தமிழ்நாட்டுக்கு பாஜக செய்யும் வஞ்சகங்கள் – மு.க.ஸடாலின் பட்டியல்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் நேற்று கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தொண்டர்களை சந்தித்தார். அங்கு அவர் 3 மணி நேரம் நின்று கொண்டே தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றார்.

வாழ்த்து தெரிவித்த தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரக்கன்றுகளை வழங்கினார். மேலும் அவருக்கு பிரதமர் மோடி, அமித்ஷா, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள், மாநில தலைவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து சென்னை நந்தனம் ஓய்எம்சிஏ மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்கினார். திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு வரவேற்றார்.

பொதுக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், செந்தில்பாலாஜி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

விழாவில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது…….

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் எனக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள். நான் தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல. இந்த மைதானத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை திரண்டிருக்கும் உங்களையும் சேர்த்துத்தான். திராவிட முன்னேற்றக் கழகமே தங்களது உயிர் என்று தாய் தமிழ்நாட்டில் 8 திக்கிலும் கழகத்தை காத்து நிற்கின்ற கோடிக்கணக்கான உடன்பிறப்புகளையும் சேர்த்துதான் சொல்கிறேன். நான் என்பது உங்களில் ஒருவன். ஸ்டாலின் என்ற பெயருக்குள் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் உயிர்கள் அடங்கி இருக்கிறது.

என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்ற ஒற்றை வார்த்தையில் நம்மை இணைத்தார் நம்முடைய உயிர்நிகர் தலைவர் கலைஞர். அவருக்கு நான் மட்டுமா பிள்ளை, நீங்கள் அனைவரும் அவருடைய பிள்ளைகள்தான்.

இந்தத்தருணத்தில் நான் கடந்துவந்த பாதையை சற்றே திரும்பிப்பார்க்கிறேன். 14 வயதில்கோபாலபுரத்தில் இளைஞர் திமுகவை ஆரம்பித்து மக்கள் பணியாற்ற தொடங்கிய நான் தேர்தல் பரப்புரைகளில், பொதுக்கூட்ட மேடைகளில் கழக்க்கொள்கைகளை முழங்கினேன். நாடக மேடைகளில் கனல் தெரிக்கும் வசனங்கள் மூலமாகவே கழகத்தின் வெற்றிக்காக உழைத்தேன். அதனால் அவசர நிலை காலத்தில் அரசியல் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்தேன். ஓராண்டு காலம் சிறைக்குள் அடைக்கப்பட்டேன். திருமணமாகி 5 மாதத்தில் சிறைக்குப் போனேன்.

பொதுவாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும், எல்லாமும் இருக்கும் என்று சொல்லி வசந்தமாளிகைக்கு அனுப்பி வைப்பதுபோல சிறைச்சாலைக்கு என்னை அனுப்பி வைத்தார் கலைஞர். அதுதான் அரசியலில் என்னுடைய பாசறையாக அமைந்தது. சிறைச்சாலையை தவச்சாலையாக மாற்றி நான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக வாழ்நாள் முழுவதும் உழைக்க உறுதியெடுத்துக் கொண்டேன்.

இந்த 55 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டில் என்னுடைய கால்படாத கிராமம் இல்லை, நகரம் இல்லை, மாநகரம் இல்லை என்கின்ற அளவுக்கு தொடர்ந்து பயணங்களை நான் மேற்கொண்டேன். மேடு பள்ளம், வெயில் மழை, இரவு பகல் என கால நேரம் பார்க்காமல் தமிழ்நாட்டு மக்களுக்கு உழைப்பது ஒன்றே என்று பணியாற்றிய

