நியாயமா? தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்டின் இரட்டை வேட நிலைப்பாடு, அதுவும் முக்கியமான சமூகப் பிரச்சினையில், வெட்ட வெளிச்சமாகி உள்ளது. பா.ஜ.க. தொண்டர்கள் அனைவரும் மனம் தளராமல் சட்ட ரீதியாக இதனை எதிர்த்துப் போராடுவோம்” என்று பதிவிட்டார்.

அதற்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

அதில்,”ஒரு பொய்யை உண்மையாக்க ஒன்றிய நிதியமைச்சர், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் என எல்லோரும் களம் இறங்கி உள்ளனர். மலக்குழி மரணங்களுக்கு எதிராக பிணவறைகள் முன்பும், காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு கோரியும் தொடர்ந்து களம் காண்கிற அமைப்பு மார்க்சிஸ்ட் கட்சி. மனிதக் கழிவை மனிதர் அகற்றும் கொடுமைக்கு முடிவு கட்ட இயந்திர பயன்பாட்டைக் கொண்டுவர என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டிய மத்திய அரசின் முக்கியத் துறை அமைச்சர்கள் சமூக வலைதளத்தில் பொய்யை, பீதியை பரப்புகிற ஒருவருக்காக இவ்வளவு அக்கறை எடுத்து, நேரம் செலவழித்து வக்காலத்து வாங்குவது உண்மைக்கும் இவர்களது அரசியல் நோக்கத்துக்கும் எவ்வளவு பெரிய இடைவெளி உள்ளது என்பதையே காட்டுகிறது. பிரச்சினை என்ன? – “மதுரை மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் என்ற பேரூராட்சியில் மலக்குழி மரணம் நிகழ்ந்தது. கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் நிகழ்ந்தது. சு.வெங்கடேசன் எம்.பி. கள்ளமெளனம் காக்கிறார்” என்று அவர்கள் கூறியுள்ளனர். ஒரு நிதி மந்திரிக்கு அப்படி ஒரு பேரூராட்சி மதுரை மாவட்டத்தில் இருக்கிறதா என்று கூட பார்த்து விட்டு கருத்துக் கூற முடியாதா? இன்னொருவர் தகவல் தொழில் நுட்ப மந்திரி. அந்த இலாகாவை “பொய் மற்றும் அவதூறு தகவல் தொழில் நுட்ப மந்திரி” என்று மாற்றி விடலாமா? முழுவதும் வதந்தியால் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செய்தியை சுற்றுக்கு விடுவது சமூகப் பதற்றத்தை உருவாக்கும் என்பதுதான் பிரச்சினை. ஆகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் கொடுத்தது. இதில் வேடிக்கை என்னவெனில், கருத்து சுதந்திரம் பற்றி மத்திய மந்திர்கள் பேசி இருப்பதுதான். உலகில் “இணையதள முடக்கம்” செய்வதில் ஐந்து ஆண்டுகளாக முதல் இடத்தில் இந்தியாவை வைத்திருப்பவர்கள். கோவிந்த பன்சாரே, கௌரி லங்கேஷ் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் மிதந்தபோதெல்லாம் கருத்து சுதந்திரம் பற்றி கவலைப் படாதவர்கள் ஒரு போலிச் செய்தி நபருக்கு ஆதரவாக வருவதுதான் நகை முரண். பொய் உங்கள் ஆயுதம். உண்மையே என்றும் எங்களின் கவசம்.

இவ்வாறு சு.வெங்கடேசன் கூறியிருந்தார்.

அதன்பின், மரணம் நடந்தது மதுரையில் அல்ல கடலூரில் என்பது தவிர மற்ற அனைத்தும் உண்மையே என பாஜக தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், கடலூரில் என்ன நடந்தது? என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் வெளியிட்டிருக்கும் பதிவு….

அண்மையில் தூய்மைப் பணியாளர் தேசிய ஆணைய உறுப்பினர் மா.வெங்கடேசன் அவர்கள் ட்விட்டர் பதிவு ஒன்றைச் செய்திருந்தார். பெண்ணாடம் பேரூராட்சி 12 ஆவது வார்டு சிபிஎம் கவுன்சிலர் விஸ்வநாதன் கட்டாயப் படுத்தியதால் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த (பாபு என்ற) ஒரு தூய்மைப் பணியாளர், அரிப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக பின்னர் மரணம் அடைந்தார் என்றும், இக்குற்றத்துக்காக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் எஸ்பி ஆகியோருக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பதிவுடன் சேர்த்து பாபு சாக்கடைக்குள் இறங்கி பணி செய்யும் வீடியோ ஒன்றை இணைத்திருந்தார்.

பெண்ணாடம் பேரூராட்சி கடலூர் மாவட்டத்தில் உள்ளது. அதன் 12 ஆவது வார்டு சிபிஎம் கவுன்சிலர் விஸ்வநாதன்.

சமூக பொருளாதார ஏணிப் படியில் கடைக்கோடியில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஏழை தொழிலாளியின் உயிரிழப்பு பெரும் சோகம். அதே சமயம் உண்மைகளின் அடிப்படையில் வெங்கடேசன் அவர்களது பதிவு இருந்திருக்க வேண்டும் என குறிப்பிட விரும்புகிறோம்.

