இன்று உலக ஊடக சுதந்திர நாள் (Press Freedom Day).இதையொட்டி சென்னை பத்திரிகையாளர் யூனியன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்…….
கண்காணிப்பு – உளவு மென்பொருட்களால் கருத்து சுதந்திரத்திற்கும் ஊடக சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தல்!
பத்திரிகையாளர்கள், சமூகச்செயல்பாட்டாளர்களுக்கு எதிராக்க் கண்காணிப்பு – உளவு தொழில்நுட்பங்களை இந்தியா உட்பட உலகம் முழுவதும் அரசுகள் பயன்படுத்தி வருகின்றன.
இந்தியாவில் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்ட தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கண்காணிப்பு – உளவு மென்பொருட்களால் ஏற்பட்டிருக்கும் இந்த அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இந்த ஆண்டு உலக பத்திரிகை சுதந்திர தினத்தின் கருப்பொருளாக, *”மனித உரிமைகள் அனைத்துக்கும் செயல் ஊக்கியாக இருப்பது கருத்து சுதந்திரமே”* என அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகை சுதந்திர குறியீட்டில் 2021 ஆம் ஆண்டு 142 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2022 ஆம் ஆண்டு 150 ஆவது இடத்துக்குச் சென்றுவிட்டது. இந்தியாவில் ஊடக சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் எத்தகைய நிலையில் இருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது.
எனவே, கருத்து சுதந்திரத்தையும் ஊடக சுதந்திரத்தையும் முடக்க முயற்சிக்கும் அரசுகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றிணைவோம்; குடிமை (சிவில்) சமூகத்துக்கு விழிப்புணர்வூட்டுவோம் என சென்னை பத்திரிகையாளர் யூனியன் வேண்டுகோள் விடுக்கிறது.
எல்.ஆர்.சங்கர்
தலைவர்
வ. மணிமாறன்
பொதுச்செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ)
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.