ஞெகிழிப் பயன்பாட்டைக் குறையுங்கள் – உலக சுற்றுச்சூழல்நாள் செய்தி

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஞெகிழிப் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட துணை சுகாதாரத்துறை இயக்குநர்களுக்கு பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது….

உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாள் ஜூன் 5 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாளின் இந்த ஆண்டு கருப்பொருள் ஞெகிழிப் (பிளாஸ்டிக்) பயன்பாட்டைத் தவிர்ப்பதுதான். அதனால், ஞெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கையை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

ஒரு கிலோ ஞெகிழிக் கழிவுகள், அது மக்கும் காலம் வரை தொடர்ந்து 4.2 கிலோ கரியமிலவாயுவை உற்பத்தி செய்வதற்கு வழி வகுக்கிறது. இது புறச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துமாறு சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனிப்பட்ட முறையிலும், அலுவலகங்களிலும் ஞெகிழிப் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவலகங்களில் ஞெகிழித் தட்டுகள், குவளைகள், குடுவைகளுக்கு மாற்றாக வேறு பொருள்களைப் பயன்படுத்தப்படுவதையும், உடல் ஆரோக்கியத்துக்கு நடைபயிற்சியையும் ஊக்குவிக்க வேண்டும். காற்று மாசுபாட்டைத் தவிர்க்க பொது போக்குவரத்தையும், மிதிவண்டியையும் பயன்படுத்தலாம்.

மின் சிக்கனம், தண்ணீர் சிக்கனம் மற்றும் உணவுப் பொருள்களை வீணாக்காமல் உரமாகப் பயன்படுத்துதல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response