2022- 23 ஆம் ஆண்டுக்கான 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் – முழுவிவரம்

தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இரண்டு ஆண்டுகள் நீடித்த தொற்று காரணமாக பொதுத் தேர்வுகள் நடத்துவது இயலாமல் போனது.

இருப்பினும் கடந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டு பள்ளிகள் இந்த ஆண்டு திறக்கப்பட்டன.

கொரோனா தொற்று பரவியதை அடுத்து பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்காக பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பாடத்திட்டம் குறைக்காமல் முழு பாடத்திட்டத்தையும் நடத்த சொல்லி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நடந்து வருகின்றன. பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நடத்தப்படும் பொதுத் தேர்வுகள் குறித்த அட்டவணையை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு, பதினொன்று, பனிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் 2023 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடக்கும். இந்தத் தேர்வுகளை 27 இலட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவியர் எழுதுகின்றனர்.

பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு 2023 மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடக்கிறது. தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 7,600 பள்ளிகளைச் சேர்ந்த 8 இலட்சத்து 80 ஆயிரம் மாணவ-மாணவியர் இதில் பங்கேற்கின்றனர். இவர்களுக்காக 3,169 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பதினொன்றாம் வகுப்புக்கான தேர்வு 2023 மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடக்கும்.
இந்தத் தேர்வை 8 இலட்சத்து 50 ஆயிரம் பள்ளி மாணவ-மாணவியர் எழுதுவர். இவர்களுக்காக 3,169 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு 2023 ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடக்கிறது. தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 12 ஆயிரத்து 800 பள்ளிகளைச் சேர்ந்த 10 இலட்சம் மாணவ-மாணவியர் இத்தேர்வில் பங்கேற்கின்றனர்.

தேர்வு எழுதும் மாணவ-மாணவியருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பாகவும், பள்ளிக் கல்வித்துறையின் சார்பாகவும் எங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாணவ-மாணவியர் தேர்வுக்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும்,கவனச் சிதறல் ஏதும் இல்லாமலும், அச்சமின்றியும் தேர்வுகளை எழுத வேண்டும். முன்னதாக செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் 2 ஆவது வாரத்தில் முடியும். மதிப்பெண் தொடர்பாக பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அழுத்தம் ஏதும் கொடுக்காமல் நல்ல சூழலை உருவாக்கித் தாருங்கள். இந்தத் தேர்வில் கேள்வித்தாள் வடிவில் எந்த மாற்றமும் செய்யவில்லை. பாடத்திட்டம் முழுமையாக வைக்கப்பட்டுள்ளது. மழைக்கான விடுமுறைகளை சமன் செய்யும் வகையில் பாடங்களை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தேர்வு அட்டவணை….

பத்தாம் வகுப்பு

காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 க்கு தேர்வு முடியும்.

6.4.23 மொழிப்பாடம்
10.4.23 ஆங்கிலம்
13.4.23 கணக்கு
15.4.23 விருப்ப மொழிப்பாடம்
17.4.23 அறிவியல்
20.4.23 சமூக அறிவியல்

பனிரெண்டாம் வகுப்பு

13.3.23 மொழிப்பாடம்
15.3.23 ஆங்கிலம்
17.3.23 தொடர்பு ஆங்கிலம், இந்தியப் பண்பாடு மற்றும் நெறிமுறைகள், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, உயிரி வேதியியல், சிறப்புத்தமிழ், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், தொழில் பாடங்கள்
21.3.23 இயற்பியல், பொருளியல், கணினி தொழில் நுட்பம்
27.3.23 கணக்கு, விலங்கியல், வணிகவியல்,நுண்ணுயிரியல், தொழில் பாடங்கள்
31.3.23 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், தொழில் பாடங்கள்
3.4.23 வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்.

பதினொன்றாம் வகுப்பு

14.3.23 மொழிப்பாடம்
16.3.23 ஆங்கிலம்
20.3.23 இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்
24.3.23 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிககணிதம், தொழில் பாடங்கள்
28.3.23 வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்
30.3.23 தொடர்பு ஆங்கிலம், இந்தியப்பண்பாடு,கணினி அறிவியல், உயிரி வேதியியல்,சிறப்புதமிழ், மனையியல், அரசியல் அறிவியல்,புள்ளியியல், தொழில் பாடங்கள்
5.4.23 கணக்கு, விலங்கியல், வணிகவியல்,நுண்ணுயிரியல், தொழில் பாடங்கள்

Leave a Response