பொம்மை நாயகி – திரைப்பட விமர்சனம்

நடிகர் யோகி பாபு எத்தனையோ திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தாலும் அவரிடம் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படங்கள் ஒன்றிரண்டு தான் வந்துள்ளன. அந்த வகையில் வெளிவந்துள்ள திரைப்படம் ஷான் இயக்கியுள்ள பொம்மை நாயகி. மகளுக்காகப் போராடும் தந்தையின் கதையே பொம்மை நாயகி.

கடலூரில் டீக்கடையில் வேலை பார்த்து வருபவர் வேலு. அவருக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை. பெயர் பொம்மை நாயகி. 9வயது சிறுமியான பொம்மை நாயகி அதே ஊரைச் சேர்ந்த இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார். ஊர்க்காரர்கள் சமாதான முயற்சியில் ஈடுபட சமூக ஆர்வலர்கள் சிலரால் நீதிமன்றத்தை நாடுகிறார். குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைக்கிறது.

ஆனால் அதையும் மீறி யோகிபாவுக்கு பிரச்சினை வருகிறது. வேலு அந்த பிரச்சினையில் இருந்து மீண்டாரா? பிரச்சினையில் இருந்து விடுபட வேலு எடுத்த முடிவு என்ன என்பதே பொம்மை நாயகி.

வேலுவாக யோகி பாபு, தன்னால் கனமான பாத்திரங்களைத் தாங்க முடியும் என்பதை இப்படத்திலும் நிரூபித்துள்ளார். படம் முழுவதும் எங்குமே அவர் சிரிக்கவில்லை. ஒரு பெண் குழந்தையின் பாசமுள்ள தந்தையை நம் கண்முன் நிறுத்துகிறார். சீரியஸான கதை என்பதால் எல்லா இடங்களிலும் அழுது வடியாமல் இருப்பது நன்று.

யோகி பாபுவின் மனைவியாக சுபத்ரா. கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார். மகளாக நடித்துள்ள சிறுமி ஸ்ரீமதி அருமையான நடிப்பை கொடுத்துள்ளார். யோகிபாபுவுக்கும் இவருக்குமான பிணைப்பு திரையில் இரசிக்க வைக்கிறது.

அப்பாவாக ஜிஎம்.குமார், அண்ணனாக அருள்தாஸ், நண்பராக ஜெயச்சந்திரன், ராக்ஸ்டார் ரமணியம்மாள் என அனைவரும் தங்களது கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

நீதிமன்றக்காட்சிகள் பல படங்களில் பார்த்த சாயலில் இருந்தாலும் யதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன. நீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தரவும் முடியுமே தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு தர முடியாது என்ற கசப்பான உண்மையை உணர வைத்துள்ளார் இயக்குநர்.

சட்டத்தில் உள்ள ஓட்டை யாருக்கு எல்லாம் சாதகமான இருக்கிறது என்பதையும் சொல்லியுள்ளார். படத்தில் வரும் வசனங்கள் கள யதார்த்தத்தை நமக்கு உணர்த்துகின்றன.

பொம்மை நாயகினு சாமி பேர வெச்சுட்டு ஏன் தாத்தா என்னை கோயிலுக்குக் கூட்டிட்டு போக மாட்டேங்குற, தப்பு செஞ்சவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான் பாதிக்கப்பட்டவன், போற உயிரு போராடியே போகட்டும் சார் போன்ற வசனங்கள் அருமை.

உயர் சாதியினர் தப்பு செய்தால் சொந்தமும் சட்டமும் அவர்கள் பக்கமே இருக்கும் என்பதையும் இயக்குநர் பதிவு செய்துள்ளார்.

பா.இரஞ்சித் தயாரிப்பாளர் என்றாலே நம்பி திரையரங்குகளுக்கு போகலாம் என்பதை பொம்மை நாயகியும் உறுதி செய்துள்ளது.

Leave a Response