தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்….
திருக்குறளில் உள்ள ஆன்மிக ஞானத்தை சிதைக்கும் வகையில் ஜி.யு.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளது. ரிக் வேதத்தில் உள்ள ஆதிபகவன் என்பதையே திருக்குறளின் முதல் குறள் கூறுகிறது. ஆதிபகவன் என்பது பக்தியைக் குறிப்பிடுவதாகும். இதைச் சிதைக்கும் வகையில் ஆங்கில மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தில்லியில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் பேசியுள்ளார்.
சங்க நூல்களிலும், அதையொட்டி எழுந்த திருக்குறளிலும் சமயம் என்ற சொல்லாட்சியோ, மோட்சம் என்ற ஆன்மிகத் தத்துவத்தைக் குறிக்கும் எத்தகைய சொல்லோ அறவே இடம்பெறவில்லை. அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருளைப் பற்றியே திருக்குறள் கூறுகிறது. மோட்சத்தைக் குறிக்கும் வீடு என்ற தத்துவம் திருக்குறள் எழுந்த காலத்தில் அறவே தோன்றப் பெறவில்லை.
சமயம் என்னும் சொல்லாட்சி கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிமேகலை காப்பியத்தில்தான் முதன்முதல் இடம்பெறுகிறது. அதற்கு முன்னால் தோன்றிய பழந்தமிழ் நூல்கள் எதிலும் சமயம் என்ற சொல்லாட்சி இடம்பெறவே இல்லை.
ஜி.யு.போப் கிறித்துவ பாதிரியார் எனவே, அவர் திருக்குறளை தவறான கண்ணோட்டத்துடன் மொழிபெயர்த்துள்ளார் என்றும் ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அதே ஜி.யு.போப் அவர்கள் சைவத் திருமுறைகளில் ஒன்றான திருவாசகத்தைப் படித்து உள்ளம் உருகி அந்நூலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார் என்ற உண்மையையும் ஆளுநர் உணரவில்லை. திருக்குறளுக்கு வைதிக அடையாளத்தைச் சூட்டுவதற்கே அவர் முயற்சி செய்துள்ளார்.
ஜி.யு.போப் அவர்கள் முதன்முதலாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதன் பெருமையை உலகமறியச் செய்தார். காந்தியடிகள் உள்பட பலரும் அம்மொழிபெயர்ப்பைப் படித்து திருக்குறளின் பெருமையை உணர்ந்து போற்றினர் என்பதையும் ஆளுநர் அறிந்திருக்கவில்லை.
தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு ஆகியவற்றைக் குறித்து தனது அறியாமையை வெளிப்படுத்துவதைவிட, பேசாமல் இருப்பது நல்லது என்பதை ஆளுநர் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.