பெரியாரை வாசித்த 6 இலட்சம் மாணவர்கள் – ஒருங்கிணைத்த முனைவருக்குப் பாராட்டு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளி,கல்லூரிகளில் பயிலும் ஆறு இலட்சம் மாணவர்கள் பங்கேற்ற பெரியாரை வாசிப்போம் என்ற மாணவர் பெருந்திரள் வாசிப்பு நிகழ்வு 14.09.2022 அன்று நடைபெற்றது.

மாணவர்களிடையே அரிதாகிவிட்ட புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை மேம்படுத்தவும், பெரியாரின் கொள்கைகளை மாணவர் மனதில் விதைக்கவும் இந்த வாசிப்பு நிகழ்வு ஓர் உந்து சக்தியாக இருக்கும். ஏறத்தாழ ஆறு இலட்சம் பேர் ஒரே நேரத்தில் பெரியார் குறித்த உரையை வாசித்தது மிகப் பெரிய வரலாற்று நிகழ்வாகும் என அப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய முயற்சி, மிகவும் ஈர்க்கத் தக்கதாக உள்ளது.

பெரியார் பல்கலைக் கழகத்தில் தொடங்கிய இவ்வரிய முன்னெடுப்பு, தமிழ்நாடு முழுவதுமுள்ள பள்ளி, கல்லூரிகளில் ஆண்டுதோறும் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் நாளில் நடைபெற வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசாணை வெளியிடுவது சிறப்பாக இருக்கும்.
பெரியார் பெருந்திரள் வாசிப்பு நிகழ்ச்சி, அவருக்குச் செலுத்தும் மிகச்சிறந்த அறிவார்ந்த அஞ்சலியாகத் திகழும்.

இவ்வாறு பலராலும் பாராட்டுப் பெற்ற அந்நிகழ்வினை இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்படுத்தியவர் பெரியார் அண்ணா கலைஞர் இருக்கை தலைவர் முனைவர் இரா.சுப்பிரமணி.

இதற்காக, பல்கலைக்கழகத்தில் 17.09.2022 அன்று நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் விழாவில் சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் அவரைப் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிகு நிகழ்வினை நடத்த வாய்ப்பளித்த மாண்பமை துணைவேந்தர் அவர்களுக்கு நன்றி என்று சொல்கிறார் முனைவர் இரா.சுப்பிரமணி.

இந்நிகழ்வுக்காக முனைவர் இரா.சுப்பிரமணிக்குப் பல்வேறு அறிஞர்கள் பாராட்டுத் தெரிவித்துவருகின்றனர்.

Leave a Response