முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளான இன்று வியாழக்கிழமை (18.05.2023) தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் அதன் தலைமைப் பணிமனையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பகிர்ந்தளிக்கப்பட்டது.
போரில் புதுமாத்தளனில் தனது கணவனைப் பலிகொடுத்த திருமதி தக்சாயினி அருள்நேசநாதன் நினைவுத்தீபம் ஏற்றி வைக்க, போரில் கொல்லப்பட்டவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் இடம்பெற்றது.
இக்கஞ்சி வழங்கல் நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், பொதுச்செயலாளர் ம.கஜேந்திரன், துணைப் பொதுச்செயலாளர் சண்.தயாளன், பொருளாளர் க. கேதீஸ்வரநாதன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
வீதியால் பயணித்தோர் மற்றும் பாடசாலை மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் முள்ளிவாய்க்கால் கஞ்சியை உணர்வுடன் வாங்கி அருந்திச்சென்றனர்.
2009ஆம் ஆண்டு இறுதிப்போரில் முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் இனவழிப்பை நினைவுகூரும் முகமாக மே 12 தொடங்கி 18 வரையான நாட்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாகத் தமிழ் மக்களால் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாட்களில், போரின் இறுதிக்காலத்தில் முற்றுகைக்குள் ஆளாகியிருந்த தமிழ் மக்களின் ஒரேயொரு உயிர்காப்பு ஆகாரமாக விளங்கிய கஞ்சி முள்ளிவாய்க்கால் கஞ்சி என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.
போர்க்காலத்தில் தமிழ் மக்கள் பட்ட வதைகளை நினைவிற்கொள்ளும் முகமாகவும், பட்ட வலிகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்லும் விதமாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு ஒரு குறியீடாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.