தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிக்கல் – கி.வீரமணி எச்சரிக்கை

கிருஷ்ணகிரியில் திராவிடர் கழகம் சார்பில் கட்டபட்டு வரும் பெரியார் படிப்பகம் கட்டுமானப் பணிகளை, தி.க. தலைவர் கி.வீரமணி இன்று (18 ஆம் தேதி) பார்வையிட்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது…..

குற்ற நடவடிக்கைகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பது அரசின் கடமையாகும். தமிழக முதல்வர் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்து, மக்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார். குறிப்பாக காவல் நிலையங்களில் ஆய்வுகள் செய்த ஒரே முதல்வர், இவர் தான். முதல்வர், யார் தவறு செய்தாலும், தயவு தாட்சண்யமின்றி, அவரது கட்சியினர் தவறு செய்தாலும் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கிறார்

இவ்வாறான சூழ்நிலையில், 2 நபர்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட பிரச்சினைகளை சாதி, மதம், அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது. அவ்வாறு செய்தால், அது பொது நலத்திற்கு உகந்ததல்ல. பாஜகவிற்கு சரக்கு கிடையாது. அவர்கள் எங்கவாது, யாராவது தும்ம மாட்டார்களா, இரும மாட்டார்களா என காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் குறைந்த சம்பளத்திற்கும், அதிக நேரம் வேலை செய்வார்கள் என்பதற்காக இங்கு வேலைக்கு அதிகளவில் அமர்த்துகின்றனர். அரசு வெளி மாநிலங்களில் இருந்து வேலைக்கு வருபவர்கள் குறித்து பதிவுகள் செய்வதோடு, அதனை ஒழுங்குப்படுத்தி, கண்காணிக்க வேண்டும். இல்லாவிட்டால், கொள்ளை, கொலை சம்பவங்கள் அதிகரித்து சட்டம் – ஒழங்கு பிரச்சனை ஏற்படும்.

குறிப்பாக, வெளி மாநிலங்களில் இருந்து இங்கு வேலைக்கு வருபவர்களால்தான் குற்றச்செயல்கள் நடக்கிறது. மேலும், அவர்களை வேலைக்காக அழைத்து வருபவர்கள் இங்கு கூலிப்படைகளாக மாற்றி குற்றச்செயல்களில் ஈடுபட வைக்கின்றனர். எனவே, காவல் துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு, ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்து விடுவோம் என தேர்தல் காயச்சல் வந்து விட்டதால், அவர் நிலைகுலைந்து தரம் தாழ்ந்து பேசி வருகிறார். இதனால் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு நாளுக்கு நாள் பிரகாசமாக இருக்கிறது. ஈரோடு தேர்தல் முடிந்தால் சில கட்சிகள் காணாமல் போய்விடும்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response