எனக்கு 70 வயது ஆகிவிட்டது என்பதை என்னாலே நம்ம முடியவில்லை. நாளை வழக்கம்போல் என்னுடைய பணிகளைத் தொடங்கிவிடுவேன். எனக்கு 70 வயது என்று சொல்கிறபோது சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். ஏன், கடந்த ஆண்டு பிறந்த நாள் விழாவுக்கு நமது அருமை சகோதரர் ராகுல் காந்தி வந்திருந்தபோதுகூட நகைச்சுவையோடு குறிப்பிட்டு சொன்னார். ஸ்டாலின் பிறந்தநாள் விழாவுக்கு நான் போகிறேன் என்று எனது தாயார் சோனியா காந்தியிடம் சொன்னேன். ஸ்டாலினுக்கு என்ன வயது இருக்கும் என நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். தெரியாது என்றார். அவருக்கு வயது 69 ஆகப்போகிறது என்றேன். அதற்கு வாய்ப்பே இல்லை என்றார் அவர். பின்னர் கூகுளில் தேடி பார்த்த பிறகுதான் நம்பினார் என்றார்.

பொதுவாக வயது என்பது மனதைப் பொறுத்தது. இளமை என்பது முகத்தில் இல்லை, மனதில்தான் இருக்கிறது. உங்கள் மனதில் கொள்கை உறுதியும், அந்தக்கொள்கையை வென்றெடுப்பதற்கான இலட்சியத்திற்காகவும், அந்த இலட்சியத்திற்காக உழைப்பதும் உங்களது அன்றாட பணியாக இருக்குமேயானால் உங்களுக்கு வயதாவது இல்லை. இலட்சியவாதிகளுக்கு என்றும் வயதாவதில்லை. நம்முடைய இலட்சியத்தை வென்றடைவதற்கு உடன்பிறப்புகளாகிய நீங்கள் என்னோடு அணிவகுத்து வரும்போது நாளுக்கு நாள் நான் இளமையாகி விடுகிறேன். துடிப்புமிக்க இளைஞனாகி விடுகிறேன்.

என்னுடைய 70 ஆவது பிறந்தநாளில் உங்களையெல்லாம் நம்பி உங்கள் முன் ஒரு உறுதிமொழி எடுக்கிறேன். அண்ணா, கலைஞர் கட்டிக்காத்த கழகத்தை நிரந்தரமாக ஆட்சி பொறுப்பில் வைத்திருப்பேன். இது ஏதோ நான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல, 30 பேர் அமைச்சர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. இந்த இயக்கம் அதற்காக தோற்றுவிக்கப்பட்டதல்ல. பாராண்ட தமிழகம் இடையிலே ஏற்பட்ட பல்வேறு பண்பாட்டு படையெடுப்புக்களால் அடிமைபட்டு கிடந்ததை மீட்க, 100 ஆண்டுகளுக்கு முன்னுள்ள தமிழகத்தைக் காக்கக்கூடிய கடமை நமக்குத்தான் இருக்கிறது. திமுக

அரசியல் நெறிமுறைகளின்படி தமிழ்நாட்டை கல்வி, சமூகம், பொருளாதாரத்தில் முன்னேறி காட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இந்த இரண்டும்தான் நம்முடைய இரு இலட்சிய கண்கள். இதற்காகத்தான் திமுக நிரந்தரமாக ஆட்சியில் இருக்க வேண்டும் என்று சொல்கிறோம்.

தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை வழங்கினோம். அதில் 85 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. மீதமுள்ளவை இன்னும் ஓராண்டுக்குள் நிறைவேற்றப்படும். இந்தியாவில் மிக மிக பழமையான அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கு வந்திருக்கக் கூடிய மல்லிகார்ஜூன கார்கே, என்னை வாழ்த்தியது எனக்குப பெருமை. காஷ்மீரத்து சிங்கம் ஷேக் அப்துல்லாவின் மகன் பரூக் அப்துல்லா வாழ்த்தியிருக்கிறார். இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத கோலோச்சிய முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் என்னை வாழ்த்தியிருக்கிறார்.

லல்லு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் இங்கு வந்திருப்பது எனக்கு மிக மிக மகிழ்ச்சி. எனக்கு சீனியர்களும், ஜூனியர்களும் என்னை வாழ்த்த வந்திருக்கிறார்கள்.

