முதலியார் சமூக வாக்குகளைப் பெற செய்த முயற்சி தோல்வி – எடப்பாடி அணி அதிர்ச்சி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

அதிமுகவில் உள்ள இரண்டு அணிகளும் (ஓபிஎஸ் – இபிஎஸ்) போட்டி போட்டுக் கொண்டு கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகின்றனர். சிறிய கட்சியாக இருந்தாலும் அவர்களது வீட்டுக்கே சென்று சந்தித்து வருகிறார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலியார் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் 15 விழுக்காடு பேர் உள்ளனர்.இதனால் அந்தச் சமூகத்தைச் சார்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்தால் அதிக வாக்குகளைப் பெறலாம் என ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், முதலியார் சமூக வாக்குகளைப் பெறுவதற்காக அந்தச் சமூகத்தைச் சார்ந்த ஏ.சி.சண்முகத்தின் ஆதரவைப் பெற எடப்பாடி அணி முடிவு செய்தது. அதற்காக அவரைச் சந்திக்க, சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று மாலை அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் சென்றனர்.

அப்போது, இடைத்தேர்தலில் புதிய நீதி கட்சி ஆதரவை அதிமுகவுக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்கள் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏ.சி.சண்முகம், 2014 ஆம் ஆண்டு முதல் பாஜக கூட்டணியில் இருக்கிறேன். அப்போது நடந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சியின் சின்னத்தில்தான் போட்டியிட்டேன். இதனால் என்னுடைய ஆதரவு பாஜகவுக்குத்தான். அக்கட்சி எடுக்கும் முடிவுதான் என்னுடைய முடிவும் என்று தெரிவித்தார்.

ஏ.சி.சண்முகத்தின் இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி அணியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Leave a Response