எடப்பாடிக்கு எதிராக முதலியார் சமூகத்தை நிறுத்தும் ஓபிஎஸ் – ஈரோடு பரபரப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா சனவரி 4,2023 அன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

இதைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரசு வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

அதே நேரத்தில் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் இடைத்தேர்தலில் தனித்தனியாகக் களம் இறங்க முடிவு செய்துள்ளனர். இரு தரப்பும் பாஜக தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரை அவரவர் அலுவலகத்தில் சந்தித்து இடைத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அதில் ஒருபடி மேலே சென்ற ஓபிஎஸ்,இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் நாங்கள் ஆதரிக்கத் தயார் என்ரு சொல்லியிருக்கிறார்.

இதனால், இடைத்தேர்தலில் தாங்கள் போட்டியிடுவதா? ஓபிஎஸ், இபிஎஸ்சில் யாருக்கு ஆதரவு தருவது? என்று முடிவு எடுக்கத் தெரியாமல் பாஜக திணறி வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் ஓபிஎஸ் நேற்று காலை திடீரென குஜராத் புறப்பட்டுச் சென்றார். அங்கு குஜராத் தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழாவில் அவர் கலந்து கொண்டார். இந்த விழாவில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவை முடித்து விட்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆதரவு கோரி பாஜக தலைவர்கள் மற்றும் மோடிக்கு நெருக்கமான அதானி உள்ளிட்ட தொழில் அதிபர்களை அவர் சந்தித்து பேசியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, இடைத்தேர்தலில் எனக்கு ஆதரவு கொடுங்கள்.இல்லாவிட்டால் பாஜக நிற்கட்டும். அதற்கு ஆதரவை அளிப்பதாக அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இன்று மதியம் 2 மணிக்கு ஓபிஎஸ் சென்னை திரும்புகிறார். இன்று மாலை ஓபிஎஸ் அணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் வேட்பாளர் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை 15 விழுக்காடு முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்களும், 10 விழுக்காடு கவுண்டர்கள், 15 விழுக்காடு அருந்ததியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இவர்களில், 10 விழுக்காடு பேர் மட்டும் எடப்பாடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால், இந்த 10 விழுக்காட்டையும், இரட்ைட இலை சின்னத்தையும், பணத்தையும் நம்பித் தான் எடப்பாடி தேர்தலில் நிற்கிறார். இதனால், கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை நிறுத்த ஏற்பாடு செய்துள்ளார்.

அதே நேரத்தில் ஓபிஎஸ் தரப்பில் 15 விழுக்காடு உள்ள முதலியார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்த முடிவு செய்துள்ளனர். முதலியார் சங்கத்தைச் சேர்ந்த பொறுப்பாளர் ஒருவர் ஓபிஎஸ் அணியில் உள்ளார். அவரை நிறுத்தினால் எடப்பாடியை விட அதிக ஓட்டுக்களை வாங்கலாம் என்று நினைக்கின்றனர்.

இது சம்பந்தமாக இன்று நடைபெறும் மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் வேட்பாளரைத் தேர்வு செய்து அறிவிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

ஓபிஎஸ்ஸின் இந்த நடவடிக்கை எடப்பாடி அணிக்குக் கடும் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.ஏனெனில் ஒவ்வொரு தேர்தலின் போதும் தங்கள் சமூகம் ஏமாற்றப்படுவதாகக் கொதிப்பில் இருக்கும் முதலியார் சமூகத்தை ஓபிஎஸ் முன்னிறுத்தினால், கொங்கு வட்டாரம் என் கோட்டை என்று சொல்லும் எடப்பாடியின் சொல்லுக்கு மாறாக முதலியார் சமூகத்தின் ஆதரவோடு இரண்டாவது இடத்தை ஓபிஎஸ் பிடித்துவிடுவார் என்று சொல்கிறார்கள்.
இதனால், அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.

Leave a Response