இது எனது பிறந்த நாள் பொதுக் கூட்ட மேடை மட்டுமல்லாமல் இந்தியாவின் புதிய அரசியலுக்கான தொடக்க விழா மேடையாக அமைந்துள்ளது. இதுதான் எனக்கு மகிழ்ச்சி தருகிறது. மல்லிகார்ஜூன கார்கே எனக்கு பிறந்த நாள் பரிசு ஒன்றைத்தந்துள்ளார். அதாவது, ராய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 80வது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தான் அந்த பரிசு. கடந்த 3 நாட்களுக்கு முன்பே அதை எனக்கு தெரிவித்திருந்தார். ஆக்கப்பூர்வமான செயல் திட்டத்தின் அடிப்படையில், ஒருமித்த சிந்தனை கொண்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட தயார். காங்கிரஸ் கட்சியின் தீர்மானம் தான் எனக்கு கிடைத்த சிறந்த பிறந்த நாள் பரிசாக்க் கருதுகிறேன்.

இன்றைய காலத்துக்கு மிக மிகத் தேவை. 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல். அதில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட, யார் ஆட்சி அமைத்து விடக் கூடாது என்பதற்கான தேர்தல். ஒன்றுபட்ட இந்தியாவை, வகுப்புவாத பாசிசத்தால் பிளவுபடுத்தி, ஒற்றைத் தன்மை கொண்ட சர்வாதிகார ஏதேச்சிகார நாடாக மாற்ற நினைக்கக் கூடிய பாஜகவை அரசியல் ரீதியாக வீழ்த்தியாக வேண்டும்.

பாஜகவை எதிர்க்க அனைத்துக்கட்சிகளும் ஒற்றை இலக்காக திட்டமிட்டு ஒன்று சேர வேண்டும். அந்த ஒற்றுமை உணர்வு வந்து விட்டாலே வெற்றி பெற்று விடலாம் என்று சொல்லிவிடலாம். மாநிலங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாட்டை வைத்து தேசிய அரசியல் தீர்மானித்தால் இழப்பு நமக்குத்தான் என்பதை அனைத்துக்கட்சிகளும் உணர வேண்டும். காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளுக்கும் சேர்த்தே நான் சொல்லுகிறேன்.

தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டு காலமாக நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு இந்த ஒற்றுமை என்ற அந்த அடிப்படை தான். இதை நான் 2021ம் ஆண்டு நடந்த சேலம் பொதுக்கூட்டத்தில் அறிவித்த போது ராகுல்காந்தியை வைத்து கொண்டு நான் இதை சொன்னேன். தமிழ்நாட்டை போன்ற ஒற்றுமையான கூட்டணியை அகில இந்திய அளவில் அமையுங்கள் என்று ெசான்னேன். அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கக்கூடிய வேறுபாடுகளை மறந்து, விட்டு கொடுத்து பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர வேண்டும். அதேநேரத்தில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் கூட்டணி என்று சிலர் சொல்லக் கூடிய வாதங்களையும் நாம் நிராகரிக்க வேண்டும். அது கரை சேராது.

தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்துக் கொள்கிறோம் என்று சொல்வதும் நடைமுறைக்கு சரியாக வராது. அரசியல் கட்சிகள் தங்களது வேற்றுமைகளை மறந்து ஒன்றாக நிற்க வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோசமான பாஜகவை நாம் தோற்கடிக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற இந்தக்கணக்கீட்டைப் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்து விட்டு, 4 ஆண்டுகளுக்கு முன்னால் அடிக்கல் நாட்டிவிட்டு இன்று வரை ஒரு செங்கலுக்கு மேல் வைக்காமல் தமிழ்நாட்டை கேவலப்படுத்தி ெகாண்டிருக்கிறது ஒன்றிய பாஜ அரசு. மொத்தமே ரூ.12 கோடி மட்டுமே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கியிருக்கிறார்கள். இது 8 கோடி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் காரியம் அல்லவா.

