ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லுமா? – உயர்நீதிமன்றத் தீர்ப்பில் சொன்னது என்ன?

அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி அளித்த தீர்ப்பை இரத்து செய்து பிறப்பித்த உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகளின் தீர்ப்பு முழு விபரம்…..

கட்சிப் பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர் மூலம் தேர்வு என விதி உருவாக்கப்பட்டது. அதில் மாற்றம் செய்யத் தடை விதித்தும் இன்னொரு விதி உருவாக்கப்பட்டது.

25 ஆண்டுகளுக்கு முன் எம்.ஜி.ஆர். மறைவில் இதே நிலை ஏற்பட்டபோது பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அணுக முடியவில்லை என கூறி துணைப் பொதுச்செயலாளர் எஸ்.திருநாவுக்கரசு கூட்டிய பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது, அதில் பொதுக்குழுவுக்குத் தடை விதிக்கப்பட்டது.

திருநாவுக்கரசு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று நீதிமன்றம் ஏற்றுள்ளதால், எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு உகந்தது தான் என முடிவுசெய்து விசாரித்தோம்.

ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு விதிகள் திருத்தம் 2017 இல் செய்யப்பட்டது.

2021 டிசம்பர் பொதுக்குழுவில் ஒரே வாக்கு முறைப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு என திருத்தம் செய்யப்பட்டதால், அதனால் தனிப்பட்ட முறையில் செயல்பட முடியாது.

ஒப்புதல் அளிக்காததால் இரு பதவிகள் காலியாகிவிட்டதா என பிரதான வழக்கில்தான் முடிவு செய்ய முடியும்.

உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக சிவில் வழக்கு தொடர முடியாது என்று கூற முடியாது.

அடுத்த பொதுக்குழு ஜூலை 11 நடக்கும் என ஜூன் 23 இல் பொதுக்குழுவில் அறிவித்ததே நோட்டீஸ் தான். முறையான நோட்டீஸாகத்தான் கருத வேண்டும்.

பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று நடத்தப்படும் சிறப்புக் கூட்டங்களுக்கு இன்னொரு நோட்டீஸ் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை.

ஒ.பன்னீர்செல்வம் இருந்தபோதுதான் ஜூலை 11 பொதுக்குழு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டதால், தனக்குத் தெரியாது எனக் கூற முடியாது.

இருவருக்கும் மோதல் காரணமாக இணைந்து சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டுவார்கள் எனவும் எதிர்பார்க்கமுடியாது.

ஒருவருக்கொருவர் இடையே ஒத்துழைப்பு இல்லாத நிலையில், பொதுக்குழுவே கூட்டமுடியாத நிலைதான் உள்ளது.

திருநாவுக்கரசு வழக்கில் துணைப் பொதுச் செயலாளர் கூட்டிய கூட்டத்தால் தடை விதிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய வழக்கில் போட்டி பொதுக்குழுக் கூட்டாததால் அந்த வழக்கின் உத்தரவு தற்போது பொருந்தாது.

இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். இடையே பிரச்சினை நிலவுவதால், ஜூன் 23 இல் அவைத்தலைவர் அழைப்பு விடுத்த ஜூலை 11 பொதுக்குழு சட்டவிரோதம் என்று கூற முடியாது.

அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் உள்ள பொதுக்குழுவுக்குத்தான் உச்ச பட்ச அதிகாரம் உள்ளது.

இருவரும் இணைந்து கூட்ட இயலாத நிலையில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடும் நிலைக்குத் தள்ள முடியாது.

பொதுக்குழுவுக்கு தலைமை நிலையச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டதில் தவறில்லை.

பதவி காலி என்பதால் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை விட்டுவிட்டு, தலைமை நிலையச் செயலாளர் என்ற நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

அப்படி ஒரு நிலையில் இருவரும் இணைந்து தான் பொதுக்குழு செயற்குழுவைக் கூட்ட வேண்டுமென்று கூற முடியாது.எனவே ஜூலை 11 பொதுக்குழு என்ற அறிவிப்பில் தடையில்லை.

2460 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து 2539 உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

ஜூலை 11 கூட்ட வேண்டுமென்ற கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், கூட்டம் போலியானது என்று சொல்ல முடியாது.

பொதுக்குழு, செயற்குழு இருவரும் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்ற உத்தரவால் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்சி முடக்கும் நிலையிலும் உள்ளது.

இருவரும் இணைந்து எடுக்கும் முடிவுகளையும் பொதுக்குழுதான் ஒப்புதல் தரமுடியும்.

ஜூன் 23 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில், அதற்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டுமென்ற உத்தரவு பிறப்பிக்க முடியாது.இருவரும் இணைந்து தான் கூட்டங்களைக் கூட்ட வேண்டுமென்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லாதது.

ஒருங்கிணைப்பாளர் பதவி காலியானதாக இணை ஒருங்கிணைப்பாளர் கடிதம் எழுதி உள்ள நிலையில், அதே பதவியில் தொடர உத்தரவிட்டது தவறு.

இரு பதவிகள் தேர்வு செய்யப்பட்டதற்கு ஜூன் 23 பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கவில்லை, பதவிகள் காலியாகிவிட்டது போன்ற விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. அவை பிரதான வழக்கில்தான் முடிவு செய்ய முடியும்.

ஜூலை 11 இல் பொதுக்குழுவைக் கூட்ட அவைத்தலைவர் அறிவித்தது முறையானதுதான்.அதனடிப்படையில் தனி நீதிபதி தீர்ப்பு இரத்து செய்யப்படுகிறது.

Leave a Response