கூடங்குளம் அணு உலை இயக்கப்பட்டால் பேரழிவு உறுதி- சுப.உதயகுமார் எச்சரிக்கை

கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூடக்கோரி சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையம் அருகில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தலைமை தாங்கினார்.

போராட்டத்தின்போது, தொடர்வண்டி நிலையத்திற்கு வந்த பயணிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதுகுறித்து சுப.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:–

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள முதல் உலை கடந்த ஜூன் மாதம் 24–ந் தேதி மூடப்பட்டது. 6 மாத காலமாக இந்த உலை மூடப்பட்டு தான் உள்ளது. இதற்கான காரணம் என்ன? அங்கு என்ன நடக்கிறது? என்பது புரியாத புதிராகவே உள்ளது. அணு உலை தொடர்பான எந்த ஒரு அடிப்படை தகவலும் மக்களிடம் சென்று சேரவில்லை. இந்த ஆலை இயக்கப்பட்டால் நிச்சயம் பேரழிவு உறுதி. இது அணுக்கதிர் வீச்சு விவகாரம். இதில் நாம் மீளவும் முடியாது, எழவும் முடியாது. உதவும் எண்ணம் கூட யாருக்கும் வராது.

எனவே அணு ஆலை நிரந்தரமாக மூடப்படவேண்டும். இதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களை சந்தித்து விரைவில் பேசவுள்ளேன். சமூக நலனுக்கான இந்த போராட்டத்தில் மக்களும் பங்கெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response