மாயத்தேவர் மரணத்தில் வெளிப்பட்ட உண்மை – அதிமுக நிலைகுறித்த விமர்சனம்

திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியில் வசித்து வந்தவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாயத்தேவர் (வயது 88). வயது மூப்பு காரணமாக இவர், வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். ஆகஸ்ட் 9 ஆம் தேதி மதியம் 12 மணி அளவில் அவருடைய உடல்நிலை மோசமானது.

இதனையடுத்து அவருடைய குடும்பத்தினர், திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்தபோது, மாரடைப்பால் மாயத்தேவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மாயத்தேவரின் உடல், சின்னாளப்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

அங்கு அவரது உடலுக்கு, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி அஞ்சலி செலுத்தினார்.

இதேபோல் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன், மாயத்தேவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.இவர் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மதியம் மறைந்த மாயத்தேவருக்கு சசிகலா அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாயத்தேவர் உடலுக்கு எடப்பாடி, நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருக்க வேண்டும் என்று கூறினார்.

இதன்பிறகு ஓ.பி.எஸ், மாயத்தேவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இரட்டை இலைச் சின்னத்தில் முதன்முறையாக வெற்றி பெற்று அச்சின்னம் இன்றுவரை அதிமுகவின் பலமாகத் திகழ முதற்காரணமாக இருந்தவர் மாயத்தேவர். அப்படிப்பட்டவர் இறந்தபோதும் தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்த வரவில்லை.

மாறாக, தேவர் சமூகத்தைச் சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன் அஞ்சலி செலுத்தினார்.

இதிலிருந்து அதிமுகவின் தற்போதைய பிரிவினைக்கு சாதி தான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது என்பது தெளிவாகிவிட்டதென அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Response