8 கோடி மக்களின் பிரதிநிதிகளால் தமிழ்நாட்டின் சட்ட மன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஒன்றிய அரசு நாட்களை கடத்த முடியுமானால், தனிப்பட்ட ஸ்டாலினை அவமானப்படுத்துவதாக தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சமஸ்கிருதத்துக்கு கோடி கோடியாய் பணம் ஒதுக்குவாய், சங்க தமிழுக்கு வெறுங்கையை நீட்டுவாய் என்றால், அதனால் அவமானப்படுத்தப்படுவது யார்? திருவள்ளுவரும், இளங்கோ அடிகளும் என்பதை உணர்ந்து தமிழ்நாட்டு மக்கள் கொந்தளித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இவையெல்லாம் அரசியல் கொள்கைகள். ஆன்லைன் ரம்மியை தடை செய்யச் சட்டம் ஒன்றை கொண்டு வந்து நிறைவேற்றி அனுப்பினோம். அதற்கு கூட இங்கே கவர்னராக இருப்பவர் ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். மகாபாரதத்தில் சூதாட்டம் இருக்கிறது என்று நினைத்து அதை தடை செய்ய மறுக்கிறார்களா? பாஜக அல்லாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில்லை. முறையாக நிதிகளை வழங்குவதில்லை. ஜிஎஸ்டிக்கு பிறகு நிதி உரிமைகள் மாநிலங்களுக்கு இல்லவே இல்லை. இழப்பீடுகளை உரிய காலத்தில் தருவதும் கிடையாது. தமிழ்நாட்டுக்கு எந்த பெரிய திட்டங்களும் கிடையாது. இப்படி எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களோடு நிர்வாக யுத்தம் நடத்தி கொண்டிருக்கிறது பாஜக. இவர்களின் நீண்ட நாள் திட்டங்களைப் புரிந்து கொண்டு அதனுடன் கொள்கைகளை தொலைத்துக் கொண்டிருக்கிறோம் நாம். அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு தான் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் களம்.

அந்தக்களத்தை நோக்கிய பயணத்துக்கு போர் வியூகங்கள் வகுக்கக் கூடிய பாசறைக் கூட்டமாக எனது பிறந்த நாள் பொதுக்கூட்டம் அமைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வருகை தந்துள்ள அகில இந்திய தலைவர்கள், இந்தத்தகவல்களை டெல்லிக்கு எடுத்து சொல்லுங்கள். இந்திய துணைக் கண்டம் முழுமைக்கும் எடுத்து சொல்லுங்கள். ஒற்றுமையை வலியுறுத்துங்கள். வெற்றிக்கு அடித்தளம் இடுங்கள். இப்போதே விதைப்போம். அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் அகில இந்திய அரசியலுக்கு அறுவடை காலமாக அமையட்டும். நிறைவாக, திமுக உடன்பிறப்புகளுக்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தொண்டர்கள் அனைவருக்கும் ஒரு வரலாற்று கடமை இருக்கிறது. புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி முழுமையான வெற்றியைப் பெற்றாக வேண்டும்.

கலைஞர் ஆண்ட ஆட்சி காலத்தில், 2004ம் ஆண்டு 40க்கு 40 வெற்றி பெற்றோம். கடந்த தேர்தலில் ஒரே ஒரு தொகுதியை இழந்தோம். அந்த ஒன்றுடன் சேர்த்து 40 தொகுதியையும் நமது அணி மீண்டும் கைப்பற்றியாக வேண்டும். அதற்காக இன்று முதல் திமுக உடன்பிறப்புகள் அனைவரும் உழைத்திட வேண்டும். அது தான் நீங்கள் எனக்கு தரக்கூடிய பிறந்த நாள் பரிசாக இருக்கும். களம் நமக்காக காத்திருக்கிறது. 40ம் நமதே நாடும் நமதே.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response