முதலில் வெங்கடேசன் அவர்கள் பதிவு செய்த வீடியோ, விஸ்வநாதன் வார்டு சம்பந்தப்பட்டதல்ல.
அடுத்து அவர் பதிவிட்டிருந்த செய்தியின் உண்மைத் தன்மைக்கு வருவோம். 13.05.23 அன்று விஸ்வநாதன் வார்டுக்கு பாபுவும், மேலும் இருவரும் திறந்த சாக்கடை ஒன்றைச் சுத்தம் செய்யும் பணி செய்துள்ளனர். அப்போதும் கூட பாபு சாக்கடையில் இறங்கவில்லை. எனவே கவுன்சிலர் கட்டாயப்படுத்தினார் என்கிற பிரச்சனைக்கு இடமில்லை. அதன் பிறகு 19.05.23 வரை 6 நாட்கள் வெவ்வேறு வார்டுகளில் பாபு சாக்கடை சுத்தம் செய்யும் பணி செய்துள்ளார். (இதற்கான ஆவணங்கள் உள்ளன).

19.05.23 மாலை பாபு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளூர் மருத்துவமனைக்குச் சென்றார். அடுத்த நாள் மயங்கி விழுந்து, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை உள்ளிட்டு அடுத்தடுத்து சிகிச்சை எடுத்து இறுதியில் திருச்சி காவேரி மருத்துவமனையில் 24.05.23 அன்று காலமானார்.

காவேரி மருத்துவமனையின் death summary, மூளை வீக்கத்துக்காக அறுவை சிகிச்சை செய்தும் பலனின்றி பாபு மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்று குறிப்பிடுகிறது. அதாவது கவுன்சிலருக்கும் இந்த மரணத்துக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது.

மரணத்தின் காரணம் அதிகாரப்பூர்வமாக வெளிவராத அன்றைய சூழலில், அரசு சார்பில் மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் அவர்கள், பாபுவின் தாயாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து இழப்பீடாக ரூ.3 இலட்சம் அளித்துள்ளார். கள்ளச்சாராய மரணத்திற்கு தமிழக அரசு அளித்தது போல் ரூ.10 இலட்சம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி ஊழியர் சங்க சார்பில் கலெக்டருக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பாபுவின் மனைவி தீபா அவர்கள், காவல்துறைக்கு அளித்த புகாரில், தேதி, சம்பவங்கள், இறப்பின் காரணம் உட்பட உண்மைக்குப் புறம்பாக பல செய்திகளை எழுதியுள்ளது வருந்தத்தக்கது. கவுன்சிலரை குற்றவாளி ஆக்கும் நோக்கத்தோடு தவறான விவரங்கள் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. கணவரை இழந்து வாடும் தீபா அவர்களின் துன்பத்தைப் பகிரும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. அதே சமயம், சிபிஎம் மீதான காழ்ப்புணர்ச்சியோடு, அவரது துயரத்தைப் பயன்படுத்தி, தூண்டி விட்டு, தவறாக புகார் கொடுக்க வைத்ததில், உள்ளாட்சித் தேர்தலில் விஸ்வநாதனுடன் போட்டியிட்டு தோற்ற பாஜக வேட்பாளருக்கு பங்கு இருப்பதாக சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. ஒரு ஏழையின் உயிரை வணிகப் பொருளாக்குவது பற்றியெல்லாம் பாஜகவுக்கு கவலையில்லை.

அடுத்து, எவ்வித ஆதாரமும் இல்லாமல், சிபிஎம் மீது ஆணைய‌ உறுப்பினர் அவசர அவசரமாக ஏன் குற்றம் சாட்ட வேண்டும்? மேலும் அவரது பதிவின் பின்னூட்டத்தில், மதுரை சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன் மீது வசைமாரி பொழிகிறார். எனவே ஆணைய உறுப்பினரின் நோக்கம் சு.வெங்கடேசனையும், சிபிஎம் கட்சியையும் அவதூறு செய்வது தான், அதற்காக ஆணையத்தின் அந்தஸ்தை தவறாகப் பயன்படுத்துகிறார் என்ற முடிவுக்குத் தான் வர வேண்டியுள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது.

தூய்மைப் பணியாளர்களின் நிலைமை துயரமாகவே தொடர்கிறது. அதனை மேம்படுத்த சிபிஎம் விடாமல் போராடி வருகிறது. வரும் காலத்திலும் இப்பணி தொடரும். தமிழகம் முழுவதும், கடலூர் மாவட்டத்திலும் நடந்த மலக்குழி மரணங்களில் தலையிட்டு போராடி நீதி பெற்றுக் கொடுத்துள்ளது.

உண்மை இப்படியிருக்க, பாதிக்கப்பட்டவர் பட்டியலினத்தவர் என்பதால் சிபிஎம் எம்.பி. கண்ணையும் வாயையும் மூடிக் கொண்டிருக்கிறார் என ஆணைய உறுப்பினர் பதிவிடுவது பொய் என்பது மட்டுமல்ல, விஷமத்தனமானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது.

தீண்டாமை உள்ளிட்ட சமூகக் கொடுமைகளை சமரசம் இன்றி எதிர்த்து வரும் எங்கள் இயக்கத்திற்குத் திட்டமிட்டு அவப்பெயர் ஏற்படுத்துவதையும், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, சிபிஎம் எம்.பி.யை அவதூறு செய்வதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஆணைய உறுப்பினர் தனது தவறான பதிவை அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்டக் குழு சார்பில் வலியுறுத்துகிறோம்.

– கோ.மாதவன், மாவட்டச் செயலாளர்

இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response